Monday, September 27, 2010

அய்யப்பன் கதை கேளுங்கள்!

அய்யப்பன் கதை கேளுங்கள்!

 


சாமியேய்ய்ய்ய்ய்ய்........ ச..... ர...... ண......ம் அய்யப்பா...............

கார்த்திகை மாதம் பிறந்தால் இந்தச் சத்தம் காதைக் கிழிக்கும்.
அத்து மீறி நம் அமைதியைக் கெடுக்கும். இந்தக் கூச்சல் கடந்த 50 ஆண்டுகளாகத்தான். அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். இந்த கேரள இறக்குமதி, பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்தது. நவம்பர், டிசம்பரில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த நவம்பர் வரையிலும் நீள்வதும் உண்டு.பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, கேரளாவின் இயற்கையை ரசிக்க சபரிமலைப் பயணம் ஒரு சாக்காகப் போய்விட்டது. அதைப் பார்த்த பாமரனும் கடன்பட்டான்.

எதிலும் புதியதைத் தேடும் மனித மனம் கடவுளிலும் புதியதைத் தேடியதன் விளைவே அய்யப்ப தரிசனம். தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பிழந்தனர். மலையாளக் கடவுளுக்குக் கொண்டாட்டம்.மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார். “குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் ‘பவர்’ குறைந்துவிட்டதா?” என்று.

நாற்பத்தெட்டு நாள் விரதம், காலில் செருப் பணியக் கூடாது, உறவினர் யாராவது இறந்தால்கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. பக்தி உறவுகளைக் கூட பிரித்தது.இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் நாற்பத்தெட்டு நாள் நல்ல உணவு கிடைக்கும். வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி... சாமி... என்று.இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். தண்டச்சோறுகளுக்கு கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவு. இவைதான் அய்யப்பன் மக்களுக்குத் தந்தவை. உழைக்கத் தூண்டும் கடவுள் என ஒன்றுகூட இல்லை; எல்லாம் பணம் பிடுங்கும் கடவுளர்தான்.

தமிழர்களின் செல்வம் பக்தியின் பேரால் திருப்பதி உண்டியல் மூலமாக ஆந்திராவிற்கும், மூகாம்பிகை கோயில் மூலமாக கர்நாடகாவிற்கும், அய்யப்பன் கோவில் மூலமாக கேரளாவிற்கும் செல்கிறது.

சபரிமலை தரிசனம் பற்றி இந்த ஆண்டு வந்த ஒரு செய்தி. அய்யப்பன் கோயில் படி பூஜைக்கு முன்பதிவு 2013 ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாம். இந்த சிறப்பு படி பூஜைக்கு கட்டணம் ரூ. 25,001. இப்படி முன்பதிவு செய்துள்ளவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாம். அதற்கு அடுத்தபடியாகத்தான் ஆந்திர, கர்நாடக, கேரள பக்தர்கள் உள்ளார்கள். தமிழன் எவற்றிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறான் பார்த்தீர்களா?சரி... அந்த அய்யப்பன் கதைதான் அவ்வளவு ஒழுக்கமானதா? ஓரினச் சேர்க்கையால்தான் எய்ட்° என்னும் உயிர்க்கொல்லி நோய் வருவதாகச் சொல்கிறார்கள் மருத்துவ அறிவியலார்கள். அந்த எய்ட்°க்கு முன்னோடி இந்த அய்யப்பன் என்பதை இக்கதையில் படியுங்கள் புரியும்.

அரிகரசுதன்அரி (விஷ்ணு), அரன் (சிவன்) ஆகியோரின் மகனே சபரிமலையில் இருக்கை செய்யப் பட்டிருக்கும் மூர்த்தி என்று நம்பப்படுகின்றது. பல பாடல்களிலும் அந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. துர்வாசர் என்ற மாமுனிவர் ஒருமுறை காடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தபொழுது, கற்பக மரத்தின் பூக்களால் கோத்த ஒரு மாலையுடன் நின்றுகொண்டிருந்த மேனகையைக் கண்டார். முனிவர் கேட்ட பொழுது அவள் அதை அவருக்குக் கொடுத்தாள். அந்த மாலையை தலையில் சூடிக்கொண்டு முனிவர் தேவலோகத்துக்குச் சென்றார். அப்பொழுது தேவேந்திரனான இந்திரன் அய்ராவதம் என்ற யானையின் மீதேறி வந்து கொண்டிருந்தான். துர்வாசர் மாலையை இந்திரனுக்குப் பரிசாக அளித்தார். அவன் அதை முகர்ந்து பார்த்தபின் யானையின் மத்தகத்தில் வைத்தான். மாலையின் உறுத்தலால் யானை துதிக்கையால் அதை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு கீழே போட்டது. தான் கொடுத்த மாலையை இந்திரன் அவமதித்ததாக தவறாக எண்ணிய மாமுனிவர் தேவலோகத்தின் சிறப்பு அழிந்து போகட்டும் என்று சாபமிட்டார். அதன் பலனாக தேவர்களுக்கு நரைதிரை மூப்பு உண்டானது. யாகங்கள் முடங்கின. கடைசியில் பிரம்மாவின் உதவியுடன் அவர்கள் மகாவிஷ்ணுவைச் சந்தித்து முறையிட்டனர். எல்லா வித மூலிகைகளையும் கொண்டு வந்து பாற்கடலில் போட்டபிறகு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தால் அதிலிருந்து அமுதம் பொங்கி வருமென்றும் அதை உண்டால் நரைதிரை மூப்பு மாறுமென்றும் விஷ்ணு சொன்னார். அதன்படி அவர்கள் பாலாழியைக் கடையத் தொடங்கினர்.

தேவர்களால் அதனைச் செய்ய இயலாமல் போனதும் அவர்கள் அசுரர்களையும் உதவிக்கு அழைத்தனர். ஒரு பக்கம் தேவர்களும் மறுபக்கம் அசுரர்களும் நின்று கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாலாழியிலிருந்து பலவும் பொங்கி வந்தன. கடைசியில் அமுதம் நிறைந்த கமண்டலத்துடன் தன்வந்திரியும் வெளிவந்தார். இந்தச் சமயத்தில் அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு அசுரர்கள் பாதாளத்துக்குச் சென்றனர். அதைக் கைப்பற்ற தேவர்களால் முடியவில்லை. அப்பொழுது மகாவிஷ்ணு அழகிய ஓர் இளம் பெண்ணின் வேடத்தில் பாதாளத்துக்குச் சென்றார். தான் தன்வந்திரியின் தங்கை என்றும் பாலாழியை கைவிட்டுக் கரையேறியதும் தேவர்களும் அசுரர்களும் சென்று விட்டதால் அனாதையாகிவிட்ட தான் தகுந்த வரனைத் தேடி நடப்பதாகவும் சொன்னாள். இதைக் கேட்டதும் அசுரர்கள் ஒவ்வொருவரும் அவளை மணம் புரிய விரும்பினர். அவர்களுக்கெல்லாம் அவள் அமுதத்தைப் பரிமாறிக் கொடுக்க வேண்டுமென்றும் கடைசியில் அவர்களில் ஒருவரை மணம் புரிய வேண்டுமென்றும் அவர்கள் சொன்னார்கள். மோகினி அதற்கு சம்மதித்தாள்.

அவள் சொன்னாள்: “நீங்களெல்லோரும் கண்களை மூடுங்கள்; நான் அமுதத்தைப் பரிமாறுகிறேன். கடைசியாக கண்ணைத் திறப்பவர் எனக்குப் பரிமாறி விட்டு என்னை மணம் புரிந்து கொள்ளுங்கள்.”அசுரர்கள் அனைவருக்கும் மோகினியை மணம் புரியவேண்டும் என்ற ஆசை இருந்ததனால் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். இந்தச் சமயத்தில் மோகினி அமுதத்துடன் தேவலோகத்துக்குச் சென்றுவிட்டாள். தேவர்கள் அமுதம் உண்டு ஆற்றல் பெற்றனர். அந்தச் சமயத்தில் சிவன் அந்த இடத்தில் இல்லை. பிறகு மோகினியைக் கண்ட சிவன் அவளழகில் மயங்கி அவளுடன் இணைந்தான். அதன் பலனாகத் தொடையிலிருந்து அய்யப்பன் பிறந்தான். இவ்வாறு அரி, அரன் ஆகியோரின் மகனாகப் பிறந்ததாலேயே அரிகரசுதன் என்ற பெயர் சபரிமலையிலுள்ள கடவுளுக்கு உண்டானதாம். ஆண் கடவுளான சிவனும் இன்னொரு ஆண் கடவுளான விஷ்ணுவும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்றும், அதன் மூலமாக ஒரு குழந்தை பிறந்தது என்றும் கதை புராணங்களிலோ இதிகாசங்களிலோ இல்லை. ஆனால், பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூட பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினாராம். கடைசியில் அவருக்கு சுக்கில வெளிப்பாடு உண்டானது என்றும் அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங் களாக மாறின என்றும் பாகவதம் கூறுகின்றது (சுக்கிலம் பொன்னும் வெள்ளியுமாக மாறும் என்ற மூடத் தனத்தை இப்பொழுது நாம் விட்டு விடுவோம்). விஷ்ணுவுக்கு கர்ப்பம் உண்டான கதையோ பிரசவம் ஆன கதையோ பாகவதத்தில் இல்லை.மோகினி வடிவை விஷ்ணு எடுக்கக் காரணம் அமுதத்தைக் கைப்பற்றத்தான் என்றல்லவா பாகவதம் கூறுகின்றது. ஆனால், ப°மாசுரனைக் கொல்வதற்காக அவர் மோகினி வடிவம் எடுத்ததாக இன்னொரு கதையும் உண்டு. ஆனால், அந்தக் கதை புராணங்கள் எதிலும் இல்லை.

இந்த ப°மாசுரனைப் பற்றி வடமொழிப் புராணங்கள் எதிலும் எந்தவிதக் குறிப்பும் காணப்படவில்லை. ஆனால், மராத்தி மொழியில் எழுதப்பட்ட ‘சிவலீலாம்ருதம்’ என்ற நூல் ப°மாசுரனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது பின்வருமாறு: ப°மாசுரன் சிவனின் ப°மப்(நீறு) பொடியிலிருந்து பிறந்தான். ப°மாசுரனின் தீவிர சிவபக்தியைக் கண்டு காட்சியளித்த சிவன், விரும்பிய வரத்தைக் கேட்கும்படிச் சொன்னார். அதன்படி ப°மாசுரன், தன்னுடைய கையை நான் யாருடைய தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கினான். வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அகங்காரம் கொண்ட ப°மாசுரன் உலகம் முழுமைக்குமே கெட்ட கனவாக விளங்கினான். உடனே மகாவிஷ்ணு ஒரு மோகினியின் வடிவில் தோன்றினார். தன்னுடைய பாவனைகளால் அசுரனை மயக்கியபின் ‘முக்தி நடனம்’ ஆரம்பித்தார். அந்த நடனத்தினிடையில் ப°மாசுரன் தன்னுடைய கையை தன் தலையிலேயே வைத்து மரணமடைந்தான்.இவ்வாறு மோகினி வடிவம் எடுத்த விஷ்ணுவிடம், அந்த உருவத்தைக் காட்டும்படி சிவன் வேண்டியதாக இன்னொரு கதை உள்ளது. இந்தக் கதையிலும் விஷ்ணுவுக்கும், சிவனுக்குமிடையேயுள்ள உடலுறவில் சா°தா பிறந்த தாகச் சொல்லப்படவில்லை. பிற புராணங்களிலும் இத்தகைய ஒரு கதையில்லை.

கட்டுப்பாடற்ற உடலுறவும் அராஜகத் தன்மையும் சர்வசாதாரணமாக நிலவிய காலத்தில் எவரோ உண்டாக்கிய ஓர் ஆபாசமே இயற்கைக்கு முரண்பாடான சிவ-விஷ்ணு உடலுறவு கதை. (நூல்: சபரிமலை அய்யப்பன்,உண்மையும் கதைப்பும்)- இதுதான் கதை. இதுபோக சபரிமலைக்கு கூட்டம் சேர்க்க ஏராளமான குட்டிக் கதைகளையும் சொல்வார்கள். காடு-புலி என்றெல்லாம் புருடா வேறு. உடலை வருத்திக் கொண்டு, பொருளை இழந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டுமா என்ற ஓர் அக்கறையில் கேள்வி கேட்டால் உடனே பதில் வரும். என்ன சாமி இப்படிக் கேக்குறீங்க. சின்ன பாதை பெரிய பாதை எதுல நடந்தாலும் உடலுக்கு நல்லது. காலையில வேகமாக எந்திரிச்சு குளிச்சு சுத்த பத்தமா இருந்தா உடம்பு புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லாம் ஒரு காரணமாத்தான் இந்த சடங்கெல்லாம் என்பார்கள். சடங்கு - சம்புரதாயங்களெல்லாம் இப்படி உடலைப் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தால் இந்தச் செய்தி ஏன் வருகிறது? படியுங்கள்:

அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 4 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவ°வம் போர்டு பம்பை-நீலிமலையேற்றம். அப்பாச்சி மேடு -சபரிமலை நடைபாதயில் 12 இடங்களில் ஆக்ஸிஜன் சுவாச மையங்களை அமைக்க முடிவு செய்தது.இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது. துளிகூட பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது ரசிகர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?

அய்யப்பன் கதையும் அறிவுக்குப் பொருந்தாதது; தற்கால நடப்பும் எந்தப் பயனையும் தராது. இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படி குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டினார் தங்கர்பச்சான். அய்யப்பன் ரசிகர்களே நீங்கள் இன்னும் திருந்தாத அப்பாசாமிகள் தானா?

No comments:

Post a Comment