Thursday, October 14, 2010

உயரமான அணைகள்!

தண்ணீரை தேவைக்கேற்ப சேமித்துப் பயன்படுத்த மனிதன் அணைகளைக் கட்டத்
தொடங்கினான். இன்று உலகெங்கிலும் அணைகள் உண்டு. அவற்றில் அதிக உயரமான 5 அணைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உயரத்தில் நம்பர் 1

தஜிகிஸ்தானில்தான் உலகிலேயே மிக உயரமான அணை இருக்கிறது.
வாக்ஸ் ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. `நூரக் டேம்’ என்பது இதன் பெயராகும். இது 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980ல் கட்டி முடிக்கப்பட்டது. 314 மீட்டர் உயரமுடைய இந்த அணைதான் இதுவரை உலகின் உயரமான அணையாக இருக்கிறது.
கிராண்டி டிக்ஸ்யென்ஸ் அணை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிராண்டி டிக்ஸ்யென்ஸ் அணை உலகின் 2-வது உயரமான அணை என்ற சிறப்புக்குரியது. காங்கிரீட் அதிகமாக பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்ட அணையாகவும் இது திகழுகிறது. இதன் உயரம் 285 மீட்டர். இங்கு நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு 200 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்குரி அணை

உயரமான அணைகளில் 3-வது இடத்தில் இருக்கிறது இன்குரி அணை. ஜார்ஜியா நாட்டின் இன்குரி ஆற்றில் இது கட்டப்பட்டு உள்ளது. இது 272 மீட்டர் உயரமுடையது. இந்த அணையில் உள்ள காங்கிரீட் ஆர்ச் உலகில் உயரமான ஆர்ச் என்ற சிறப்பை பெறுகிறது. இங்கும் நீர்மின்நிலையம் செயல்படுகிறது.
அழிவால் பிரசித்தி பெற்ற அணை

இத்தாலியில் உள்ள வாஜோண்ட் அணை உலகின் 4-வது உயரமான அணையாக இருக்கிறது. இது 262 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற அணைகளைவிட இதற்குரிய சிறப்பு இதன் சுவர்தான். அடித்தளத்தில் 27 மீட்டர் அகலத்திலும், உச்சியில் 3.4 மீட்டராகவும் சுவரின் தடிமன் இருக்கிறது. 1963-ம் ஆண்டு அணை வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் புவியியல் தன்மை சரிவர சோதிக்காமல் கட்டப்பட்டதால் அணையின் மேற்பகுதியின் ஒரு புறம் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் அடியோடு அழிவுக்கு உள்ளானது. அதன்பிறகு இந்த அணை மிக உறுதியாக எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் டெகிரி அணை

உலகில் 5 உயரமான அணைகளில் இந்தியாவில் உள்ள டெகிரி அணைக்கும் இடமுண்டு. இது உத்ராஞ்சல் மாநிலம் டெகிரி நகரில் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதியான பாக்ரதி ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 261 மீட்டர் (855 அடி). இந்த அணை, உலகின் உயரமான அணைகளில் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment