Thursday, October 14, 2010

ஆசையை துறந்தால் அமைதி உண்டு!-ராமகிருஷ்ணர்.

ஓரிடத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பருந்து ஒன்று சட்டென்று வந்து ஒரு மீனைக் கவ்விக் கொண்டு சென்றது. அதனை கண்டதும் நூற்றுக்கணக்கான காகங்கள் பருந்தைத் துரத்தின. கா… கா… என்று கத்தியவாறு அதைச் சூழ்ந்து கொண்டு அமளி, துமளி செய்தன.
பருந்து எந்தத் திசையில் பறந்தாலும் அந்தத் திசையில் காகங்கள் துரத்தின. பருந்து தெற்கில் பறந்தால் காகங்களும் தெற்கே சென்றன. வடக்கே பறந்தால் வடக்கே சென்றன. கடைசியில் என்ன செய்வது என்று பருந்து திகைத்தபோது அது கவ்வி இருந்த மீன் கீழே விழுந்தது. காகங்கள் மீன் விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தன; பருந்தை விட்டு விட்டன.
பருந்து கவலையுற்று ஒரு மரக்கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது. `இந்த மீன்தான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமா?’ என்று எண்ணிக் கொண்டது.
எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால் உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும் கூடவே இருக்கும். ஆசைகளை விட்டால், செயல்கள் உடனே நம்மில் இருந்து அகன்று விடுகின்றன. அமைதி கிடைக்கிறது.

No comments:

Post a Comment