Tuesday, October 26, 2010

குழம்பு

கேரட் சாம்பார் - carrot sambar


கேரட் சாம்பார்








தேவையானவை
வேக வைக்க
துவரம் பருப்பு + சிறு பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
தாளிக்க
எண்ணை + நெய் - முன்று தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
சின்ன வெங்காயம் - 6
தக்காளி - ஒன்று பெரியது
கேரட் - ஒன்று
உப்பு - தேவைக்கு
சாம்பார் பொடி - ஒன்னறை தேக்கரண்டி
புளி - கொட்டை பாக்கு அளவு
கொத்து மல்லி தழை சிறிது







செய்முறை

1 . இரு வகை பருப்புகளையும் வேகவைத்து மசிக்கவும்.

2. தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து கேரட்டை வட்டவடிவமாக அரிந்து போடவும், தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து சேர்த்து , மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

3. ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்த்து , புளியையும் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.

4. காய் வெந்து மசாலா வாடை அடங்கியதும் வேகவைத்த பருப்ப மசித்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கேரட் சாம்பார் ரெடி.


கேரட் ஜூஸ்

காஜர் கி ஹல்வா



கேரட் சாம்பாரா இனிப்பா இருக்குமா?

இதில் குழந்தை உணவுகளும் தனி லேபிலில் கொடுத்துள்ளேன்.

இது குழந்தைகளுக்காக போட்டு உள்ளேன்
காரம் அதிகம் தேவை படுபவர்கள் பெரியவர்கள் ( நம்ம மங்குனி அமைச்சர் போல் ) சாம்பார் பொடியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் (அ) முன்று பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு கொள்ளவும்

ஏழு கறி சாம்பார்




காய் வேகவைக்க
அவரைக்காய் - 4
கோவைகாய் - 3
பாகற்காய் - 1
முருங்கக்காய் - 1
பீன்ஸ் - 6
கேரட் - 1
தக்காளி - பெரியது ஒன்று
சின்னவெங்காயம் (சாம்பார் ஆனியன்) - பத்து
பச்ச மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - முன்று டீஸ்பூன்
வெல்லம் - அரை தேக்கரண்டி
புளி சிறிய எலுமிச்சம் அளவு அரை டம்ளர் அளவு கரைத்து கொள்ளவும்.
வேகவைக்க
துவரம் பருப்பு - 100 கிராம்
சாம்பார் வெங்காயம் - 10
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தாளிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - முன்று பல்
கருவேப்பிலை - 20 இலைகள்

கொத்துமல்லி தழை சிறிது பொடியாக அரிந்தது ஒரு மேசைகரண்டி , கடைசியாக மேலே தூவ





பருப்பை வேகவைத்து மசித்து வைக்கவும்
காய்களை அரிந்து அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து சாம்பார் பொடி சேர்க்கவும்.
தீயின் தனலை சிம்மில் வைக்க்வும் காய் வெந்ததும் , புளிசேர்த்து கொதிக்க்கவிடவும்.
அடுத்து வெல்லம், வெந்த பருப்பை மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு சிறிது கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.





குறிப்பு



இது போல் காய்களை சேர்த்து கொள்வதால் குழந்தைகள் காய் சாப்பிட வில்லை என்றாலும் காயின் ஜூஸ் சாம்பாரில் நல்ல இரங்கி இருக்கும்.



பாகற்காய் சாம்பாரில் சேர்ப்பதால் கசப்பு தன்மை சிறிதும் இருக்காது.

இது போல் சாம்பாரை எல்லா விதமாக காய்களிலும் செய்யலாம்.

சாம்பார் பொடி இல்லை என்றால் நாம் பிரெஷாக திரித்தும் செய்யலாம்.

அரைத்து விட்ட சாப்பாரும் செய்யலாம்.

வருத்து பொடித்திரித்து சேர்த்தும் செய்யலாம்.

சாம்பாரில் பல வகை உண்டு, கோவைக்காயும், பாகற்காயும் சேர்ப்பது. சர்க்கரை வியாதி காரர்களுக்கு மிகவும் நல்லது.


என் சின்ன பையனுக்கு பூரி ரொட்டி, வடை தோசை, இட்லி எல்லாத்துக்குமே சாம்பார் இருந்தால் போதும், ஹோட்டல் சாம்பாரும் பிடிக்காது, மற்றவர்கள் செய்ததும் பிடிக்காது, கரெக்டாக கண்டு பிடித்துவிடுவான். நீங்க செய்தது இல்லை என்று, எல்லோரும் செய்வது போல் தான் நானும் செய்கீறேன் அது எப்படி கண்டு பிடிக்கிறான் என்று எனக்கும் ஆச்சரியமாக இருக்கும்.



பருப்பு வகைகள் மசூர் தால், மும் தால் சேர்த்து செய்தால் ஹோட்டலில் செய்வது போல் இருக்கும். அதே போல் பூசனி, பப்பாளி காய் சேர்த்து செய்தாலும் அருமையாக இருக்கும். வாரத்தில் இரு முறை சாம்பார் தான்

மாங்காய் தால்சா



தேவையானவை

காய் வேக வைக்க:

காய் வகைகள் ( முருங்கை, கருனை, வாழை,கத்திரி) = அரை கிலோ
மாங்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

புளி - ஒரு சிறிய லெமன் அளவு (கெட்டியாக கரைத்து கொள்ளவும்)

பருப்பு வேக வைக்க:
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - இரண்டு மேசை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது -- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - முன்று ஆர்க்
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ




வேகவைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மசாலாக்கள் எல்லாம் சேர்த்து காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.




புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். (மாங்காயை சேர்க்கவும்)



வெந்த பருப்பை அரைகக் வேண்டாம் மசித்தால் போதும் , பருப்பு, கொத்துமல்லி தழை சேர்த்து கொதிக்க விடவும்








கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள வைகளை தாளித்து சேர்க்கவும்.









சுவையான மாங்காய் தால்சா ரெடி

இதில் மாங்காய் கிடைகக் வில்லை என்றால் புளியின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.

இதில் இஸ்லாமிய இல்லங்களில் தால்சா என்றாலே எலும்பு சேர்த்து தான் செய்வார்கள்,
அது பகாறா கானாவிற்குகறி குழம்பு வைக்க்க வில்லைஎன்றால் சேர்த்து கொள்ளலாம்.

விருபப்படுபவர்கள் மட்டனின் முட்டெலும்பை பருப்புடன் சேர்த்து வேக வைக்கனும்.

ஆலு கோஷ் குருமா - mutton with potato kuruma






//அருமையான இஸ்லாமிய இல்ல விஷேஷ சமையல். கல்யாணம் அல்லது விஷேசம் மாப்பிள்ளை தஸ்தரில் . இவை அனைத்தும்செய்வோம் (பகறா கானா, ஆலு கோஷ் குருமா. தால்சா, அப்பளம், இனிப்பு வகைகள், ஆனியன் எக்,ஊறுகாய்ம் இஞ்சி டீ (அ) ஹரீரா) //




















தேவையானவை




மட்டன்(கோஷ்) - அரை கிலோ



வெங்காயம் - 300 கிராம்



தக்காளி - 300 கிராம்



ஆலு (உருளை) - கால் கிலோ



எண்ணை - 50 மில்லி



டால்டா - ஒரு மேசை கரண்டி



இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி



கொத்து மல்லி தழை - கால் கட்டு



புதினா - கால் கட்டில் பாதி



பச்ச மிளகாய் - முன்று



தயிர் - 50 மில்லி



பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு இரண்டு



தேங்காய் பவுடர் - முன்று மேசை கரண்டி



முந்திரி , பாதம் - இரண்டு மேசை கரண்டி



மிளகாய் தூள் - இரண்டு தேகக்ரண்டி



மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி



தனியாத்தூள் - கால் தேக்கரண்டி



உப்பு தேவைக்கு.












செய்முறை





1.தேவையான பொருட்களை தயாராக வைக்கவேண்டும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்னீரை வடித்து வைக்கவேண்டும்.கொத்து மல்லி புதினாவை மண்ணில்லாமல் கழுவி வைக்கவும்.வெங்காயம், தக்காளியை அரிந்து வைக்கவேண்டும்.




2.குக்கரை காயவைத்து எண்ணை+டால்டா ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு,ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போடு நன்கு வதக்கி தீயை சிம்மில் வைக்க வேண்டும்




.3.பிற்கு வெங்காம் நன்கு மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தீயை சிம்மில் வைக்கவும், நன்கு பச்ச வாடை மாரியதும், கொத்து மல்லி, புதினாவை போட்டு வதக்கி இரான்டு நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.




4.அடுத்து தக்காளி,பச்ச மிளகாயை போட்டு நன்கு வதக்கி சுருள விட வேண்டும்.




5.தக்காளி வதங்கியதும் அதில் மிள்காய் தூள், உப்பு தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.






6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.







7.மசாலா நன்கு கிரிப்பானதும் தயிர் மற்றும் கறியை போட்டு கிளற வேண்டும்.




8..ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து எல்லா மசாலாவும் சேரும் வரை கொதிக்க விட வேண்டும்.











9..இப்போது ஆலுவை தோலெடுத்து கழுவி நன்காகவோ எட்டாகவோ அரிந்து போடவேண்டும்.



10.முன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும்.















6 மூடி போட்டு சிறிது நேரம் மசாலாவை சேர விட வேண்டும்.




11.குக்கரை மூடி போட்டு நாலு விசில் விட்டு கறி வெந்ததும் இரக்கவும்.




12.முந்திரி, பாதம், தேங்காய் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து அதில் கொஞ்சம் கொத்து மல்லி புதினா சேர்த்து வைக்கவும்.




13.குக்கர் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் முந்திரி கலவையை ஊற்ற வேண்டும்.






14.தேங்காய் வாடை அடங்கும் வரை தீயை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இரக்க வேண்டும்.






15.சுவையான ஆலு கோஷ் குருமா ரெடி.








குறிப்பு




தேங்காய் பவுடருக்கு பதில் அரை முறி தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.



கச கசா இருந்தால் அதையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
இது கீரைஸ் பகாறா கானாவிற்கு ஏற்ற சூப்பரான இஸ்லாமிய இல்லத்தில் விஷேஷங்கலில் செய்யும் சால்னா( குழம்பு).



பரோட்டா, ஆப்பம், தோசை, இட்லி ஆகியவற்றிற்கு ஏற்ற குருமாவாகும்.




பாயா குருமா, வட்லாப்பம்


எல்லோருக்கும்உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும். அன்னையர் தின வாழ்த்துக்கள்.

இது என் அம்மாவின் ஸ்பெஷல் முட்டை வட்லாப்பம்,சின்னதில் ஓவ்வொரு புது வருடபிறப்புக்கும் கண்டிப்பாக செய்வார்கள்.


இது இஸ்லாலிய இல்லத்தில் கல்யாணவீடுகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல உணவுகளில் இந்த காம்பினேஷனும் உண்டு. (இடியாப்பம், வட்லாப்பம், கால் பாயா, ரொட்டி)


வட்லாப்பம்
முட்டை - பத்து
சர்கக்ரை - இரண்டு டம்ளர்
தேங்காய் ஒரு முறி முழுவதும்
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை


தேங்காயை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக பால் எடுக்கவும்.
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து , தேங்காய் பால்,சர்க்கரை, முட்டையை ஒன்றாக நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெயில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காயை அப்படியேவும் போடலாம், நேரம் கிடைப்பவர்கள் ஏலக்காயின் உள்ளே இருக்கு விதைகளை மட்டும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து போட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
எல்லாம் கலக்கிய்தும் கலவையை ஒரு முடி போட்ட சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து குக்கரி ஆவி வந்து வெயிட் போட்டு ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இரக்கவும். குக்கர் அடியில்







சரியான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.

சுவையான சூப்பரான முட்டை வட்லாம் ரெடி.



இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்கு பொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.

பாயா குருமா
ஆட்டுகால் - ஒரு செட்
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்ச மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தூள் - ருசிக்கு தேவையான அளவு
த்னியாதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசைகரண்டி
எண்ணை - நான்கு மேசை கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா நான்கு
தயிர் - நான்கு மேசைகரண்டி
தேங்காய் - அரை மூறி
முந்திரி - பத்து
கசகசா- ஒரு மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் சுத்தம் செய்த பாயாவில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு ,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி அளவு சேர்த்து கலக்கி குக்கரில் நன்கு வேகவிடவும், பாய வேக 20 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஐந்து விசில் வந்ததும் தீயின் தனலை குறைத்து வைத்து பிறகு வேகவிட்டு இரகக்வும்.

2. தேங்காய்,கசகச, முந்திரியை நல்ல மையாக அரைத்து கொள்ளவும்.

3. ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணையை காயவைத்து பட்டை + கிராம்பு+ஏலம் சேர்த்து வெடிய விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.

4. அடுத்து சிறிது கொத்துமல்லி ,புதினா, தக்காளி, பச்சமிளகாய், மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு தூள், எல்லாம் சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்கு கிரேவி பதம் வர தீயின் தனலை சிம்மில் வைத்து கூட்டை
கிரிப்பாக்கவும்.

5. கால் வெந்ததும் கூட்டில் அரைத்த தேங்காய் கலவையையும் ஊற்றி தேவைக்கு குழம்பு பததிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை கொதிக்க விட்டு, மீதி உள்ள கொத்து மல்லி புதினாவை தூவி இரகக்வும்



.

குறிப்பு

குருமா என்று சொல்லும் போது தனியாத்தூள் அதிகமாக சேர்க்க தேவையில்லை. நாங்க ரொம்ப கம்மியாக தான் இதில் சேர்ப்போம், சில பேருக்கு தனியாதூள் சேர்த்து செய்து பழக்கம் ஆகையால் குறைந்த அளவில் இதில் கொடுத்துள்ள்ளேன்.
கால்பாயா மிளகு சால்னாவில் (மிளகு, தனியா தூள் கூடுதலாகவும் சேர்க்கனும்) இது பாயா குருமா.
ஆட்டு பாட்ஸில், கால், குடலில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் ஆகையால் அதிக எண்ணை தேவையில்லை.
இதற்கு கோதுமை ரொட்டி நல்ல இருக்கும்.
நடக்க ஆரம்ப்பிக்கும் குழந்தைகளுக்கு இது காரமிலலாமல் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது,
அதிக கால் வலி மூட்டு வலி உள்ளவர்களும் அடிக்கடி செய்ட்து சாப்பிடலாம்.



வெளிநாடுகளில் பிரிந்து வாழ்பவர்கள். பல வேலை பிஸியில் இருப்பீர்கள், வாரம் ஒரு முறையாவது அம்மாவை தனிப்பட்ட முறையில் விசாரியுங்கள், தாய் தன் தேவையை யாரிடமும் கூறுவதில்லை.தன்னை கவனித்துகொள்வதும் இல்லை. நீங்களா பார்த்து என்ன தேவை என்பதை உரிய நேரத்தில் செய்யுங்கள். பிழைப்பை கருதி அனைவரும் பிரிந்து வாழ்கிறோம். தாயிக்கென சிறிது நேரமாவது ஒதிக்கி இனிதாய் பேசுங்கள்.
தாய் என்றும் நம்மையே நினைத்து கொண்டு இருப்பவள். என்ன வீட்டு செலவிற்கென பணம் அனுப்பினாலும் , அம்மாவிற்கு என்று தனியாக ஒரு தொகை அனுப்புங்கள்.
தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்/

முழுபயறு தால் தர்கா, பஞ்சி ஆப்பமும் தேங்காய் பாலும்

முழு பயறு தால் தர்கா

தேவையானவை

முழு பச்சை பயறு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்துமல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தேங்காய்பவுடர் தேவை பட்டால் = ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் = ஒன்று சிறியது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி


முழு பாசிபயறை எட்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.




குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, முழுபயறு சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு நாலு, ஐந்து விசில் விட்டு இரக்கவும். (சித்ரா ரஜினி படம் பார்க்கும் போது அடிக்கும் விசில் அல்ல) குக்கர் விசில்.

சுவையான ஆப்பம், முழுபயறு தால் தர்கா, காலை நேர டிபனுக்கு, இரவு டிபனுக்கும் நன்றாக இருக்கும்.








தேவையான பொருட்கள்

ஊற வைக்க
பச்ச அரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் கப்
சேர்த்து அரைக்க
சாதம் - ஒரு கை பிடி
தேங்காய் துருவல் - கால் முறி
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.

(ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வானலியில் கொஞ்ச்மா எண்ணை விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக அரிந்து சுற்றி முழுவதும் தடவவும்.அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).

ஒரு ஆழாமான இரும்பு வானலியில் சிறிது எண்ணை ஊற்றி துடைத்து விட்டு தீயின் தனலை மீடியாமாக வைத்து ஓவ்வொரு ஆப்பமாக ஊற்றி எடுக்கவும்.
ஏலக்காயுடன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பாலெடுத்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து ஆப்பத்துடன் சாப்பிடவும்.
ஏலக்காய் தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு

தேங்காயுட‌ன் ஏல‌க்காய் சேர்த்து பால் எடுத்து வ‌டிக்க‌ட்ட‌வும்.தேவைக்கு ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்து ஆப்ப‌த்துக்கு தொட்டு சாப்பிட‌வும்.ஏலக்காய் சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும், ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும்.
இது குழ‌ந்தைக‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.


குறிப்பு:
வெந்தயம் சேர்ப்பது மொருகலாக சிவற‌,ஜவ்வரிசி, சாதம் சேப்பது பஞ்சு போல் வர எல்ல வ‌கையான குருமாக்களும் இதற்கு பொருந்தும். முட்டை வட்லாப்பம் ரொம்ப நல்ல இருக்கும், தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவல் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்ததை கூட சேர்க்கலாம்.

தால் தர்கா என்பது பாக்கிஸ்தானியர்கள் ரெஸ்டாரண்டில் ரொட்டிக்கு வைபப்து, இதை கடலை பருப்பில் தான் பெரும்பாலும் செய்வார்கள், நாம் பொங்க்லுக்கு போடும் பாசிப்பருப்பிலும் செய்ய்லாம் மூங் தால் , இது நான் முழுபயறில் செய்துள்ளேன்.
மலையாளிகள் பெரும்பாலும் , புட்டு கடலை கறி, ஆப்பம் முழுபயறு செய்வார்கள். இதை மலையாளிகளின் தால் தர்கா என்றும் வைத்து கொள்ளலாம். சுலபமான ஒரு சைட் டிஷ்

பேச்சுலர்ஸ் பிஷ் சால்னா



மீன் குழம்பு பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது.வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு ஈசியாக செய்ய இந்த முறை உதவும்.
மீன் குழம்பு என்றாலே மசலாக்களை வதக்கி செய்வது, மிளகு சேர்த்து அரைத்து செய்வது, தக்காளி அரைத்து செய்வது இது போல் பல வகையாக செய்யலாம்.

தேவையானவை

கிங் பிஷ் = அரை கிலோ
வெங்காயம் = முன்று
தக்காளி = ஐந்து பெரியது
பச்ச மிளகாய் = முன்று
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் (கொத்துமல்லி)= இரண்டு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு (இரண்டு தேக்கரண்டி)
புளி பேஸ்ட் இரண்டு மேசைக்கரண்டி (அ) இரண்டு நெல்லிக்கய் சைஸ் புளி
தேங்காய் பவுடர் = முன்று தேக்கரண்டி
தாளிக்க‌எண்ணை = ஆறு தேக்கரண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ப‌த்து ப‌ல்
க‌ருவேப்பிலை = ஐந்து ஆர்க்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது





செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. வ‌ய‌க‌ன்ற‌ ச‌ட்டியை காய‌வைத்து எண்ணையை ஊற்றி, க‌டுகு, வெந்தய‌ம், பூண்டு த‌ட்டி போட்டு, க‌ருவேப்பிலை சேர்த்து க‌ருகாம‌ல் வ‌த‌க்க‌வும்.
3. வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.
4. வெங்காய‌ம் லேசாக‌ ம‌ட‌ங்கிய‌தும் த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிளகாயும் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி தீயின் த‌ன‌லை இர‌ண்டு நிமிட‌ம் குறைத்து வைத்து வேக‌ விட‌வும்.
5. கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தூள்வ‌கைக‌ளை சேர்த்து இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து மீடிய‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.
6. புளி பேஸ்ட் சேர்க்க‌வும். அல்ல‌து புளியை க‌ட்டியாக‌ க‌ரைத்து ஊற்ற‌வும். கிரேவி திக்காக‌ இருந்தால் கூட‌ கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்க்க‌வும்.

7. ந‌ல்ல‌ கொதித்து ம‌சாலா வாடை அட‌ங்கிய‌தும். மீனை சேர்த்து, தேங்காய் ப‌வுட‌ரையும் க‌ரைத்து ஊற்றி மீண்டும் 7 நிமிட‌ம் கொதிக்க‌ விட்டு இற‌க்கும் போது கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.














மீன் சீக்கிரத்தில் வெந்துவிடும், மீனை போட்டதும் சும்மா கரண்டிய போட்டு கிளறக்கூடாது. இல்லை என்றால் யாருக்கும் ஒரு துண்டும் கிடைக்காது. அப்படியே லேசாக சட்டியின் இருபக்கமும் துணி கொண்டு பிடித்து உலசி விடனும்.

// இப்போது வெளி நாடுகளில் எல்லா பொருட்களூம் பாக்கெட்டு களில் கிடைக்கிறது , மீன் மசாலா கூட கிடைக்கும், தக்காளி வதக்க முடிய வில்லை என்றால் தக்காளி பேஸ்ட் டின், பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. வேலையும் மிச்சம். அவசரமாக செய்யும் பேச்சுலர்களுக்கு இது ரொம்ப ஈசி.

மட்டன் அவரைக்காய் குழம்பு

தேவையான‌ பொருட்க‌ள்
மட்டன் = கால் கிலோ
அவரைக்காய் = கால் கிலோ
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
தனியா(கொத்துமல்லி தூள்) = ஒன்னறை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
எண்ணை = முன்று தேக்கரண்டி
ப‌ட்டை = ஒன்று ஒரு அங்குல‌ம் அள‌வு
வெங்காயம் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது
தக்காளி = இரண்டு பெரியது
பச்ச மிளகாய் = ஒன்று
தேங்காய் பவுடர் = ஒரு மேசைக்கரண்டி




செய்முறைமட்டனை கொழுப்பெடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். அவரைக்காயை கழுவி ஓரத்தில் உள்ள நாரை பிரித்து கழுவி இரண்டாக வெட்டவும்.
குக்கரில் எண்ணையை விட்டு காய்ந்ததும் பட்டை வெடிக்கவிட்டு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, கொத்துமல்லி தழை சேர்த்து பிரட்டி தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து குழைய வதக்கவும்.தக்காளி வதங்கியதும் பச்சமிளகாய், அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி மட்டனை சேர்த்து கிளறி சிறிது நேரம் சிம்மில் விடவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடக்கியதும் குக்கரை திறந்து அவரக்காய் + தேங்காய் பவுடரை அரை டம்ளர் வெண்ணீரில் கரைத்து சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தேங்காய் கொதித்து பச்சவாடை அடங்கவும், அவரைக்காய் வேகவும் நேரம் சரியாக இருக்கும்.சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் போதுமானது.குழம்பு கெட்டியாக இருந்தால் தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றும் போதே தேவைக்கு தண்ணீர் குழம்பு பதத்திற்கு சேர்த்து கொள்ளவும்.
சுவையான மட்டன் அவரைக்காய் குழம்பு ரெடி
குறிப்பு:
இது டயட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கென்று தனியாக சமைக்க முடியவில்லை என்றால். அவரைக்காயையும் குழம்பு தொட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மட்டன் வைத்து கொடுக்கலாம்.இதே போல் முருங்க‌காய், க‌த்திரிக்காயிலும் செய்ய‌லாம்.

கால் பாயா மிளகு சால்னா Paya Salna





//இது அடிக்கடி முட்டு வலி உள்ளவர்கள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்//









வேக‌ வைக்க‌


ஆட்டு கால் = ஒரு செட் முழுவ‌தும்

த‌க்காளி = 3

வெங்காய‌ம் = 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் = 3 தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிளகாய் = 2

மிள‌கு தூள் = 2+1 தேக்க‌ர‌ண்டி

த‌னியா தூள் = ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

உப்பு தேவைக்கு

கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது

அரைத்து கொள்ள‌


தேங்காய் ப‌வுட‌ர் = முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = எட்டு
பாத‌ம் = முன்று
க‌ச‌க‌சா = ஒரு தேக்க‌ர‌ண்டி


தாளிக்க‌


எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
டால்டா (அ) ப‌ட்ட‌ர் = கால்
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ துண்டு
ஏல‌ம் = 2
கிராம்பு = 2
சின்ன‌ வெங்காய‌ம் = 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
புதினா = நான்கு இத‌ழ்


1.ஆட்டு காலை வினிகர் சேர்த்து நன்கு உறைத்து கழுவி வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்




3. வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்




4. அதில் கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும்.
கால் வேக ரொம்ப நேரம் எடுக்கும், குறைந்து அரைமணி நேரமாவது ஆகும்
5. வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்





6. மற்றொரு அடுப்பில தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.




சுவையான ஆட்டுகால் மிளகு குழம்பு ரெடி.





குறிப்பு

1.காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணை கொஞ்சமாக போதும், இது அடிக்கடி முட்டு வலி உள்ளவரகள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.


2.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்.


3.குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவை படுபவர்கள் இன்னும் கூட்டி கொள்ளலாம். இந்த ஆட்டு காலை குருமா முறையிலும் , சூப் போலவும் செய்யலாம்.


தேங்காய் ப‌வுட‌ருக்கு ப‌தில் தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.

இதற்கு கோதுமை ரொட்டி, இடியாப்பம் சூப்பரா இருக்கும், மற்றபடி ஆப்பம், இட்லி, பரோட்டா , சபபத்தி வகைகளும் பொருந்தும்.

மட்டன் கோலா உருண்டை குழம்பு - Meat Ball kuzampu












கோலா உருண்டைக்கு

மட்டன் (துண்டுகறி) = 200 கிராம்

பச்ச மிளகாய் = ஒன்று
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி
தேங்காய் = இரண்டு பத்தை
வெங்காயம் = ஒன்று
இஞ்சி = ஒரு அரை அங்குல துண்டு
பூண்டு = 4 பல்
சில்லி பிலேக்ஸ் = அரை தேக்க‌ர‌ண்டி (அ) காஞ்ச‌ மிள‌காய் 2
உப்பு = அரை தேக்கரண்டி (அ) தேவைக்கு
கொத்து ம‌ல்லி = பொடியாக‌ ந‌ருக்கிய‌து கால் க‌ப்
சீர‌க‌ தூள் = அரை தேக்க‌ர‌ண்டி


அரைத்ததில் கலக்கி கொள்ள‌
பொட்டு கடலை = ஒரு மேசை கரண்டி
கார்ன்பிளார் மாவு = ஒரு மேசைகரண்டி



குழ‌ம்பிற்கு(க‌றி குழ‌ம்பு)

ம‌ட்ட‌ன் எலும்புட‌ன் = 100 கிராம்
த‌க்காளி = இர‌ண்டு
வெங்காய‌ம் = இர‌ண்டு
கொத்து ம‌ல்லி = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
தனியாதூள் = ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = குழம்பிற்கு தேவையான அளவு
எண்ணை = முன்று தேக்கரண்டி
ப‌ட்டை = ஒரு துண்டு
தேங்ககாய் = முன்று ப‌த்தை













கோலா செய்முறை



1. கார்ன் பிளார் மாவு, பொட்டுகடலை தவிர குட்டி குட்டியா அரிந்த‌ ம‌ட்ட‌னில் சில்லி பிலேக்ஸ்,ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு,சீர‌க‌ தூள் க‌ர‌ம் ம‌ச‌லா தூள் சேர்த்து ந‌ன்கு பிர‌ட்டி இஞ்சி,பூண்டு, ப‌ச்ச‌மிள‌காய், கொத்தும‌ல்லித‌ழை,தேங்காய்ம் வெங்காய‌ம் எல்லாவ‌ற்றையும் பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.


2. முத‌லில் பொட்டுக‌ட‌லையை பொடித்து த‌னியாக‌ வைக்க‌வும். பிற‌கு பிச‌றி வைத்த‌தை த‌ண்ணீர் விடாம‌ல் மிக்சியில் அரைக்க‌வும். அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் பொட்டுக‌ட‌லைமாவு,கார்ன் பிளார் மாவு க‌ல‌க்கி த‌னியாக‌ வைக்க‌வும்.


குழ‌ம்பு செய்முறை
3. அடுத்து குழ‌ம்பிற்கு எண்ணையை காய‌வைத்து அதில் ப‌ட்டை,
வெங்காய‌ம், இஞ்சி பூண்டு, பாதி த‌க்காளி, கொத்தும‌ல்லி சேர்த்து தாளித்து ம‌ட்ட‌னையும் சேர்த்து தூள்வ‌கைக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு கிள‌றி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

4. மீதி உள்ள் தக்காளியுடன் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து சேர்த்து குக்கரில் என்றால் முன்று நான்கு விசில் விட்டு இரக்கவும். வெளியில் என்றால் சிம்மில் வைத்து நன்கு வேகவிடவும்.









5. மட்டன் குழம்பு கொதிப்பதற்குள்,அரைத்து வைத்துள்ள உருண்டைகளை ஒரு சிறிய லெமென் சைஸில் பொரித்தெடுத்து கொதித்து கொண்டிருக்கும் கடைசியாக குழம்பில் போட்டு மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான சத்தான கோலா உருண்டை குழம்பு ரெடி.

குறிப்பு:

வடையாக செய்வதாக இருந்தால் மட்டன் கிமா தயாரித்து சுருட்டி ஆற வைத்து அரைத்து சுடனும் அப்படி சுடும் போது பிஞ்சிபோகும், அதற்கு முட்டை சேர்த்து கொண்டால் பிஞ்சி போகாமல் இருக்கும்

வஞ்சிரம் மீன் குழம்பு / Fish salna







//மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்,
மீன் குழம்பா புளிப்பா காரசாரமா சுல்லுன்னுவைக்கனும் என்பார்கள்.
இது புளிப்பா கார சாரமா கர்பிணி பெண்களுக்கு, ஜுரம் வந்து வாய் கசந்தவர்கள், எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும், மீன் உணவு ஒன்று தான் வெயிட் போடாதது, எவ்வளவு வேண்டுமானாலும், எந்த ஊர் போனாலும் சாப்பிடலாம்.//


தேவையான பொருட்கள்




வஞ்சரம் மீன் = அரை கிலோ

அரைக்க‌
========

வெங்காயம் = இரண்டு
தக்காளி = நான்கு
பூண்டு = இர‌ண்டு ப‌ல்

ம‌சாலாக்க‌ள்
===========

மிள‌காய் தூள் (காஷ்மீரி சில்லி) = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
த‌னியாத்தூள் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு தூள் = தேவைக்கு

புளி = ஒன்ன‌றை லெம‌ன் சைஸ்

தேங்காய் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி


தாளிக்க‌
=======

எண்ணை = ஐந்து தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = ஒரு ஆர்க்
பூண்டு = முன்று ப‌ல் (த‌ட்டி கொள்ள‌வும்)
சின்ன வெங்காயம் = ஐந்து
கொத்து ம‌ல்லி த‌ழை சிறிது மேலே தூவ‌

செய்முறை
==========


1. மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

2. அரைக்க கொடுத்துள்ளவைகளை நன்கு மையாக அரைத்தெடுக்கவும்.

3. புளியை அரை டம்ளர் வெண்ணீரில் போட்டு கரைத்து கொள்ளவும்.

4. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவேண்டிய மசாலா தூள்வகைகளை சேர்க்கவும்.


5. மசாலா வதங்கியதும் அரைத்த வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து நன்கு கால் மணி நேரம் தீயின் அளவை குறைத்து வைத்து மசாலா வாடை அடங்கும் வரை கொதிக்கவிடவும்.

6. புளியைக்கரைத்து சேர்த்து மீண்டும் கொதிக்க ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.


7. புளி வாடை அடங்கியதும் மீன் + தேங்காய் பவுடரை கொஞ்சமா வெண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

8. கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

9. சுவையான வஞ்சரம் மீன் குழம்பு ரெடி.


குறிப்பு
======

மீன் குழம்பை பல வகையாக செய்யலாம் அதில் இது ஒரு ஈசியான முறை.

மீனை கடைசியில் தான் போடனும் இல்லை என்றால் குழைந்து விடும்.

தேங்காய் பவுடர் இல்லாதவர்கள், தேங்காய் பத்தை நான்கு பத்தை அரைத்து பால் எடுத்து ஊற்றவும்.

மீன் குழம்பிற்கு பிளெயின் சாதம், இடியாப்பம், ரொட்டி,ஆப்பம், தோசை, மைதா அடை , பருப்படை எல்லாம் பொருந்தும்.

காஷ்மீரி சில்லி சேர்ப்பதால் காரம் இல்லாமல்,அதே நேரம் நல்ல சிவப்பு கலராகவும் இருக்கும்.

இரண்டு நாள் வைத்து சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்.

1 comment: