
கோடையில் வெயிலின் தீவிரம் அதிகரிக்கும். சுற்றுப்புறத்தின் வெப்பநிலை கூடும்பொழுது பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பல்கி பெருகும். இதனால்தான் சமைத்த உணவும், அரைத்த மாவு புளிக்க ஆரம்பிக்கின்றன.
உணவகங்களில் விற்கும் உணவுகள், பொட்டல உணவுகள், பழைய உணவுகள், நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத தண்ணீர் ஆகியவற்றை கோடையில் உட்கொள்பவர்கள் பலவித வயிற்று உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் மோர், கூழ், குளிர்பானங்கள், பழச்சாறுகள், பழங்கள், திண்பண்டங்கள் போன்ற சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் வயிறு பல பிரச்னைகளை சந்திக்கிறது.
கோடையில் சாலையோர உணவுகள், உணவகங்களில் விற்கப்படும் பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும். தேங்காய், பருப்பு, நெய், டால்டா, வெண்ணெய், மாமிச உணவுகள் போன்றவற்றால் தயாரான உணவு உண்ண தாமதம் ஏற்படும்பொழுது புளித்து, உண்பவர்களின் வயிற்றையும் கெடுத்துவிடுகிறது. அதுமட்டுமின்றி துரித உணவுகள், ஜங்க் உணவுகள் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுவதால் அவற்றிலுள்ள வேதிப்பொருட்கள் வெயிலினால் கெட்டுப்போய், செரிமானத்தன்மையை மாற்றி, என்சைம்களின் செயல்பாட்டைக் குறைத்து, கழிச்சலை உண்டுபண்ணுகின்றன. கோடையில் சமைத்த உணவை தாமதம் செய்யாமல் உடனே சாப்பிட வேண்டும். பொட்டல உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரயாணங்களின்போது வெளி உணவுகளை தவிர்த்து, பழங்களை உட்கொள்வது நல்லது.
கெட்டுப்போன உணவுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகளை நீக்கி, செரியாமை மற்றும் கழிச்சலை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை வலம்புரிக்காய். வலது பக்கம் திருகலாக இருப்பதால் வலம்புரிக்காய் என்றும், இடது பக்கம் திருகலாக இருப்பதால் இடம்புரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹெலிட்ரஸ்சோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலியாசியே குடும்பத்தைச் சார்ந்த வலம்புரிக்காயில் குயினோலோன், மலாட்டையமின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை உணவு கெடுதியால் ஏற்பட்ட வயிற்று உபாதைகளை நீக்கி கழிச்சலை தடுக்கின்றன. ஆகையால்தான் யாகம், பெரும்பாலும் சித்திரை, வைகாசி மாதங்களில் மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களில் எரிக்கப்படும் வலம்புரிக்காய் மறைமுகமாக காற்று மண்டலத்தை சுத்தம் செய்து, காற்று மற்றும் நீர் மூலம் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்து மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. இதுவே ஹோமங்களின் உண்மை நிலையாகும்.
வலம்புரிக்காயை உலர்த்தி, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராமளவு தேனுடன் குழப்பி சாப்பிட வயிற்று உபாதைகள் நீங்கும். கழிச்சல் கட்டுப்படும். வலம்புரிக்காயை ஒன்றிரண்டாக இடித்து, 500 மில்லி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 125 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட கழிச்சல் நீங்கும். வயிற்றில் தோன்றிய கடா முடா சத்தம் குறையும்.
No comments:
Post a Comment