Friday, November 5, 2010

ஆன்லைன் வர்த்தகம்

கோடிக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் உள்ளூர் விஞ்ஞானிகளும் தான் இந்த நாட்டை இதுவரை வளர்த்தெடுத்தார்கள். காலம் காலமாக அவர்கள் அரும்பாடு பட்டு எட்டிய வளர்ச்சியை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரால் நாசமாக்கி விட்டார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாடு முன்னேறியிருக்கிறது. அடையாறில் ஐ.டி.காரிடர் சாலை என்றால் சென்னையைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள் ஏக போக முதலாளிகள். போர்ட், ஹ¨ண்டாய்,பி.எம்.டபிள்யூ, செயிண்ட் கோபெய்ன் என கார் தொழிற்சாலைகளும் கண்ணாடி தொழிற்சாலைகளுமாய் ஒட்டு மொத்த இந்தியாவும் ‘முன்னேறுவது’ போல தமிழ்நாடும் ‘முன்னேறுகிறது’. ஆனால் இந்த மண்ணின் பூர்வ குடிகள் வாழ வழியில்லாது துரத்தப்படுகிறார்கள் தங்களின் சொந்த மண்ணில் இருந்து.

கடலோரங்களில் இருந்து காட்டுக்கும், கிராமங்களில் இருந்தும் நகரங்களுக்கும் துரத்தப்படுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டு வேலை தேடி நகரங்களுக்கு வருகிறார்கள் அவர்கள். ஆனால் நகரமோ இது உனக்கான இடமில்லை எனச் சொல்லி துரத்த, போக்கிடம் இல்லாமல் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் விவசாயிகள். இதுதான் இன்றைய வளரும் இந்தியாவில் ஏழைகளின் நிலை. அவர்கள் யாரோ ஒருவர் அல்ல. அவர்கள் உழைத்துத்தான் நாம் நகரங்களில் அமர்ந்து உண்டு உறங்கினோம். இன்று அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது அதை ஒரு செய்தியாக மட்டுமே கேட்டு நாம் கடந்து போகிறோம்.பன்னாட்டு முதலாளிகளால் வறுமையோடு சேர்த்து விவசாயிகளுக்கு பரிசளிக்கப்படும் இந்த தற்கொலைக் கயிறுகள் நாளை நம் அனைவருக்கும் வழங்கப்படும் என்பதை சூழல்கள் உணர்த்துகின்றன.

நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இந்த பொருளாதாரக் கொள்கை தோல்வி எனத் தெரிந்த பிறகும் மன்மோகன் சிங்குகளும் ப.சிதம்பரங்களும் அத்வானிகளும் இந்தக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்றால் இவர்கள் வேறு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசம் இந்தியாவைச் சூழ்ந்தபோது நாம் எதிர்க்க வேண்டிய முதல் விஷயம் இந்து மதவெறிதான் என்று நினைத்திருந்தோம்.ஆனால் இன்று வாழவே முடியாத பல்வேறு வடிவங்களில் நாட்டை உலகமயக் கொள்கை சூறையாடும் பொழுது எதை எதிர்ப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்ற விவாதம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் சூழலும் கவனமும் வேறு திசையில் திரும்புகிறது என்பதை அவதானிக்கும் பாசிஸ்டுகளோ இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மத மக்களையும் பொதுவாக நடத்தும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என அறைகூவுகிறார்கள். இரண்டு எதிரிகள் இரண்டு கயிறோடு வருகிறார்கள் இருவரையுமே எதிர்க்க வேண்டியதுதான் நமது கடமை.

இம்மாதிரியான சூழலில்தான் மொத்த சராசரி தமிழனின் வாழ்க்கையும் பாழாக்கப்படுகிறது. அதே வழியில் லட்சக்கணக்கான சிறுவியாபாரிகளும் அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ரிலையன்ஸ் 60க்கும் மேற்பட்ட கடைகளை திறந்திருக்கும் சூழலில் சில்லறை வணிகம் மிக வேகமாக அழிந்து வருகிறது. தலையில் கீரைக் கட்டை சுமந்து வந்து தினந்தோறும் சில்லறைக் காசுகளுக்கு விற்பனை செய்து வந்த ஆயாவை நாம் நமது தெருவிலிருந்து துரத்தி விட்டு ரிலையன்ஸ் கடைகளை தேடிப்போகும் சூழல் நேர்ந்திருக்கிறது. அந்தவகையில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளை அனுமதிப்பதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார். சமூக விழிப்புணர்வு இதழுக்காக அவரைச் சந்தித்தோம். பல மணி நேரம் நீண்ட நேர்காணலில் இருந்து சில பகுதிகள் வாசகர்களுக்கு....

உலகம் முழுக்க பல நாடுகளும் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை பண வீக்கம். உணவுப் பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. இந்தியர்களும் சைனாக்காரர்களும் அதிமாக அரிசி சாப்பிடுவதால்தான் எங்களுக்க்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றிருக்கிறார் புஷ். இம்மாதிரி ஏற்படும் பண வீக்கம் சிறு வியாபாரிகளை பாதிக்குமா?
உலகம் முழுக்க பணவீக்கம் உள்ளூரிலும் பண வீக்கம் என்றால் அது உலகமயக் கொள்கையின் தோல்விதான். அமெரிக்காவில் பணவீக்கம். அதனால் இந்தியா தடுமாறுகிறது என்பதெல்லாம் ‘தென்னை மரத்தில் தேள் கொட்டி பனைமரத்தில் நெறிக்கட்டுகிறது’ என்பது மாதிரிதான். மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் எல்லா வளமும் ஏராளமாக இருக்கிறது. தாராளமாக விவசாய நிலங்களும் இருக்கிறது. நாம் உணவுப் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த காலமும் ஒன்றிருந்தது. இன்று எந்தப் பொருளாக இருந்தாலும் இறக்குமதி செய்யும் கேவலமான நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்றது புதிய பொருளாதாரக் கொள்கைதான்.

நமக்குத் தேவையான பொருட்களை நாமே உறபத்தி செய்வதும் தேவைக்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து வேண்டிய பொருட்களை இறக்குமதி செய்வதும் தான் ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் கொள்கையாக இருக்க முடியும். இதைச் செய்ய உலக வர்த்தக ஒப்பந்தமோ, உலகமயமோ அவசியமில்லை. அமெரிக்காவின் நலனைப் பேணும் நோக்கில்தான் இந்தியாவின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப பாசனப் பரப்பையும் விவசாயத்தையும் அதிகரிக்காமல் நாளுக்கு நாள் விவசாய நிலங்களை சுருக்கிக் கொண்டு வருகிறார்கள். மரபான நமது விவசாயத்தை நசுக்கி மரபணு மாற்ற விதைகளை பயிரிடச் சொல்வதன் மூலம் இவர்கள் சொந்த மக்களைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

சொந்த மக்கள் பட்டினியால் சாகிறார்கள். விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரிக்கிறது. இப்போது இவர்களது கொள்கை எல்லாம் எப்படியாவது அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. பொதுவாக ஏற்றுமதி என்பது என்ன? எது நமது தேவைக்கு அதிகமாக இருக்கிறதோ அதை இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். எது நமக்கு தட்டுப்பாடாக இருக்கிறதோ அதை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் எதெல்லாம் இங்கு இருக்கிறதோ அதை எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தேவைக்கு எதெல்லாம் உள்நாட்டில் தட்டுப்படாக இருக்கிறதோ அதை எல்லாம் இங்கிருந்து ஏற்றுமதி செய்து கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துகிற ஒரு அரசாகத்தான் மத்திய அரசு இன்றைக்கு இருக்கிறது.

உதாரணத்துக்கு சமையல் எண்ணெய்க்கு நமது நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமையல் எண்ணெயில் தன்னிறைவோடு இருந்த காலம் உண்டு. எப்படி தன்னிறைவு இருந்தது? ஒரு கிராமத்தில் எண்ணெய் தயாரிக்கிற கல் செக்கு இருக்கும். அந்த செக்கில் தயாரிக்கப்படுகிற எண்ணெய் அந்தக் கிராமத்தின் தேவையையே பூர்த்தி செய்து விடும். கிராமங்களில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் மூலம்தான் நாம் தன்னிறைவு அடைந்திருந்தோம். ஆனால் வளர்ந்த நாடுகள் அந்த எண்ணெய்யை சுத்தமில்லாதது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லி அந்த கிராமத் தொழிலையே அழித்து விட்டார்கள். காரணம் அமெரிக்காவில் விளைகிற சோயா பீன்ஸ் எண்ணெய்யும், இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பாமாயிலையும் இறக்குமதி செய்வதற்காக அதை பலியிட்டார்கள்.

முதலில் உள்ளூர் தயாரிப்புக்களை அசுத்தமானது, ஆரோக்கியமில்லாதது என ஒழித்துக் கட்டுவது. பின்னர் தட்டுப்பாடு என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் நமது அன்றாட வாழ்வில் கலந்திருந்த வரை நோய்கள் நம்மை விட்டு விலகி இருந்தன. ஏனென்றால் ‘உணவே மருந்து மருந்தே உணவு’ இதுதான் நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரம். உற்பத்திக் கலாச்சாரமும் அதுதான். ஆனால் அதைத்தான் இவர்கள் அசுத்தம் எனச் சொல்லி நமது பாரம்பரிய உற்பத்திகளை அழித்து அந்நிய நாட்டிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறார்கள். கூடவே இலவசமாக பல விதமான நோய்களையும் இறக்குமதி செய்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக மக்களிடம் ஏன் வியாபாரிகளிடம் கூட இல்லையே?ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன? இம்மாதிரி இணைய வழி நடக்கும் வர்த்தகத்தால் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களும் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ஆன்லைன் வர்த்தகம் என்பது ‘பியூச்சர் டிரேடிங்’ என்கிற வடிவத்தில் முன்பு இருந்தது. இதை எதற்காக கொண்டு வந்தார்கள் என்றால் விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்பதால் இதை கொண்டு வந்தார்கள். ஒரு பொருள் விளைகிறபோதே அதற்கான விலையை நிர்ணயம் செய்து விளைந்த பிறகு அந்தப் பொருளை வாங்கிக் கொள்வதுதான் பியூச்சர் டிரேடிங். அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் என்ன விலைக்கு பதிவு செய்தார்களோ அந்த விலைக்கு விளைபொருளைக் கொடுத்தாக வேண்டும். யார் பதிவு செய்தார்களோ அவர்களுக்கு அந்த பொருளின் லாபம் போய்ச் சேரும். ஏற்கனவே விவசாயிகள் எந்த மொத்த வியாபாரிகளுக்கு தங்களின் விளைபொருட்களை கொடுக்கிறார்களோ அவர்களிடம் தங்களின் விவாசாய தொழிலுக்கான முன்பணம் வாங்குவது விவாசியிகளின் வாடிக்கை.

முன்தொகை யாரிடம் வங்குகிறர்களோ அவர்களுக்குத்தான் விளைபொருட்களை விற்கவேண்டும் என்பது ஜென்டில்மேன் அக்ரிமெண்ட். இதெல்லாம் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடக்கிற வியாபாரம். அதன் அடிப்படையில்தான் பியூச்சர் டிரேடிங் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால் நாளடைவில் இது ஒரு வர்த்தகச் சூதாட்டமாய் மாறி விட்டது. ஒரு விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வாங்கப்படுகிற பொருள் பல மடங்கு கொள்ளை லாபத்துக்கு விற்கப்படுகிற அக்கிரமமான சூதாட்டம்தான் இந்த ஆன்லைன் டிரேடிங். விவசாயிகளுக்கு நன்மையாக இருக்கும் எனக் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கையை வைத்து மிக மோசமான சூதாட்டமாக இது மாறிப்போனதால் சுதந்திரத்துக்குப் பிறகு மூன்று முறை இந்த பியூச்சர் டிரேடிங் என்று சொல்லக் கூடிய இந்த ஆன்லைன் வர்த்தகத்தை இந்திய அரசு தடை செய்தது.

2003ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகம் வேறு வடிவில் கொண்டு வரப்பட்டது. அப்படி கொண்டு வரும்போது ஐந்து வகையான பொருட்களை மட்டும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்க்கலாம் என்று அரிசி, சர்க்கரை, கோதுமை, செம்பு, தங்கம் என ஐந்து வகைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அப்படி கொண்டு வரப்பட்ட சில நாட்களிலேயே தங்கம் விலை ஏகத்துக்கும் உயர்ந்தது. மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 150 வகையான பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் இணைத்து விட்டார்கள். எந்தெந்த பொருட்களெல்லாம் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் அத்தியாவசியப் பொருட்களோ அந்த பொருட்களெல்லாம் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் இணைந்து விட்டது.

இந்த சூதாடிகளுக்கும் உழைப்புக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. செயற்கையான வணிகம் இங்கு நடக்கிறது. கோடிக்கணக்கான பணத்திற்கு பொருளை விற்கிறேன் அல்லது வாங்குகிறேன் என்று கூறி எந்தப் பொருளும் இல்லாமல், விற்பனையும் இல்லாமல் செயற்கையான சந்தையை இந்த சூதாடிகள் உருவாக்குகிறார்கள். அவர்கள் விற்கும் மதிப்பில் மிகக் குறைந்த சதவீதமே செலுத்தினால் போதும். சந்தையில் போலியான ஒரு பொருட்தட்டுப்பாடு ஏற்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படுவதால் விலைவாசிகள் மேலும் உயர்கிறது. இதுதான் ஆன்லைன் வர்த்தகம். இதற்கு மத்திய அரசும் துணை போகிறது. பணமே போடாமல் உழைக்காமல் ஓர் அறையில் அமர்ந்து கம்யூட்டரின் உதவியோடு கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்த பேராசைக்காரர்களைப் போல நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஒரு பேராசை இருக்கிறது. அது அரசாங்கத்தின் கஜானாவை நிறைக்க வேண்டும் என்பதுதான்.

பணமே போடாமல் பாக்கெட்டை நிரப்ப நினைக்கும் இந்த சூதாட்டக்காரர்களுக்கும் என்ன ஆனாலும் கஜானா நிரம்ப வேண்டும் என்று நினைக்கிற நிதி அமைச்சருக்கும் என்ன வித்தியாசம்? அப்படி கஜானாவை நிரப்ப இவர்கள் கண்டுபிடித்த வழிதான் ‘ஆன்லைன் டிரேடிங்’. இப்போ ஒரு குண்டூசியை மாநிலத்துக்குள்ளேயே வியாபாரம் செய்தால் அதற்கான வரியை நாம் மாநில அரசுக்குக் கட்டினால் போதும். ஆனால் அதே குண்டூசியை ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு கொண்டுபோனால் மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால் இந்த ஆன்லைன் வர்த்தகம் எங்கு நடந்தாலும் சரி மத்திய அரசுக்கு 12.2% வரி கட்ட வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தில் எந்தப் பொருளையும் செயற்கையாக வாங்கினாலும் சரி விற்றாலும் சரி மத்திய அரசுக்கு வரி கொடுத்து விட வேண்டும். அரசு கஜானா நிரம்பிவிடும் என சிதம்பரம் நம்புவது இப்படித்தான். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் சூதாடிகள் அரசுக்கு ஒழுங்காக வரி கட்டுவதில்லை. வருடாந்திர வருமானத்தை கணக்கிட்டு ஒரு தொகையை வரியாகச் செலுத்தி விட்டு தப்பிவிடுகிறார்கள். ஆனால் அதுவே பெரிய வருவாயாக இருப்பதால் அரசும் இதை அனுமதிக்கிறது.

ஏற்றுமதி என்பது மிக மோசமான திருட்டாக மாறிப்போனது இல்லையா?

ஆமாம் மிக மோசமான திருட்டாக மாறிப்போயிருக்கிறது. நமது வளங்களை கூறு போட்டு கப்பல் கப்பலாக ஏற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ சிமெண்ட் விலையைப் பாருங்கள். விலையை குறைக்க வேண்டும் என சிமெண்ட் முதலாளிகளை எல்லாம் அழைத்துப் பேசி என்ன பயன்? விலை குறையவில்லையே? இருக்கிற பத்து முதலாளிகளுக்கு பதில் பல நூறு முதலாளிகள் இருந்து சிமெண்ட் உற்பத்தி செய்திருந்தால் விலை குறைந்திருக்குமா இல்லையா? ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறதோ அந்த உற்பத்தியில் இருந்து 10% சிமெண்டை ஏற்றுமதி செய்யலாம் என்கிறது அரசு விதி. ஆனால் சிமெண்ட் தயாரிக்கிற மூலப் பொருளை ஏற்றுமதி செய்கிறோம் என்று குஜராத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்கிறார்கள்.

சிமெண்டைத்தானே ஏற்றுமதி செய்யக் கூடாது. நாங்கள் சிமெண்ட் தயாரிக்கும் மூலப் பொருளான க்ளிங்கரை ஏற்றுமதி செய்கிறோம் என்று இங்கிருந்து அதை கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள். அது செல்லும் வழியிலேயே சிமெண்டாக மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இறங்கும்போது சிமெண்டாக மாறி இறக்கி வைக்கப்படுகிறது. அது போல இரும்புப் பொருட்கள் மற்றும் பீரோ தயாரிக்கிற இரும்பு சீட் இன்று ஒரு டன் 65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் 18,000 ரூபாயாக இருந்த இரும்பு இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அது போல பிளாஸ்டிக் என அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதற்கு காரணம் தனியார் தொழிலதிபர்கள் தான். அவர்களுக்குத் தேவையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்காமல் தேச வளத்தை இவர்கள் நாசம் செய்கிறார்கள்.

சமீபத்தில் கோதுமை விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டுப் போராடினார்கள். கோதுமைகளை மூடை மூடையாக சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியும் பிரயோஜனம் இல்லை. மத்திய அரசு வாங்க மறுத்து விட்டது. 650 ரூபாய்க்காவது வாங்குங்கள் என்றார்கள், அதற்கும் மசியவில்லை அரசு. சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ரிலையன்ஸ் கோதுமையை குவிண்டாலுக்கு 650 ரூபாய் கொடுத்து லட்சக்கணக்கான குவிண்டால் கோதுமைகளை வாங்கி தனது கிட்டங்கியில் வைத்துக் கொண்டது. இப்போது நாட்டில் கோதுமை தட்டுப்பாடு. கோதுமைத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கோதுமையை அதிக லாபம் வைத்து விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டது.

இது விவசாயிகளின் நுகர்வோரின் வயிற்றில் அடிக்கும் செயலில்லையா? அதனால்தான் சொல்கிறோம் இந்த பணவீக்கமும் உணவுத் தட்டுப்பாடும் போலியானது. மக்களின் பொருளும் விவசாயிகளின் விளைபொருளும் சில இடங்களில் குவிந்து கிடக்கிறது.

சிறு வியாபாரிகள் எனப்படுவோரை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?

ஒரு டி.வி.எஸ் சேம்ப்பை வைத்து அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிக் கொண்டு போய் அதை விற்பனை செய்பவரில் தொடங்கி தலையில் கூடையை வைத்து வீடு வீடாகப் போய் கீரைகளையும் காய்கறிகளையும் விற்பனை செய்யும் ஆயாவும் சில நூறு ரூபாய்களுக்கு பொருள் வைத்து ஒரு பொது இடத்தில் வைத்து விற்று விட்டு மீண்டும் மாலையில் வந்தோ மறு நாள் வந்தோ விற்கும் தொழிலாளிகள் கூட சிறு வியாபாரிகள்தான். இவர்கள் வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல, சிறு தாயாரிப்பாளர்களும் கூட. ஒரு தயாரிப்பாளர், அப்புறம் விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, பொது மக்களுக்கு நேரடி விநியோகம் செய்பவர்கள் என இந்த வணிகம் ஒரு சங்கிலியைப் போல பலரது உழைப்பு தொடர்பானது. பலருக்கும் வாழ்வளிப்பது. பத்து லட்சம் வரை வியாபாரம் செய்பவர்கள் சிறு வியாபாரிகள்தான்.

வாட்வரி என்று சொல்லக் கூடிய வணிக வரிச் சட்டத்துக்குள் வராத அனைவருமே சிறு வியாபாரிகள்தான். வியாபாரிகளில் சின்ன வியாபாரிகள் இருபத்தைந்து லட்சம் பேர் இருப்பார்கள். தெரு வியாபாரிகள், உற்பத்தியோடு தொடர்புடையவர்கள், சைக்கிளில் போய் விற்பனை செய்பவர்கள் என அறுபத்தைந்து லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் பலவிதமான சந்தை வடிவங்கள் இருக்கிறது. இம்மாதிரி சந்தைகள் தான் சிறு வணிகத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலையைக் கொடுத்து வருகிறது. இந்த சந்தைகளை ஒழித்து ஏகபோகமாய் சில்லறை வர்த்தகத்தை சில தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

நகராட்சி சந்தைகள், உள்ளாட்சி சந்தைகள் என இம்மாதிரி சந்தைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள் தொழில்கள் இருக்கின்றன. ரிலையன்ஸ் கடைகள் வந்த பிறகு இவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரிய நிறுவனங்களோடு இவர்கள் போட்டி போட்டாலும் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த லட்சக்கணக்கான தொழிலாளிகளை வேகமாக அழித்து விடும் என்பதில் ஐய்யமில்லை. மிகப்பெரிய பணபலத்தோடு பல நூறு தொழிலாளர்களின் துணையோடு விஸ்தாரமான சேமிப்பு கிட்டங்கியோடு கடை நடத்தும் ரிலையன்சும் சாதாரண பெட்டிக் கடைக்காரரும் சந்தைப் போட்டியில் பொருள் விற்க வேண்டும் என்பதே எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

ரிலையன்ஸ் வெளிக்கடையில் என்ன விலையோ அதே விலைக்குத்தான் இப்போது பொருட்களை விற்கிறான். சில பொருட்களை அதிக விலைக்கும் விற்கிறான். காரணம் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு வரக்கூடாது என்பதால்தான். ‘‘நம்ம விக்கிற விலைக்குத்தானே அவனும் விற்கிறான்’’ என இந்த வியாபாரிகளும் ஏமாந்து போகிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் தனது வலையை எல்லா இடத்துக்கும் விரிவுபடுத்திய பிறகு தெருவுக்குத் தெரு ரிலையன்ஸ் அங்காடிகளை திறந்த பிறகு அதிரடியாக விலை குறைப்பான். பொருட்களை உற்பத்தி செய்கிற பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ரிலையன்ஸ் இதைச் செய்யும்போது சில்லறை வியாபாரிகள் மொத்தமாக பாதிக்கப்படுவார்கள்.

இப்போதே சிறு வியாபாரிகளின் 25% வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளைப் போலவே சிறுவியாபாரிகளும் வணிகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். கடைகளை விற்று விட்டு கூலி வேலைக்குப் போகிறார்கள். தங்களின் கடைகள் நல்ல விலைக்குப் போகுமா என்றும் ரிலையன்ஸ்காரன் நல்ல விலைக்கு அவர்களின் கடைகளை வாங்கிக் கொள்வான் என்றால் அவனுக்கும் கொடுத்து விடத் தயாராக இருக்கும் அளவுக்கு அவர்களின் வியாபாரம் நலிவடைந்திருக்கிறது. அரசுக்கு இது பற்றி எல்லாம் கவலை இல்லை. சிறு வணிகர்கள் மூலம் ஐந்தாயிரம் கோடிக்கு வியாபாரம் நடக்கிறதென்றால் அதில் நான்காயிரம் கோடி வரி அரசுக்கு வராது. ஏனென்றால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் தனித் தனியாகத்தான் இந்த வியாபாரத்தை மேற்கொள்கிறார்கள். ஆகவே இந்த லட்சக்கணக்கான வியாபாரிகளை ஒழித்து விட்டு ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற சில முதலாளிகளை மட்டும் ஏகபோகமாய் சிறுவணிகத்தில் புகுத்துவதன் மூலம் அரசு கஜனாவுக்கு வரி வரும் எனச் சொல்கிறது மத்திய அரசு.

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளை ஈடுபடுத்துவதன் மூலம் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகளை நேரடியாக விவசாயிகளுடன் கோர்ப்பதன் மூலம் நாங்கள் இடைத்தரகர்களை ஒழித்து விடுகிறோம். அப்படி ஒழிப்பதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என ப.சிதம்பரம் சொல்கிறாரே?

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர் என்போர் அமெரிக்காவில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். விவசாயத்தோடும் உடல் உழைப்போடும் நெருங்கிய தொடர்புடைய சிறுவியாபாரிகள். அப்படிப்பட்ட சிறு வியாபாரிகளைத்தான் சிதம்பரம் இடைத்தரகர்கள் என்கிறார். இந்த இடைத்தரகர்களின் ஓட்டை வாங்கித்தான் இன்று இவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். ரிலையன்ஸ் அம்பானியோ, வால்மார்ட் முதலாளியோ வந்து சிதம்பரத்துக்கு ஒட்டுப் போடப்போவதில்லை. லட்சக்கணக்கான சிறுவியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்து போனால் இவர் என்ன செய்ய முடியும்?

கவர்ச்சிகரமான பொய்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இவர்கள் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள். சரி நான் ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இவர் சொல்கிற இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் ரிலையன்ஸ்சும் வால்மார்ட்டும் நுகர்வோருக்கு நியாயமான விலை கொடுத்து விடுவான் என்று இவர் உத்திரவாதமிட்டு சொல்ல முடியுமா? இது மிகப்பெரிய மோசடி. ரிலையன்ஸ், இது முதலில் சிறுவியாபாரிகளை அழிக்கும், பின்னர் அவர்களின் சந்தையை முற்றிலுமாக அழித்து விடும்.

விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பதற்கு ஒரு சந்தை இல்லாது போகும் சூழலில் அவர்கள் ரிலையன்ஸ் கம்பெனியிடமே தங்களின் விவசாயப் பொருட்களை விற்கும் சூழல் ஏற்படும். அப்போ விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருளுக்கு ரிலையன்ஸ் விலை நிர்ணயம் செய்வான். இது மோசமான மோசடி. அவன் அடிமாட்டு விலைக்கு வாங்குவான். அடி மாட்டு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பான். இதே தந்திரம் தான் ஆன்லைன் வர்த்தகத்திலும் இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது இந்த சிறுவணிகம்தான்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தால்தான் நாடு முன்னேறி இருக்கிறது என்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். காளிமார்க் சோடா, பவண்டோ எல்லாம் என்ன ஆனது? கோக் பெப்ஸிசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 27% பூச்சிக் கொல்லி மருந்து அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறதே, அதை ஏன் இன்னும் இந்த அரசு தடை செய்யாமல் வைத்திருக்கிறது. முன்னரெல்லாம் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு இருந்தது. அவர்களும் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்பதால் நேர்மையாக நடந்து கொண்டார்கள். ஆனால் இன்று பற்பசை,சோப்பு, குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் என எல்லாவற்றிலும் பன்னாட்டு முதலாளிகள் மட்டுமே இருக்கிறார்கள். எடையைக் குறைத்து ஆனால் அதே விலைக்கு விற்கிற - நுகர்வோரை ஏமாற்றுகிற செயலை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிற பன்னாட்டு முதலாளிகளை தட்டிக் கேட்கும் யோக்கியதை நமது அரசுக்கு இல்லை.

நமது மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் அரசு நமக்கான திட்டம் போடும் நம்மை வழிநடத்தும் என்கிற நிலை மாறி நாட்டின் அனைத்து முடிவுகளும் திட்டங்களும் தனியார் முதலாளிகளை மையப்படுத்தி செயல்படுத்தப்படுவது ஆபத்தானது இல்லையா? தொழிற் கொள்கை என்பதே மக்களின் கலாச்சார கொள்கையாக மாற்றப்படுகிறதே?

இது ஒரு நாட்டின் ஆகச் சீரழிந்த போக்கின் வெளிப்பாடு. ஏகபோக தொழில் வணிக கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற ஒன்று இருந்தது. ஏகபோகமாக எந்த தொழிலும் யாரிடம் இருக்கக் கூடாது. அப்படி ஏகபோக உரிமையோடு சில முதலாளிகள் இருந்தால் அவர்கள் பொருட்களை தரமில்லாமலும் தயாரிப்பார்கள். அதிக விலைக்கும் விற்பார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கோக் பெப்ஸி. சிமெண்ட் போன்றவைகள்தான். அரசு நிறுவனங்களை அழித்து பல உள்ளூர் தயாரிப்புகளையும் அழித்து விட்டு இன்று ஏகபோக முதலாளிகளை இதில் அறிமுகப்படுத்தி விட்டார்கள் மிகப்பெரிய ‘பொருளாதாரமேதைகள்’.

சிமெண்ட் விலையை சிதம்பரத்தாலோ மாநில அரசாலோ குறைக்க முடியவில்லையே?அது போல கலப்படத் தடைச் சட்டம் முன்பு இருந்தது. அதையும் இல்லாது ஒழித்து விட்டார்கள். மாம்பழத்தை பழுக்க வைக்க கால்சியம் கார்பைட்டைப் பயன்படுத்தினால் குற்றம். குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லியை கலந்தால் குற்றம் இல்லையா?

இதோ சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் விலை எல்லாம் எகிறி விட்டது. ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என உத்தரவிடுகிற ஒரு நாளில் விலைவாசி கூடுகிறதென்றால் வியாபாரிகள் எப்படி விலையைக் குறைக்க முடியும்? உணவுப் பண்டங்களின் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கோருகிற அரசாங்கம் மூலப் பொருட்களின் விலையைக் குறைக்க என்ன வழி கண்டிருக்கிறது? சும்மா ஹோட்டல்காரர்களை அழைத்து மிரட்டுகிற வழக்கத்தை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளிடம் இவர்களால் காட்ட முடியாது என்பதுதான் உண்மை.

ரிலையன்ஸ் கடைகளை தமிழகத்தில் சில கட்சிகள் எதிர்த்தன. சில கட்சிகள் எதிர்க்கவே இல்லை. நீங்கள்கூட சில்லறை வணிகத்தில் ஏக போகத்தை எதிர்க்காதவர்களை வைத்து மாநாடு கூட நடத்தினீர்கள். உலகமயமாக்கத்தை பல சமயங்களில் நேரடியாகவும், சில சமயங்களில் மறைமுகமாகவும் ஆதரிக்கும் கட்சிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் பி.எச்.பாண்டியன், வைகோ போன்ற தலைவர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்தினீர்கள். இது முரண்பாடாக இருக்கிறதே? நந்திகிராம் விஷயத்தில் விவசாயிகளின் மரணத்திற்கு காரணமான மார்க்சிஸ்ட் கட்சியும் இதில் கலந்து கொண்டதே?

நாங்கள் நடத்தியது விலைவாசி எதிர்ப்பு மாநாடு. அந்த நோக்கில் தான் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் பாகுபாடின்றி அழைத்திருந்தோம். மற்றபடி, உலகமயமாக்கலை யார் ஆதரித்தாலும் எதிர்த்துப் போராடுவோம். பெரும்பாலான தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இனி இதை எல்லாம் எதிர்க்க முடியாது என்று. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல வியாபாரிகளே அப்படித்தான் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இதை நாம் முறியடித்து மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் வணிகர் சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் கடைகளை உத்திரபிரதேசத்தில் மூட முடிந்ததே நம்மால் முடியாதா என்ன? அங்கும் இப்படித்தான் முதலில் நினைத்தார்கள், கடைசியில் வியாபாரம் சீரழிந்து விவசாயிகள் பட்டினியில் கிடந்து மொத்த விவசாயமும் பாழடைந்தபோது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கியதன் விளைவு அந்தக் கடைகளை அங்கு மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி பல நாடுகளிலும் வால்மார்ட்டை மக்கள் துரத்தி அடித்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழல் இங்கும் வரும், அதற்கு நீண்ட நாள் காத்திருக்கத் தேவையில்லை. ஒற்றுமையும் அரசியல் விழிப்புணர்வும்தான் தேவை.

எங்கள் விலைவாசி எதிர்ப்பு மாநாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். காங்கிரஸ், திமுக., வைத் தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களை ஏமாற்றுகின்றன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் ஒரு நிலைப்பாடும் இங்கு ஒரு நிலைப்பாடும் வைத்திருப்பதால் அவர்களுடனும் நாங்கள் உடன்படவில்லை. நந்திகிராம் விஷயத்தில் மார்க்சிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு தவறானது என்பது எங்கள் கருத்து.

வணிகர் சங்கத்துக்கு நாடார் சங்கம் போல ஒரு தோற்றம் இருக்கிறதே?

சிறு வணிகர்களில் அதிகளவில் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அப்படி ஒரு தோற்றம் இருக்கலாமே தவிர உண்மையில் அப்படி இல்லை. எங்களின் மாநில அமைப்பில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். மற்றபடி வணிகர் சங்கத்தின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் இப்படியான வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

தற்பொழுதைய திமுக ஆட்சி வணிகர்கட்கு அதிக அளவில் சலுகைகள் புரிந்துள்ளதாக கூறுகிறார்களே? நீங்கள் ஏன் ஆட்சியில் இருப்பவர்களுடன் எதிர்ப்பு அரசியல் நடத்துகின்றீர்கள்?

திமுக கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது 5,250 கோடிதான் சிறு வணிகர்களால் அரசுக்கு வருமானம் வந்தது. அதை அதிகரிக்க சில யோசனைகளைச் சொன்னோம். சில வரிச் சலுகைகளைக் கேட்டோம். சில பொருட்களுக்கு வரி விலக்கு கொடுத்தார். நாங்கள் கேட்ட பெரும்பாலான கோரிக்கைகளை எல்லாம் கலைஞர் நிறைவேற்றினார். அடுத்த வருடமே அரசுக்கு சிறு வணிகர்களால் 8,150 கோடி ரூபாய் வருமானம் வந்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் கூட கலைஞர் ‘‘அதிகாரிகளின் ஏட்டுக் கணக்கு பொய்த்து விட்டது. இந்த வியாபாரிகளின் மனக் கணக்குத்தான் வெற்றி பெற்றது’’ என்று பேசினார். இதெல்லாம் நடந்தது தேர்தல் நெருங்கிய நேரத்தில்.

இந்த முறை அவர் ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு வரை கலைஞரை சந்திக்க முயற்சிக்கிறேன் ஆனால் சந்திப்பதை தவிர்க்கிறார். அவர் எங்களுக்கு நிறைய செய்து விட்டதாக நினைக்கிறார். கலைஞர் செய்தது எனக்கல்ல. மக்களுக்குத்தான் செய்தார். தவிரவும் வணிகர் சங்கம் எந்த கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்காது. நமக்கு நல்லது செய்திருக்கிறார் என வியாபாரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்பது கூட வணிகர் நலன் சார்ந்த நோக்கில்தானே தவிர கட்சி சார்பு அதில் இருக்காது. அதனால் தமிழகம் முழுக்க சென்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நடுநிலை வகித்தோம். எங்கள் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம் என்றோம்.

கோக் பெப்சியை விரட்ட வேண்டும். வணிகத்தில் ஏக போக முதலாளிகளை ஒழிக்க வேண்டும் இதெல்லாம் எங்கள் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வைத்தால் அவர் திமுகவை எதிர்ப்பதாக நினைக்கிறார். அதாவது வணிகர் சங்கம் திமுகவின் ஒரு கிளை அமைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அரசாங்கம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த இருக்கும் சில திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த திட்டம் பற்றி ஒப்புக்கு கோரிக்கை வைப்பதும் அத்திட்டம் தானாக நிறைவேறியவுடன் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவிப்பது ஜால்ராக்கள், எடுபிடிகள் செய்யும் வேலை. அதையே நானும் செய்ய முடியாது. அரசுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் சுலபம். அரசியலோடும் கொள்கையோடும் இன்று எதிர்ப்பரசியல் நடத்துவது மிகவும் கடினம்.

keetru.com

No comments:

Post a Comment