Monday, October 18, 2010

மகான்களின் பெருமை

ஞான சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்


ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.
வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.
அண்ணாமலை
அண்ணாமலை
சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.
மகானின் அற்புதம்
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.
ஞான சத்குரு
ஞான சத்குரு
ஒருமுறை மகான் மண்டப வாயிலில் அமர்ந்திருந்தார். அப்போது பக்தர் ஒருவர், சுவாமிகளுக்கு உணவுப் பொட்டலம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து, உண்ணுமாறு வேண்டினார். சிறிது உண்ட சுவாமிகள் உணவை மேலும் கீழும் அள்ளி இறைத்தார்.
’உணவை உண்ணாமல் ஏன் இப்படி இறைக்கின்றீர்கள் சுவாமி’ என்று கேட்டார் பக்தர். 
’பூதங்கள் கேட்கின்றன, தேவதைகள் கேட்கின்றன’ என்று சொல்லிய சுவாமிகள், மேலும் மேலும் உணவை அள்ளிக் கீழே வீச ஆரம்பித்தார்.
தான் மெத்தப் படித்த மேதாவி என்ற எண்ணம் கொண்ட அந்த பக்தருக்கு சுவாமிகளின் செய்கை மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதேசமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது.
’பூதமாவது, தேவதையாவது? என் கண்ணுக்கு எதுவும் தெரியலையே சாமி’ என்றார் கிண்டலாய்.
‘அப்படியா, சரி வா காட்டுகிறேன்’ என்ற சுவாமிகள், அந்த பக்தரின் புருவ மத்தியில் தனது கட்டை விரலை வைத்து அழுத்தினார். பின் ’இப்பொழுது பார்’ என்றார்.
அங்கே கோரைப் பல்லும், தொங்கிய நாக்கும், பரட்டைத் தலையுமாக மகாக் கோர உருவங்கள் பல நின்று கொண்டிருந்தன. அவை, சுவாமிகள் அள்ளி அள்ளி எறிந்த உணவை வேக வேகமாக உண்டு கொண்டிருந்தன. கிண்டலாகப் பேசிய பக்தரை அவை மிகவும் கோபத்துடன் பார்த்தன. அதைப் பார்த்த பக்தருக்கு மிகுந்த பயமாகி விட்டது. 
“அய்யோ சுவாமி, போதும், போதும். நான் தெரியாமல் கேட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினார்.
சேஷாத்ரி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “இப்போ புரியுதா, இனிமே இப்படிச் சந்தேகப்பட மாட்டேல்ல…”என்று சொல்லிக் கையை எடுத்தார். உடனே அந்தக் கோர உருவங்கள் மறைந்து விட்டன. சுவாமிகளின் கால்களில் விழுந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டினார் அந்த பக்தர்.
அதற்கு சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு. போ போ. இந்த மலையை தினம் சுத்தி வா. உனக்கு நல்லது நடக்கும்.” என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
மகா சமாதி
மகா சமாதி
இவ்வாறு தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்த இம் மகானின் குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் ஜெயந்தி விழா நடக்கிறது.
திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மகானின் சமாதிகளும் அமைந்துள்ளது.
மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.

பிரும்மரிஷி மலை

மலை
மலை
யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.
மலைப் பகுதி
மலைப் பகுதி
இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.
இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.
வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர்  ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.
தலையாட்டிச் சித்தர்
தலையாட்டிச் சித்தர்
இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 2010க்குள் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.
முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.
மேல் விவரங்களுக்கு — http://www.gatewaytopeace.org/
(தகவல் உதவி : சிவநெறிச் செல்வர் – சிங்கை கிருஷ்ணன்)

சித்தர்கள் யார்?

சித்தர்கள்
சித்தர்கள்
சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
அகத்தியர்
அகத்தியர்
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                              …………….
  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!
என்கிறார்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
munivarசித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 
சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
“ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. “
- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.
ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

பிரம்ம ஞானி ஞானானந்த கிரி

ஞானானந்தர்
ஞானானந்தர்
‘தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ – இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் வரை வாழ்ந்ததாகக் கூறப்படும் இம்மகான் கபீர்தாஸ், ஷிர்டி சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ராமலிங்க அடிகளார், சற்குரு சுவாமிகள், விட்டோபா சுவாமிகள், ஸ்ரீ அரவிந்தர் எனப் பல மகான்களைச் சந்தித்த பெருமைக்குரியவர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்கள புரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள். இயற்பெயர் சுப்ரமண்யம். சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின் போது பேரொளியின் தரிசனம் கிட்டியது.  அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தல யாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்திற்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.
ஒரு முறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி ஸ்ரீ சிவரத்தின கிரி சுவாமிகள் சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரை தனது சீடனாக ஏற்றுக் கொண்டவர் வேத, வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத் தந்தார். பின் தீக்ஷை அளித்து ’ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். அப்பீடத்தின் தலைவராக சிலகாலம் விலங்கிய ஞானானந்தர் குருவின் மறைவிற்குப் பின் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டி, மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டார்.
இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத சித்துக்கள் கைவரப்பெற்றார். மூப்பையும், பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழ வல்ல காய கல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக் கொண்டார். பின் மீண்டும் தல யாத்திரை மேற்கொண்டவர், இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.
தமிழகத்தில் சேலம், கொல்லி மலை, போளூரில் உள்ள சம்பத் கிரி மலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கி தவம் செய்தார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்த தபோவனத்தை தமது வாழ்விடமாகக் கொண்டார்.
ஞான ஒளியுடன் ஞானானந்தர்
ஞான ஒளியுடன் ஞானானந்தர்
எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. சற்று பருத்த தேகம். கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் – என ஸ்ரீ சுவாமிகள் அன்பின் மறு உருவாய் இருந்தார். தம்மை நாடி வருவோரின் மன இருளை நீக்கி அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான் என சுவாமிகள் வலியுறுத்தினார். அகண்ட நாம பஜனை ஒருவனை ஆண்டவனிடம் கொண்டு சேர்க்கும் என்பதும், நான், எனது என்ற அபிலாஷைகளை விடுத்து ஒருவன் தன் கடமைகளைச் செய்யும் போது அதுவே யோகமும்,  தியானமும், தவமும் ஆகிறது என்பது சுவாமிகளின் அருள் வாக்காகும்.
சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்ம முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஆயினும் சமயங்களில் தம்மை நாடி வந்த் சிலருக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து, வேலை, தொழில், திருமணம், குழந்தைகள் குறித்து, பின்னால் நடப்பதை முன்னரே தனது ஞான திருஷ்டியால் கணித்து சுவாமிகள் கூறியிருக்கிறார்.
சுவாமிகள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு பல முறை பற்கள் முளைத்துக் கீழே விழுந்தது என்றும், ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.
இவ்வாறு பல்வேறு உண்மைகளை பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்ம வழிக்குத் திருப்பிய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாய் அது விளங்கி வருகிறது.


ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்
“அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. அதற்கேற்ப அந்த இறைவனின் அருளோடும் ஆசியோடும் பிரம்ம ஞானியாக உயர்ந்தவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர். திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்ற பெருமையையுடைய இம்மகான், 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றியவர். இயற்பெயர் கந்தப்பன்.
 சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான் பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார். பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரம் தலத்தை அடைந்தவர் அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். குருவின் பாதங்களைப் பணிந்து, அவரிடமே பல ஆண்டுகாலம் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற இவர் மிகச் சிறந்த அனுபூதிச் செல்வரானார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் துவக்கினார்.
“ஜனனாத் கமலாலயே” என்று சிறப்பிக்கப்படும் முக்தி தரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்னும் மகா குருவின் ஆசியையும் பெற்றார். பின் தனது பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீ தேசிகர், திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்ட வலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். பின்னர் திருவண்ணாமலை தலத்தை அடைந்து நீண்ட காலம் தவம் செய்து வந்தார்.

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்
ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்
விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணா முலையம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது வரலாறு. விஷமிகள் எவரேனும் அப்பகுதிக்கு வந்தால் புலிகள் உரத்த குரலில் உறுமி அவர்களை பயமுறுத்தி விடும். அதனால் அவர்கள் அப்பக்கம் வரத் தயங்குவர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் ஸ்ரீ தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய், நோடிகளை  நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்கள் தம் ஆன்ம வளர்ச்சி உயர வழி வகுத்தார்.
ஸ்ரீ தேசிகரது தலையாய சீடர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐடன் துரை. இவர் பிறப்பால் ஆங்கிலேயரானாலும் மனத்தால் இந்தியராக வாழ்ந்தவர். தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு அளித்ததுடன் பல உற்சவங்களையும் முன்னின்று  நடத்தினார். அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்காக தம் சொந்தச் செலவில் பல்வேறு திருப்பணிகளை மேற் கொண்டார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின்  தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஐடன் துரை, அண்ணாமலையாரின் தேர்த் திருவிழாவினையும் மிக விமர்சையாக நடத்தி வந்தார்.
ஒருநாள்.. அண்ணாமலை தீபத்தைக் காண மிக ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் துரை. ஆனால் அப்போது  பலத்த மழை பெய்திருந்ததால், அவர் வரும் வழியில் ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்து தான் அண்ணாமலைக்குச் வர வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த  துரை, ‘சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில்  இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கி விட்டனர்.
அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் காரணத்தை வினவினர். ஸ்ரீ தேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமே காப்பாற்ற வேண்டுமாம்!’ என்று  கூறி விட்டு, மீண்டும் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.
சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த விதச் சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரை தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் அளப்பரிய ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.
ஸ்ரீ ஞான தேசிகர், அண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது அங்கேயே தொடர்ந்து தவம் செய்து வந்தார். அந்த இடம் மலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் ‘ஈசான்ய மடம்’ என்று அழைக்கப்படுவதாயிற்று. ஸ்ரீ தேசிகரும் ’ஈசான்ய ஞான தேசிகர்’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்த இம்மகான் 1829 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் 26 ஆம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்து வந்த வில்வ மரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்யக் குளக்கரையில் அமைந்துள்ளது இச்சமாதி ஆலயம். ரமணர் உட்படப் பல மகான்களால் புகழப் பெற்ற இந்த ஸ்ரீ ஈசான ஞான தேசிகர் மடம், அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களை தரக் கூடியது. பல மகான்களின் ஜீவ சமாதிக்களையும், ஆன்ம அருளையும் தன்னகத்தே கொண்டது.
மகான்களின் பெருமை எண்ணவும் இனிதே!

No comments:

Post a Comment