Tuesday, September 28, 2010

குறள் விளக்கம்

இன்னிக்கு எப்படியும் மன்னாரைப் பார்த்திடுவேன்னு ஒரு 'நம்பிக்கை'யோட மயிலாப்பூர் குளத்தை வலம் வந்து கொண்டிருந்தேன்!

[அட! ஆமாங்க! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது! நாயர் கடையில முதல்லியே கேட்டாச்சு! ]

'சரி! நம்ம விதி அவ்ளோதான்! இன்னிக்கு மன்னாரைப் பார்க்கற விதி இல்லைன்னு ஒரு முடிவோட..... சில பேரு அதை அவநம்பிக்கைன்னு சொல்லுவாங்க!!..... வீடு திரும்ப எண்ணி பஸ்ஸைப் பிடிக்க பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றேன்.

அப்போது.... என் எதிரே ஒரு ஆட்டோ வந்து நின்றது!

ஒரு கை என்னை இழுத்து உள்ளே தள்ளியது!

மயிலை மன்னார்!

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை!

விதி இன்னிக்கு நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன் என சந்தோஷமாகச் சிரித்தேன்!

விதின்னா என்ன? அது உன் நம்பிக்கைதானே? ஒண்ணு நடந்தா அது விதின்றே! நடக்கலியா ... அதையும் விதின்றே! என்னைப் பாக்கணும்னு வந்தே! நான் இல்லேன்னதும் உன் நம்பிக்கை இடிஞ்சு போச்சு! விதி சதி பண்ணிச்சுன்னு நினைச்சே! இப்ப என்னைப் பாத்ததும், விதி நீ நினைச்ச மாரியே பண்ணிருச்சுன்னு சந்தோசப் படறே! இந்த விதியைப் பத்தி ஐயன் சொன்னதைச் சொல்றேன் கேளு! எளுதிக்கோ! எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

நான் நோட்புக்கைப் பிரித்தேன்!

இனி வருவது மன்னாரின் குறள் விளக்கம்!!

"அதிகாரம் 38 -- ஊழ்"

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. [371]

ஒருத்தனுக்குப் பணம் வரணும்னு விதி இருந்திச்சுன்னா, அவனுக்குள்ல ஒரு புது சக்தி பிறக்கும்..... எதுனாச்சும் பண்ணனும்ன்ற வெறி வரும். என்னமாச்சும் பண்ணி பணக்காரனாயிடுவான். அவனுக்குள்ளேயே ஒரு தனி முயற்சி பிறக்கும்.
அதே, அவனோட நேரம்.. அதாம்ப்பா.. விதி..... விதி சரியில்லேன்னா, 'சரி, போ! அப்புறமாப் பார்த்துக்கலாம்'னு சோம்பேறித்தனமா இருந்திருவான்.
இப்ப இதுக்கு ஒரு ஒதாரணம் வேணும்னா.....

நேரம் நல்லா இருந்ததுனால, எம்ஜியார் கரீட்டா தேர்தல் நேரத்துல குண்டடி பட்டு திமுகவை கெலிக்க வைச்சாரு. இப்ப இன்னாமா துட்டு பாத்துட்டாங்க பாரு அவங்கள்லாம்!
அதே, நேரம்.... விதி சரியா இல்லாததுனால, ஆனானப்பட்ட காமராஜரே, 'படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு, சோம்பேறித்தனமா இருந்து தோத்துட்டாரு!
அவ்ளோதான்!
அதுக்கப்புறம், காங்கிரஸுக் கட்சி நம்ம ஊருல தலை தூக்கவே முடியல!
அதாவது, இன்னும் அதுக்கு நேரம் சரியா அமையலை!
:)) ஆகூழ்னா நல்ல விதி, போகூழ்னா கெட்ட நேரம்னு பொருள்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. [372]

அதேமாரி, பொல்லாத விதி உனக்கு இருந்திச்சுன்னா, அதாவது கெட்ட நேரம்னா, ஒன்னோட புத்தியும் கெட்டுத்தான் போவுமாம். நல்ல விதி இருந்திச்சுன்னா, அறிவு நல்லாவே வேலை செய்யுமாம்.

தோ! மேலே சொன்னதையே எடுத்துக்கோயேன்!

எம்ஜியாரை ராதாஅண்ணன் சொந்த விரோதத்துல சுட்டாரு.
அதியே, அரசியலாக்கி அண்ணதொரை, அவரு ஃபோட்டோவைக் காட்டியே ஜெயிச்சாரு தேர்தல்ல! அதான் அவரோட நல்ல புத்தி!... விதி சரியா வொர்க்கவுட் ஆச்சு!


காங்கிரஸு... ....... ஒனக்கே புரியுமின்னு நெனைக்கறேன்!:))

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். [373]


இப்ப ஒரு கூட்டத்துல நிக்கற நீ! ரொம்பவே படிச்சவந்தான் நீ! எத்தக் கேட்டாலும், டக்கு டக்குன்னு சொல்லிடுவேதான்! ஆனாக்காடியும், ஒனக்கு நேரம் சரியா இல்லேன்னா, சரியான நேரத்துல நீ சொல்லணும்னு நெனைக்கறது உனக்குத் தோணாமலியே பூடும்! அதான் உண்மை அறிவுன்னு ஐயன் நக்கலா சொல்லிக் காமிக்கறாரு!
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. [374]

இப்ப நீயே பாக்கற...! சிலபேரு ரொம்பவே மெத்தப் படிச்சவனா இருப்பான். ஆனாக்க, பரம ஏழையா இருப்பான்.
இன்னும் சிலபேரு ஒண்ணுமே படிக்கலேன்னாலும், பெரிய பணக்காரனா இருப்பான்.
இதெல்லாம் எப்பிடீன்றே?
அல்லாம் விதிப்பா.... விதி!
ஒன் தலயில இன்னா எளுதியிருக்கோ, அதும்படித்தான் நடக்கும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. [375]

ஒன்னோட விதி சரியா இல்லேன்னா... கெட்ட நேரந்தான் ஒனக்குன்னா... நீ ஒரு நல்ல காரியம் பண்ணினாக்கூட கெட்டதாவே முடியும் அது!

காருல அடிபட்டு விளுந்திருக்கானேன்னு போய் எதுனாச்சும் ஒதவி பண்ணலாம்னு நெனைச்சு அவனைத் தூக்குவே! பொசுக்குன்னு ஒன் மடியில மண்டையைப் போட்டுருவான் அவன்! போலீஸு, கேஸு, சாட்சின்னு நீ அலைய வேண்டிவந்து, ஏண்டா போனோம்னு வெறுத்துருவே நீ!

ஒண்ணுமே தப்பு நெனைக்காம ஒரு சொல்லு சொல்லுவே ஒன்னோட தோஸ்த்துகிட்ட.... இன்னாமா அத்த நீ சொல்லப் போச்சுன்னு பொலுபொலுன்னு பிடிச்சு உலுக்கிடுவான் உன்னிய!

அதே சமயம், நல்ல விதி இருந்திச்சுன்னா, அதே ஆள சரியான நேரத்துல காப்பாத்தினேன்னு ஜனாதிபதி பதக்கமே ஒன்னியத் தேடி வரும்!
ஆஹா! இன்னாமா ஒரு சொல்லு சொன்னே கண்ணுன்னு ஒன்னோட நண்பன் ஒன்னியத் தூக்கிக் கொண்டாடிருவான்.


அல்லாம் விதிப்பா.... விதி!:))
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. [376]


கெட்ட நேரம் ஒனக்கு வந்திருச்சுன்னா, இன்னாதான் வருந்தி வருந்தி ஒரு பொருளை நீ வைச்சுக் காப்பாத்தினாலும், அது ஒங்கிட்ட நிக்காம போயிரும்.

அதே, ஒன்னோட ஒரு பொருளையே வேண்டாமின்னு வெளியே போயிக் கொட்டினாலும், அது ஒங்கிட்டியே திரும்பி வந்து சேர்ந்திரும்.
அல்லாத்துக்கும் இந்த விதிதான் காரணம்னு ஐயன் சொல்றாரு.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. [377]

நீ இன்னாதான் கஸ்டப்பட்டு, கோடி கோடியா சேர்த்து வைச்சாலும், விதி ஒனக்கு சரியா இல்லேன்னா, ஒத்தப் பைசா கூட அதுலேர்ந்து அனுபவிக்க முடியாது. சுளி சரியா இருக்கனும் கண்ணு அதுக்கெல்லாம்!
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். [378]


இப்ப, ஒண்ணுமே இல்லாம ஏளையா இருக்கறவன்லாம் இன்னாத் தும்பம் வந்தாலும் சகிச்சுகிட்டு இருக்கானே! அது ஏன்னு யோசிச்சியா? இது வரும்.... அப்பிடியே சீக்கிரமே போயிரும்னு விதி மேல ஒரு நம்பிக்கை வைச்சுகிட்டு காலத்தை ஓட்டறான் அவன். அது மட்டும் இல்லேன்னா எப்பவோ சன்னியாசம் வாங்கிகிட்டு துறவியாப் போயிருப்பான்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். [379]

ஒனக்கு ஒரு நல்லது நடக்குது! ரொம்ப ரொம்ப சந்தோசமா அத்த அனுபவிக்கற! திடீருன்னு ஒருநாளு அத்தினியும் சட்டுன்னு பூடுது! ரொம்பவே கஸ்டம் வந்திருது ஒனக்கு. அதையும் சந்தோசமா அனுபவிக்காம, ஐயோ அல்லாம் பூடுச்சேன்னு இன்னத்துக்கு அளுவறே நீ?

ஆனாக்க, இப்பிடி இல்லாம அதைக்கூட சந்தோசமா அனுபவிச்ச ஒரு ஆளை ஒனக்குத் தெரியுமா?

அவருதான் காமராசரு! மவராசன் அல்லாம் இருந்தப்பவும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. அல்லாம் போனபோதும் அப்பிடியேதான் இருந்தாரு.

விதிய மீறி வாள்ந்து காமிச்சவரு அவரு!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். [380]

மந்திரம் கால்; மதி முக்கால்னு சொல்லுவாங்க!
விதிய மதியால வெல்லலாம்னும் சொல்லுவாங்க!
ஆனா, அல்லாம் தெரிஞ்ச சித்தன் நம்ம ஐயன் இன்னா சொல்றாருன்னா,
நீ இன்னாத்தான் புத்திசாலின்னு நெனைச்சுகிட்டு செஞ்சாலும், அதையெல்லாம் தாண்டிகிட்டு, விதி முன்னாடி வந்து நிக்குமாம்!
ஒரு ரயிலைப் பிடிக்கனும்னு நெனைக்கறே! இப்ப நேரம் ஒனக்கு சரியில்லேன்னு ஜோசியன் சொன்னாண்ட்டு, ரெண்டு மணி நேரம் முன்னாடியே ஆட்டோவைப் பிடிச்சு ஏறிடுறே!
அப்பாடா! அல்லாம் சரியாப் பண்ணிட்டோம்னு நெனைக்கறப்ப, வருது ஒரு ட்ராஃபிக் ஜாம்!
ஆட்டோ ட்ரைவர் கையில ஒரு அம்பது ருப்பாய அளுத்தி ஸ்டேஷனுக்கு ஓட்டச் சொல்ற!
அவரும், குறுக்கால குறுக்கால புகுந்து கொண்டுபோய் விட்டுடறாரு.
ஓட்ட ஓட்டமா ஓடி ட்ரெயினைப் பிடிச்சுடற!
ஒன்னோட ஸீட்டும் கிடைச்சுருது.
ஆஹா, விதியை கெலிச்சிட்டொம்னு நெனைச்சுப் படுக்கற.
எளுந்து பார்க்கறப்ப.......... ஒன்னோட பர்ஸ் காலி!
அதான் விதி!


இப்பப் பாரேன்!
என்னைப் பார்க்க நீ வந்தே! இல்லேன்னதும், கொஞ்சம் மயங்கினே! சரி போலாம்னு முடிவு பண்ணின! ஆனாக்கூட நீ விதிய நம்பி இங்கியே சுத்திகிட்டு இருந்தே! ஒன்னோட நம்பிக்கை உண்மையாச்சு! விதியை நம்பு! நல்லதே நடக்கும்! நடக்கறதெல்லாமே நல்லதுன்னு நம்பு! இப்ப வடையைத் துண்ணு! டீயைக் குடி! சந்தோசமா இரு!' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

விதியை வாழ்த்தி அவனைத் தழுவிக் கொண்டேன் நான்!


**********************************

Sunday, August 24, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 22 "கண்ணோட்டம்"


12 பி பேருந்தில் இருந்து மயிலாப்பூர் குளத்தருகில் இறங்கி நாயர் கடையை நோக்கி நடை போடும்போது, அடிநெஞ்சில் ஒரு பயமும், குற்றவுணர்ச்சியும் கூடவே வந்தது!

மன்னாரைப் பார்த்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. என்ன சொல்லுவானோ என்ற எண்ணம் அடிவயிற்றைக் கலக்கியது.

'வாங்க சேட்டா! கண்டு கொறச்சு நாளாயிட்டே! சுகந்தன்னே' என நாயர் வரவேற்றதுகூட மனதில் பதியவில்லை. 'நல்லாத்தான் இருக்கேன் நாயர்! மன்னாரைப் பார்த்தீங்களா?' என ஒரு பதட்டத்துடன் கேட்டேன்.

'ஆ! வரும்! இப்ப வரும்' என்றார் நாயர்.

சொன்னதுபோலவே, சில நிமிடங்களில் மயிலை மன்னார் தன் சகாக்களுடன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான்.

'என்ன நாயரே! விருந்தாளிங்கள்லாம் புதுசா வந்திருக்காங்க போல' எனக் கிண்டலுடன் கேட்டுக்கொண்டே சட்டென என்னருகில் வந்து என்னைக் கட்டிக் கொண்டான்.

திட்டப்போகிறான் என நினைத்திருந்த என்னை 'நல்லாருக்கியா கண்ணு! பார்த்து ரொம்ப நாளாச்சில்ல. ரொம்பவே வேலையா' என்ற கனிவான குரல் கொஞ்சம் கண்கலங்க வைத்தது.

'நல்லாவே இருக்கேன் மன்னார்! நீ எப்படி இருக்கே? கொஞ்சம் வேலை மும்முரம். அதான் வந்து பார்க்க முடியலை. மன்னிச்சுக்கோ!' என்று தழுதழுத்தேன்.

'அட இன்னாபா நீ! ஒன்னியத் தெரியாதா எனக்கு!' இதுக்கெல்லாமா கோவிச்சுப்பாங்க. சரி சொல்லு. இன்னிக்கு இன்னா வேணும்?" எனக் கண் சிமிட்டினான்.

'இப்ப நீ பண்ணினியே! அதையே வைச்சு சொல்லேன்!' எனப் பதிலுக்கு அவனை மடக்கினேன்.

ஒரு நிமிடம் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தவன் உடனே கடகடவெனச் சிரித்தவன், 'படா கில்லாடிப்பா நீ! சரி அதியே சொல்லிறலாம். எளுதிக்கோ' என்றான்.

'நான் சொன்னது என்னன்னு புரிஞ்சிடுச்சா?' என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'58-ல ஒரு பத்துப் பாட்டு சொல்லிருக்காரு ஐயன். தலைவனா இருக்கறவனோ, இல்ல, ஒர்த்தரை புரிஞ்சுகிட்டவனோ, அடுத்தவங்ககிட்ட எப்படி இருக்கணும்னு சொன்ன இந்த பத்து பாட்டுங்கள புரிஞ்சுகிட்டா, முக்காவாசி வெவகாரங்கள தீர்த்துரலாம். சொல்லி முடிச்சதும் நீயே புரிஞ்சுப்பே' எனச் சொல்லத் தொடங்கினான்.

இனி வருவது குறளும் அதற்கான மயிலை மன்னாரின் விளக்கங்களும்!

"அதிகாரம் 58" -- "கண்ணோட்டம்"

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. [571]

இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி, இந்தக் கண்ணோட்டம்னா இன்னான்னு சொல்றேன் கேட்டுக்கோ! ஒரு ரெண்டு மூணு விசயத்தைச் சொல்லணும்னு ஐயன் முடிவு பண்ணினாரு. அதாவது, இந்தக் கண்ணு பண்ற சில வேலைங்களையெல்லாம் புரிய வைக்கணும்னு நெனைச்சு, அதெல்லாத்தியும் இந்தப் பத்து குறள்ல சொல்லிட்டாரு. இன்னா முளிக்கறே? புரியலியா? இந்தக் கண்ணு இன்னால்லாம் பண்ணுது? இங்கியும் அங்கியுமா ஓடும்; ஆரு வந்திருக்கான்னு ஓரக்கண்ணால நோட்டம் வுடும்; கோவமாப் பாக்கும்; .அன்பாவும் பாக்கும்; கண்ணாலியே பேசக்கூட செய்யும்; ஆரு இன்னாமாரி ஆளுன்னு ஒரு முடிவு கூட பண்ணும். இப்பிடி கண்ணு ஓடறது கண்ணு ஓட்டம்! இன்னொண்ணு கண்ணு நோட்டம்! இதெல்லாம் சேத்துத்தான் இந்த அதிகாரத்துல சொல்றாரு! ஒரு தலைவனுக்கு இதெல்லாம் ரொம்பவே அவசியம்! இத்தையெல்லாம் மனசுல வைச்சுகிட்டு, இந்தக் குறளுங்களையெல்லாம் இப்ப பாக்கலாம் சரியா!
சரி, இப்ப, மொதக் குறளப் பாப்பம்.

காரிகைன்னா அழகுன்னு அர்த்தம். பொதுவா காரிகைன்ன ஒடனியே ஒரு அளகான பொண்னு நெனப்புத்தான் வரும். அவ அளகா இருக்கறதாலத்தேன் காரிகைன்னே பேரு வந்திச்சின்னு புரிஞ்சுக்கோ!

இந்தக் கண்ணோட்டம்ன்ற ஒரு அளகான ஒண்ணு ஒரு உண்மையான தலைவன்ட்ட இருக்கறதாலத்தான், இந்த ஒலகமே இன்னமும் அளிஞ்சுபோகாம இருக்குன்னு ஐயன் சொல்றாரு. எதெதை எப்பப்ப செய்யணும்னு சரியான கண்ணோட்டம் வைச்சுகிட்டு தீர்மானம் பண்ணி இவன் செய்யறதால, அல்லாமே ஒரு ஒயுங்கா நடக்குது. இதுல உண்மையான்னு சொல்லி ஒரு கொக்கி போட்டிருக்காரு ஐயன். தலைவனா இருந்தா மட்டும் பத்தாது! அவன் உண்மையான தலைவனா இருக்கணும். நாலு பேரு ஒர்த்தனுக்குப் பின்னாடி நிக்கறவன்லாம் தலைவன் இல்ல! தனக்குப் பின்னாடி நிக்கறவங்களப் பத்தி மட்டும் இல்லாம, அல்லாரையும் பத்தி அக்கறையாக் கவலைப் படறவந்தான் தலைவன். சரி, வுடு! இதுக்கு மேல நா சொன்னேன்னா அது வெவகாரமாயிப் போயிரும். அடுத்ததுக்குப் போவோம்!

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை. [572]


இந்த ஒலகத்துல நடக்கறதுக்கெல்லாமே இந்தக் கண்ணோட்டந்தான் காரணம். அதை ஒயுங்காச் செய்யறதாலதான் அல்லாமே சரியா வருது. அது மட்டும் இல்லாங்காட்டி அந்த ஆளு உசுரோட இருக்கறதுலியே அர்த்தம் இல்ல. அது மாரி ஆளுங்கள்லாம் இந்த ஒலகத்துக்கே பெரிய பாரமாம்! அட! நா சொல்லலைப்பா ... ஐயன் சொல்றாரு.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். [573]


இப்ப ஒரு பாட்டு நீ பாடு! நெசமாப்பா.. பாடு! ..[பாடத் துவங்குகிறேன்!] ஐயய்யோ.... போறும் போறும்... நிறுத்து! ராகம் இல்லாம இப்படிப் பாடினா அதுக்குப் பேரு பாட்டா? இதைக் கேக்க முடியுதா? இப்பிடி பாட்டோட பொருந்தலைன்னா இசையால இன்னா பிரயோஜனம்?
அதே போல, ஒரு சரியான பார்வை.... அதாம்ப்பா... கண்ணோட்டம் இல்லைன்னா இந்தக் கண்ணு இருந்துகூட ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு சொல்றாரு.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். [574]

சரியான அளவுக்கு இன்னின்னாருன்னு கண்ணோட்டம் செய்யமுடியாத கண்ணு ஒருத்தனோட மொகத்துல இருந்தாலும், அதால அந்த மொகத்துக்கு இன்னாப் பயனைச் செய்யும்? ஒண்ணுமில்ல!

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். [575]

இப்ப ஐயன் கொஞ்சம் ரூட்டை மாத்தி, கண் ஓட்டம்ன்றதுலேர்ந்து, கண் நோட்டம்னா இன்னான்னு சொல்ல ஆரம்பிக்கறாரு!
ஒரு ஆளுக்கு கண்ணுங்க இருக்குதுன்னா, அதுல கொஞ்சமாவது தாட்சண்யம்னு சொல்லுவாங்களே.. அதான்... இந்தக் கருணை ... இதைக் காட்டாத கண்ணுங்க ஒரு புண்ணுன்னு தான் சொல்லணும். அப்படித்தான் என்னியப் போல அறிவாளிங்கள்லாம் சொல்லுவோம்! .... இது வள்ளுவர் சொல்றது!!

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். [576]


இந்தக் கண்ணுல எல்லாவிதமான காட்சியையும் காட்ட முடியும்னு சொன்னேன்ல? அதாம்ப்பா நவரசம்னு சொல்லுவாங்களே அதெல்லாந்தான்! அதுல முக்கியமானது அடுத்தவனைப் பாத்து, இரக்கத்தை காட்றது! இது அல்லாராலியும் செய்ய முடியற ஒண்ணுதான். அத்தக் காட்டாம இருந்தியானா, ஒனக்குக் கண்ணு ரெண்டு இருந்தாக்காட்டியும், தோ... அங்க அந்த மண்ணுலேருந்து மொளைச்சு நிக்குதே.... அந்த மரத்துக்கும் ஒனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லேன்னு காட்டமாவே சொல்றாரு.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். [577]


திரும்பவும் அதேதான்! கண்ணுல இரக்கத்தைக் காட்டாதவங்க கண்ணு இருக்கறவங்கன்னே கருதப்பட மாட்டாங்க. அதே மாரி, உனக்கு உண்மையிலேயே கண்ணு இருக்குன்னா இரக்கம்ன்றது இல்லாம இருக்கவும் முடியாதுன்னு அடிச்சுச் சொல்றாரு.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு,. [578]


செய்ய வேண்டிய காரியம்லாம் கெடாம, கண்ணாலியே அத்தினியும் நடத்திகிட்டுப் போற தெறமையான ஆளுங்களுக்கு இந்த உலகமே சொந்தமாயிருமாம்! "இந்தா..... இந்த ஆளைக் கவனிச்சுக்கோ, உனக்கா.. ஒன் காரியத்த சீக்கிரமே முடிச்சுடறேன்; நீ அப்பறமா வந்து என்னியப் பாரு; யோவ், யாருப்பா இவன்? கொஞ்சம் நகத்து அவனை; சீக்கிரம் பேசி முடிப்பா" இப்பிடி பலவிதமா கண்ணாலியே பேசி தன் வேலையைப் பாத்துக்கறவந்தான் தலைவனா ஆகி, ஊரையே ஆளக்கூடிய தகுதி வரும்னு கோடி காட்டறாரு.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. [579]


"இப்ப இன்னும் கொஞ்சம் மேல போயி, இந்த கண்ணோட்டத்தோட பெருமையைச் சொல்லப்பாக்கறாரு ஐயன். இது கொஞ்சம் கஸ்டமான விசயம்ன்றத மொதல்லியே சொல்லிடறேன். இருந்தாலும் எது கஸ்டமோ அதைச் செய்யறதுலதானே ஒருத்தன் வாள்க்கை பெருமையாப் பேசப்படுது! அதுனால, இதைக் கேட்டுக்கோ! செஞ்சியானா ரொம்ப நல்லது! முடியலேன்னாலும், அதைச் செய்யறவனை ஏமாளின்னு மட்டும் கிண்டல் பண்ணாம இரு! அதுவே பெருசு!" என ஒரு நீண்ட முன்னுரை முழக்கிவிட்டு மேலும் தொடர்ந்தான் மன்னார்!
இப்ப ஒருத்தனைப் பாக்கறே! அவன் செய்யற காரியம் தப்புன்னு தெரியுது. தண்டிச்சு அடக்கணும்னு நினைக்கறே! அப்பிடியாப்பட்ட ஆளுகிட்டயும், இரக்கம் காட்டி அவனோட குத்தத்தையும் பொறுத்துக்கறதே ஒரு தலைவனுக்கு ரொம்பவும் முக்கியமான கொணம். "புரிதலுக்கு நன்றி"ன்னு சாந்தமா சில பேரு சொல்லிட்டுப் போறாங்கள்ல.. அதுமாரின்னு வைச்சுக்கோயேன்!!

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். [580]


இதான் அல்ட்டிமேட்டு! அதாவது ரொம்ப ரொம்ப ஒசந்தது!
எல்லாருக்கும் இஸ்டமான கண்ணோட்டத்தை வேணும்னு நினைக்கறவன், தன்னோட பளகினவன் விஷத்தைக் கலந்து கொடுக்கறான்னு தெரிஞ்சாலும், அமைதியா அதை வாங்கிக் குடிச்சிட்டு, அவனோட சேந்து உக்காந்துகிட்டு சிரிச்சுகிட்டு இருப்பானாம்.

இந்த மேட்டரை அப்பிடியே எடுத்துகிட்டேன்னா அதுக்கும் ஒதாரணம் இருக்கு.... பொராணத்துல சிவன் மாரி... ஜீஸஸ் மாரி, கதைங்கள்ல சீஸர் மாரி!

இத்ஹியே, கொஞ்சம் சூட்சுமமாப் பாத்தியின்னா, .....சிலபேரு பக்கத்துல இருந்துகிட்டே நஞ்சு மாரி பேசுவாங்க ...இதுக்கு ஒதாரணமே தேவையில்ல! அவனவனுக்குப் புரியும்!... அவங்களையும் கூட அன்பாவே நடத்தினா, அவனும் ஒருநாளைக்கு மாறி, நல்லபுத்தி வந்து, ஒன்னிய விரும்ப ஆரம்பிச்சிடுவான்னும் எடுத்துக்கலாம்!


"சொன்னதெல்லாம் வெளங்கிச்சா சங்கரு! இப்ப திரும்பவும் இந்தப் பத்துக் குறளையும் படிச்சுப்பாரு. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமா இருந்து ஒவ்வொருத்தனையும் படிப்படியா ஒசத்திக்கினே போறது புரியும்."
என முடித்தான் மயிலை மன்னார்.

"நான் இந்த அதிகாரத்தைத்தான் சொன்னேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது??" என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'அட! இது பெரிய கம்பசித்திரமாக்கும்! என்னைப் பாக்கலியேன்னு நான் கோவிச்சுப்பேன்னு நீ நெனைச்சுகிட்டு பயந்துகினே ஒரு ஓரத்துல பம்மிக்கினு இருந்தே! வந்து ஏறங்கினதுமே நோட்டம் வுட்ட்டுட்டேன்! அதான், நான் அதைப் பத்தியே கேக்காம நேரா ஒங்கிட்டவந்து, அன்பாப் பேசினதும், ஒனக்கு ஆச்சரியம் தாங்கலை! அதான் 'இப்ப பண்ணினதைப் பத்தி சொல்லு'ன்னு நீ கொக்கி போட்டதும் புரிஞ்சுகிட்டேன்!
இப்பப்பாரு! நாயர் நமக்கெல்லாம் விஷம் கொடுக்கப்போறாரு! நாம அதியும் சிரிச்சுக்கிட்டே சாப்பிடத்தானே போறோம்! என்ன நா சொல்றது சரிதானே நாயர்? டீ, வடை ரெடியா? ' என நாயரைப் பார்த்துச் சிரித்தான் மன்னார்!

'போப்பா மன்னார்! நினிக்கு எப்பவும் வெளையாட்டுத்தான்' எனச் சொல்லியவாறே, மசால் வடையை எடுத்துக் கொடுத்துவிட்டு, டீ ஆற்றத் தொடங்கினார் நாயர்!

நான் அவர்களிருவரையும் கண்ணோட்டினேன், வடையைச் சுவைத்தபடியே!

**********************

கண்ணோட்டம் (கண்+ஓட்டம் or நோட்டம்), glance; 2. regard, kindness, favour; 3. guess by the eye.

Monday, June 09, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 21 'ஒழுக்கமுடைமை'
//மறப்பினும் ஒத்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்
இந்த குறளின் பொருள் என்ன? இதில் சொல்லப்படும் 'பிறப்பொழுக்கம்' என்பது என்ன?ஜாதி கட்டுமானமா? ஆம் என்றால் வள்ளுவர் வருணாசிரமத்தை ஆதரித்து குறள் எழுதினாரா?//


செல்வன் கேட்ட இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு, மயிலை மன்னாரிடம் போனேன்.

இதையும் காட்டினேன்.

படித்தான். நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஒரு பீடியை வலித்தான். சற்று நேரம் பொறுத்து 'கடகட'வெனச் சிரித்தான்..... கண்களில் நீர் வழியச் சிரித்தான்!!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. விநோதமாக அவனைப் பார்த்தேன்.

அவன் இப்படி நடந்துகொண்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை.

"மன்னார்! உனக்கு ஒண்ணும் ஆகலியே! நல்லாத்தானே இருக்கே?" என ஒருவிதப் பயத்துடன் கேட்டேன்.

சிரிப்பை நிறுத்திவிட்டு என்னை ஒருவித சோகத்துடன் பார்த்தான்.

"ஐயன் கொறளு எளுதி ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிருச்சு. ஆனா, இதுவரைக்கு அல்லாரும் சும்மா மேம்புல்லை மேயற மாரி, தனக்கு வோணும்ன்றத மாட்டுந்தான் பாக்கறாங்காளே ஒளிய, அவரு சொல்ல வந்த கருத்து இன்னான்னு, சிந்திச்சுப் பாக்கவே இல்ல. அத்த வுடு! ஒரு கருத்துக்கு பத்து கொறளுன்னு எளுதியிருக்காரு. எதுனாச்சும் ஒரு அதிகாரத்த மட்டும் எடுத்துகிட்டு. அதுல இன்னா சொல்ல வராருன்னு பாக்கறாங்களான்னா, அதுவும் இல்ல. அது மட்டுமா? அவரு சொன்னத தனக்கு ஏத்தமாரி அர்த்தம் சொல்றதுன்னு ஆரம்பிச்சு, இப்ப தனக்கு ஏத்தாப்பல, கொறள மாத்தக் கூட தயங்காம செய்யறாங்க. இப்பிடியே போனா இது எங்கே போயி முடியுமின்னு ஆராலியும் சொல்ல முடியாது.

ஒன்னோட தோஸ்த்துன்னு சொல்லுவியே, அதான் ஒங்க செல்வன், அவரு தெரிஞ்சு செஞ்சாரோ, தெரியாமச் செஞ்சாரோ, எனக்குத் தெரியல. ஆனா, ரொம்ப நாளா நான் மனசுல நெனைச்சுகிட்டு இருந்த ஒரு விசயத்தச் சொல்றதுக்கு நல்லாவே ஒதவி பண்ணியிருக்காரு. அதுக்குன்னே அவரு இப்ப எனக்கும் தோஸ்த்தாயிட்டாரு!" என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.

ஏற்கெனவே சென்னை வெயிலின் கொடுமை தாங்காமல் தவித்த எனக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது.

"என்ன சொல்றே மன்னார்? நான் இந்தக் குறளை எடுத்துக் கொண்டு உன்னிடம் வந்திருக்கவே கூடாது என நினைக்கிறேன். சரி, நான் வர்றேன். அப்புறமாப் பார்க்கலாம்" என எழுந்தேன்.

ஒரு வலுவான கை என்னை அழுத்தி உட்கார வைத்தது. பதட்டத்துடன் திரும்பினேன். நிஜமாகவே மன்னாரின் முகத்தில் கோபக்கனல் வீசியது. அதிர்ந்து போய் உட்கார்ந்தேன்.

"இப்ப நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே! ஒன் தோஸ்த்து செல்வன் சொன்ன இந்தக் கொறளு ஒண்ணு போதும்! நான் சொல்ல வேண்டியதுக்கு. இதுல சில பலான பலான விசயம்லாம் வரும். ஆனா, அது,.... அது இல்ல! நான் சொல்லச் சொல்ல ஒனக்குப் புரியும்.

ஒரு சாதாரணமான சொல்லு. அதுக்கான அர்த்தமே வேற. ஆனா, நாளாவட்டத்துல, அதுக்கு வேறொற அர்த்தம் ரொம்பவே பாப்புலராயிடுது. இப்ப அந்த சொல்லை சொல்றதே தப்புன்னு ஒரு அபிப்பிராயம் வந்திருது! நீ ஒரு பெரிய தமிள்........ ஆங்...... அது இன்னா?.... ஆங்... அதான்... அறிஞன்.... பெரிய தமிள் அறிவாளி!... நீ இத்தப் படிக்கறே! இதுக்கு அப்பிடியே பொருள் சொல்ல முடியாம பம்முறே! ஏன்னா இப்ப அது ஒரு 'கெட்ட வார்த்தை'! "நான் ஆரு? எனிக்கு இன்னா பேரு? இப்பப் போயி இதுக்கு நான் அர்த்தம் சொன்னா ஊரு ஒலகம் என்னைப் பத்தி இன்னா சொல்லும். போயும் போயும் ஒரு வள்ளுவனுக்காவ, நான் என்னோட இமேஜைக் கெடுத்துக்கறதா"ன்னு நெனைக்கறான். கொஞ்சம் ரோசனை பண்றான்.

இப்பத்தான் அவனுக்கு அவனோட ஆத்தா நெனைப்பு வருது! அதாம்ப்பா! நீங்கள்லாம் அடிக்கடி சொல்லிகிட்டுத் திரியுறீங்களே.. அந்தத் தமிளன்னை... அவள தொணைக்கு இளுத்துக்கறான்! அவ கொடுத்த பாலுல வளந்த பய.. இப்ப அவளையே சந்திக்கு இளுத்து, கொறள்ல ஒரு சொல்லை இப்பிடியும் அப்பிடியுமா மாத்தறான். ஆமாம்ப்பா.. ஐயன் எளுதின கொறளையே மாத்தறான். இதுக்கு மத்த ஆளுங்களையும் கூடச் சேத்துக்கறான்..... பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கூப்பிடறான். அவங்களும் வந்து, 'ஐயா சொல்றதுதான் சரி; ஐயன் இப்பிடி சொல்லியிருக்க மாட்டார்'னு ஜால்ரா போடறாங்க. இப்ப ஐயன் எளுதினது மறைஞ்சுபோய், ஒரு புதுக் கொறளு,....... அதுக்குப் புதுப் புது அர்த்தம்ல்லாம் வந்து... இதான் ஐயன் கொறளுன்னு ஆகிப்போயிடுது! இதான் நடக்குது இப்ப!" என மேலும் தொடர்ந்தான் மன்னார்.

"மன்னார்! உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு நீ இப்பிடியெல்லாம் பேசறே?" என அதட்டினேன் நான்.

மன்னார் என்னை பரிதாபத்துடன் பார்த்தான். அவன் கண்களில் நீர் ததும்பியது.

நான் பதறிப் போனேன்!

"சொல்லு மன்னார். நீ என்ன சொல்லணுமோ சொல்லு. நான் கேட்டுக்கறேன். அதுக்காக நீ இப்படியெல்லாம் பேசாதே" என அவனை வேண்டினேன்.

"ஓத்து" என்றான் மன்னார்.

ஒரே அதிர்ச்சி எனக்கு! மன்னாரா,...... என் மயிலை மன்னாரா.... இப்படியெல்லாம் பேசுவது என நடுங்கினேன்.

"என்ன சொல்றே மன்னார்?' என்றேன்.

"ஒத்து" என்றான் மன்னார்.

'ஓ! 'ஒத்து'ன்றியா? இப்ப நான் எதை ஒத்துக்கணும்? இல்லை.... எங்கே ஒத்திப் போகணும்?' எனச் சிரித்தேன்.

மீண்டும் "ஓத்து" என்றான் மன்னார்.

'இது கெட்ட வார்த்தை மன்னார்!! ரவுடின்னாலும், நீ இப்படியெல்லாம் என்கிட்ட பேசமாட்டியே! இப்ப என் இப்படியெல்லாம் பேசறே' என நான் வினவினேன்.

'இப்பத்தான் இது கெட்ட வார்த்தை. ஆனா, எங்க ஐயன் காலத்துல இது கெட்ட வார்த்தை இல்லை. இதுக்கு இன்னா அர்த்தம் தெரியுமா? 'ஓத்து'ன்னா 'வேதம்லாம் படிக்கற பாடசாலை' எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்.

ஏதோ சொல்ல வருகிறான் என உஷாரான நான், 'ம்ம். அப்புறம்?' என அவனைத் தூண்டினேன்.

'ஒரு பொஸ்தகத்தைப் படிக்கறே. படிச்சு முடிச்சிட்டு தூக்கிப் போட்டுடறே! அதுக்குப் பேரு படிப்பு. இப்ப ரொம்பப் பேரு. படிக்கறது ஒண்ணு; ....... பி.ஏ., எம்.ஏ.ன்னு என்னமோ படிக்கறாங்க,..... ஆனா. பண்றது இன்னாமோ பெஞ்சு தொடைக்கற வேலை. ஆனாக்காண்டி, ஒரு சமாச்சாரத்தை நல்லாப் படிக்கணும்னா இன்னா பண்ணனும்? திரும்பத் திரும்பப் படிக்கணும். அதுக்கு 'ஓதறது'ன்னு பேரு.
அந்தக் காலத்துல... அதாம்ப்பா... ஒரு ரெண்டாயிரம் வருசத்துக்கு முந்தி, .....இந்த வேதம்னு சொல்லுவாங்களே, அதைப் படிக்கறவங்க அல்லாரும், சொல்றவன் வாயைப் பார்த்துகிட்டே,..... அவன் ஒதடு அசைஞ்சு அதுலேர்ந்து வர்ற வார்த்தையைக் கேட்டுகிட்டே .....திருப்பித் திருப்பிச் சொல்லியே கத்துக்குவாங்க. அதாவது, திரும்பத் திரும்ப ஓதியே கத்துக்குவாங்க. அவங்களுக்கு பார்ப்பான்னு பேரு.

இதுவரைக்கும் புரிஞ்சுதா?

இப்ப இவங்க சொல்றதுக்கு 'ஓதுதல்'னு பேரு. இப்பிடி 'ஓத்து'கிட்டு... அதாம்ப்பா ... ஓதியே கத்துகிட்டவங்க..... மறந்தாக் கூட மறுபடியும் இன்னொருத்தன் வாயைப் "பார்த்து", அவன் சொல்றதைக் கேட்டு, கத்துக்கிட முடியும். அவந்தான் "பார்ப்பான்"
ஆனாக்காண்டிக்கும், நீ எந்தப் பிறப்புல பிறந்திருந்தாக்கூட, ஒளுக்கம் தவறி நடந்தியானா, ...நீ பொறந்த பொறப்பு எம்மாம் பெரிய பொறப்புன்னு ஊரு ஒலகம் சொன்னாலுங்கூட,..... இனிமே ஒனக்கு மருவாதி கிடையாது!

இதான் ஐயன் சொன்னது.

இன்னா முளிக்கறே? செல்வன் சொன்னது இது இல்லியேன்னா? அதான் நான் இம்மா நேரம் கூவினேனே!

செல்வன் சொன்னது ஐயன் கொறள் இல்லே!
இப்ப அவரு இன்னா சொன்னாரு?

"மறப்பினும் த்துக்கொள்ளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்"

இது இல்லே ஐயன் எளுதினது.


"மறப்பினும் த்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்[புஒ]ழுக்கம் குன்றக் கெடும்"

இதான் ஐயன் சொன்னது!


ஐயன் சொன்னப்ப 'ஓத்து'ன்றதுக்கு இருந்த அர்த்தம் வேற.
இப்ப அதுக்கு இருக்கற அர்த்தம் வேற!

இப்ப அது ஒரு கெட்ட வார்த்தை! நீ கூட பதறினியே! மன்னாரா இதெல்லாம் சொல்றான்னு..... அதுமாரியான கெட்ட வார்த்தை!

ஒங்க தமிள் அறிவாளிங்கல்லாம் அதை ஐயன் வாயிலேர்ந்து வந்துதுன்னு சொல்ல வுட்டுடுவாங்களா? இப்ப, இவங்க தானே தமிளைக் காப்பாத்த அவதாரம் எடுத்து வந்திருக்காங்க! ஐயன் மேல ஒரு பளி விள வுட்டுருவாங்களா? "ஓத்து"ன்றத 'ஒத்து'ன்னு மாத்தி, இதான் ஐயன் சொன்னதுன்னு, ஒரு புதுக் கொறளை வுட்டுட்டாங்க. இதை மதுரை திட்டமும் ஏத்துகிட்டதுதான் பெரிய சோகம்!" எனச் சொல்லி என்னைப் பார்த்தான் மன்னார்-
அவனது சோகம் என்னை இப்போது முழுமையாகத் தாக்கியது.

"நீ சொல்லுவது என்னவெனப் புரிகிறது மன்னார்!' என அவன் தோளில் ஆதரவாய்க் கை வைத்தேன்.

"இது மட்டுமில்ல சங்கரு! 'பிறப்பு, ........ஒழுக்கம் குன்றக் கெடும்'னு ஐயன் சொன்னத, 'பிறப்பொழுக்கம்'னு பதம் பிரிச்சு, ஒன்னோட தோஸ்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாரு, அதான் என்னிய இம்மாந் தூரம் பேச வைச்சது. அதப்பத்தி இன்னோரு நாளு சொல்றேன். ஐயனைக் கொறை சொல்றத வுட்டு, அவர் சொன்னதைப் புரிஞ்சுக்கப் பாருங்கப்பா'' எனச் சொல்லிச் சமாதானமானான் மயிலை மன்னார்.

நான் நாயரைப் பார்த்துக் கண்ணடித்தேன்.

உடனே, இரு தட்டுகளில் மசால் வடையை வைத்து எங்கள் பக்கம் நீட்டினார் நாயர்.

'இன்னிக்கு டீ வேணாம். ரெண்டு நன்னாரி ஷர்பத்' என அதட்டலாகச் சொன்னேன் நான்.

"இம்மாந்நேரம் கேட்டுட்டு இப்பிடி சொல்றியே! இருக்கறத மாத்தாதே. நாயர்! டீயே போடுப்பா" என்றான் மயிலை மன்னார்!

வெட்கித் தலை குனிந்தேன் நான்!

Wednesday, May 14, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"

"என்னப்பா வருத்தமா இருக்கற மாரி கீறே! இன்னா சமாச்சாரம்? ஆராச்சும் இன்னாவாவுது சொன்னாங்களா? சொல்லு!" என மயிலை மன்னார் மூன்றாம் முறையாக என்னைக் கேட்டான்!

நான் பதில் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்!

"இப்ப, நீ சொல்லப் போறியா இல்லியா? இல்லேன்னா கிளம்பு. எடத்தைக் காலி பண்ணு!" எனச் சற்று கோபத்துடன் அதட்டவே, அவனைப் பார்த்து,

'சரி, சொல்றேன். ஆனா, நீ என்னைக் கோவிச்சுக்கக்கூடாது! நான் செஞ்ச ஒரு காரியம் எனக்குப் பிடிக்கலை. அதான்!' எனத் தயக்கத்துடன் இழுத்தேன்!

'எனக்குத் தெரியும் நீ இன்னா சொல்லப்போறேன்னு! நானே ஒன்னியக் கேக்கணும்னுதான் இருந்தேன்! நீ அப்பிடியாப்பட்ட ஆளில்லியே! இவன் ஏன் இதுலெல்லாம் போயி வாயைக் கொடுக்கறான்னு நெனைச்சேன்! சரி, பட்டுன்னு விசயத்தைச் சொல்லு' என்றான்.

'ஒண்ணுமில்லேப்பா! எம்மனசுக்கு சரின்னு பட்ட கருத்தை .. கவனிச்சுக்கோ.. கருத்தை மட்டும் தான் சொன்னேன். அதைத் தனிப்பட்ட முறையிலே எடுத்துகிட்டு, நான் அவங்களை தாக்கினதா கொஞ்சப்பேரு நினைக்கறாங்க! அதான் இன்னா பண்றதுன்னு உங்கிட்ட கேட்டா நீ எதுனாச்சும் சொல்லுவியேன்னு வந்தேன்' என்றேன்.

'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! இத்தப் பத்தி ஐயன் செம சூடா சொல்லியிருக்காரு! இப்ப ஒனக்காக அதச் சொல்றேன். கேட்டுக்கோ!' என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றிவிட்டான்! மயிலை. மன்னார்!

இனி வருவது குறளும் அதற்கு மயிலை. மன்னார் அளித்த விளக்கமும்!

"அதிகாரம் - 32" "இன்னா செய்யாமை

'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [311]


இப்ப ஒரு காரியம் செஞ்சேன்னா, ஒனக்கு நெறைய துட்டு கிடைக்கும்னு வைச்சுக்கோ! அதும் மூலமா, நீ பெரிய பணக்காரனாக் கூட ஆயிறலாம்னும் வைச்சுக்கோ! ஆனாக்காண்டி, அந்தக் காரியத்தப் பண்ணினா, மத்தவங்களுக்கு கஸ்டம் வரும்னா, அத்தச் செய்யாமலியே இருக்கறதுதான் ரொம்ப நல்லது. அதான் மனசு சுத்தமா இருக்கறவங்களோட கொள்கைன்னு ஐயன் சொல்றாரு.


'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.' [312]


அத்தோட வுடலை வள்ளுவரு. இந்த மாரி மனசு சுத்தமா இருக்கறவங்களுக்கு இன்னோரு கொள்கையும் இருக்குதாம்! அத்து இன்னான்னா, அடுத்தவங்க வந்து ஒரு கஸ்டத்தைக் கொடுத்தாகூட, அதை சகிச்சுகிட்டு, பொறுமையாப் போயிருவாங்க. திருப்பி அவங்களுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காம..!! புரியுதா?


'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.' [313]


இப்ப, நீ ஒண்ணுமே பண்ணலைன்னு வைச்சுக்குவோம். ஆனா, அடுத்த ஆளு ஒருத்தர் வந்து உனக்குத் தொல்லை கொடுத்து வருத்தத்தைக் கொடுக்கறாரு. இப்ப ஒனக்கு இன்னா தோணும்? பதிலுக்கு இன்னா சொல்லலாம்... இல்லாக்கட்டி.. இன்னா செய்யலாம்னுதானே! அத்தான் கூடாது! அப்பிடி நீயும் திருப்பிச் செஞ்சியானா, அது ஒன்னியப் போட்டு வருத்திக்கிட்டே இருக்கும்னு எச்சரிக்கை பண்றாரு ஐயன்!


'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.' [314]


இது ஒனக்கு மட்டுமில்ல... நம்ம ஆளுங்க அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளுதான்! ஒவ்வொருத்தனும் ஒரு ஆயிரம் வாட்டியாவது கேட்டிருப்பாங்க! கேட்டு இன்னா புண்ணியம்? அப்பிடி செய்யறவங்க ரொம்பக் கம்மி!

ஒருத்தர் ஒரு கஸ்டத்தை ஒனக்குக் கொடுத்தார்னா, திருப்பி அவனுக்கு நீ ஒரு கஸ்டத்தைக் கொடுக்காதேன்னு முந்தின குறள்ல சொன்னாருல்ல? இப்ப அதுக்கும் மேல ஒரு படி போயி, அது மட்டுமில்லைடா மவனே! திருப்பி செய்யறதா இருந்தா, நீ அவஙளுக்கு ஒரு நல்ல காரியத்தைப் பண்ணிருன்னு புத்தி சொல்றாரு. நல்லாக் கேட்டுக்கோ!



'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]


இப்ப வீதியில நடந்து போய்க்கினே கீறே நீ! ஒரு ஆளு அடிபட்டு விளுந்து கிடக்கான். ரெத்தமாக் கொட்டுது. அத்தப் பாத்துகினே, நம்ம சோலியப் பாக்கப் போவோம்னு போயிராதே! ஒடனே, அது ஒங்குடுமத்துலியே ஒருத்தருக்கு நடந்த மாரி நெனைச்சுகினு, அந்த ஆளுக்கு வேண்டிய ஒதவியை நீ செய்யணும்! அப்பத்தான் ஒனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவு இருக்குதுன்னு அர்த்தமாம். அறிவில்லாதவந்தான், நமக்கென்ன போச்சுன்னு போயிருவான்னு சொல்லாம சொல்லி வெளங்க வைக்கறாரு. புத்தர், ஏசுநாதர், அல்லான்னு எல்லா பெரிய மனுசங்களும் சொல்லிகினே இருக்கற ஒரு சமாச்சாரம் இது!


'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.' [316]


கஸ்டம்னா இன்னான்னு ஒனக்குப் புரியுந்தானே? வருத்தம்னா இன்னான்னு தெரியுந்தானே? அப்போ அது மாரி விசயம்லாம் மறந்துங்கூட அடுத்தவனுக்குப் பண்ண நெனைக்காதேன்னு கறாராச் சொல்றாரு இதுல!

'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.' [317]


மேலே சொன்னதையேத்தான் இங்கியும் அழுத்தந் திருத்தமாச் சொல்றாரு, மறுபடியும்!
தனக்குத் துன்பம்னு மனசுல பட்ட எதையும் பிறத்தியாருக்குச் செய்யாம இருக்கறதுதான் ஒலகத்துலியே தலை சிறந்த அறம்.. தருமம்னு திரும்பவும் சொல்றாரு.



'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்.' [318]


ஒருத்தன் கொடுக்கற வருத்தம் எப்பிடியாப்பட்டதுன்னு ஒனக்குத் தெரியுமில்ல! இப்ப நான் ஓங்கி 'பளார்'னு ஒரு அறை விட்டேன்னா எப்பிடி இருக்கும் ஒனக்கு! எம்மாம் வலிக்கும்! அந்த வலி ஒனக்குத் தெரியுமின்னா, நீ அதே போல, அடுத்தவனுக்குச் செய்யாதேன்னு இன்னும் ஒரு தபா சொல்றாரு. இன்னாடா, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாரேன்னு நெனைக்காம, நம்ம மரமண்டையில ஏத்தறதுக்காவத்தான் இப்பிடி சொல்றாருன்னு புரிஞ்சுகிட்டா ஒனக்கு நல்லது! சரியா!


'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.' [319]

ஏன் இத்தினி தபா ஐயன் சொன்னாருன்றதுக்கான காரணத்த இங்க சொல்றாரு. நீ ஒருத்தனுக்கு ஒரு துன்பத்தைக் கொடுத்தியானா, ஒனக்கு ஒரு பெரிய கஸ்டம் கொஞ்ச நேரத்துலியே பின்னாடியே வந்து நிக்குமாம்! அத்த எப்பிடி சொல்றாருன்னா, நீ காலையில கொடுத்த கஸ்டம் சாயங்காலமே ஒன் வூட்டாண்டை வந்து கதவைத் தட்டுமாம்! நான் சொல்றதை நீ ஒனக்கு மட்டும் எடுத்துக்கோ! அவனுக்கு வரலியே, இவனுக்கு ஒண்ணும் ஆவலியேன்னு மயங்காத! அவனவன் கஸ்டம் அவனவனுக்குத் தெரியும். நீ நெதானமா நடந்துக்கோ! இன்னா நா சொல்றது!

'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.' [320]


முன்ன சொன்ன அதேதான்! நீ கொடுத்த கஸ்டம் ஒன்னியவே வந்து சேரும்! அதுனால, ஒனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறியா, அப்படீன்னா, வேற யாருக்கும் நீ அத்தச் செய்யாம இரு.
ஒனக்கு இந்த வியாதி வேணாம்னா, இந்த வியாதியைத் தேடிப் போகாதே!


"இன்னா! நா சொல்றது எல்லாம் புரிஞ்சுதா! ஒனக்குப் பிடிக்கலியா, பேசாம போய்க்கினே இரு. இந்த ஒலகத்துல ஆரும் தன்னோட தப்பை அடுத்தவன் சொல்லிக் காட்டறத விரும்பறதில்ல. அவன் அப்பிடி செய்யறதுல ஒரு தப்பும் இல்லேன்னுதான் நானும் சொல்லுவேன்! ஏதோ அவனுக்குப் பிடிச்சிருக்கு; செய்யறான். ஒனக்கு அதுனால, ஒரு பேஜாரும் இல்லேன்னா, 'கம்'முனு கண்டுக்காம போயிரு. ஒன்னியக் கேட்டா மட்டும் சொல்லு. அப்பவும் தன்மையா சொல்லு. இப்பிடி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னு சொல்லிப் பாரு. அப்பிடி நீ சொன்னது அவனுக்குப் பிடிக்கலியா... வுடு ஜூட்!
இப்ப நா சொன்னது ஒனக்குப் பிடிச்சுதா, பிடிக்கலியா?'
எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.

'நீ என்னோட நண்பண்டா! நீ சொன்னா, எனக்குப் பிடிக்காமப் போகுமா!' எனச் சொல்லியபடியே இன்னும் 2 மசால் வடையும் 'டீ'யும் தரச் சொல்லி நாயரைக் கேட்டேன்!

Wednesday, March 05, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!

"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்!
[ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை மயிலைக்குப் போகும்போது தானும் வருவதாகச் சொல்லியிருந்தார்!! ]

"ஸார் பறைஞ்சது செரிதன்னே! ஞான் கூட ஆயாள் எப்போ வரும், எங்கனே வரும்னு தெரியாம, பலசமயம் குழம்பிப் போயுண்டு!" எனச் சொல்லி நாயரும் சிரித்தார்!

'சரி! அவர் வரும் வரை நாயர் ஸ்பெஷல் மசால் வடை, டீ சாப்பிடுவோம்!" என நான் சொன்னதும் நாயர் சுறுசுறுப்பானார்.

ஒரு ஆட்டோ பலத்த உறுமலுடன் வந்து நின்றது!

"வந்து ரொம்ப நேரமாச்சா நண்பா! ஒரு பிரச்சினைக்கு மத்தியஸ்தம் பண்ணக் கூப்பிட்டிருந்தாங்க! அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு! இன்னா நாயர்! நம்ம ஆளுங்களை நல்லா கவனிச்சுக்கினியா?' எனக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பக்கத்தில் இருந்த மஞ்சூராரைக் கவனித்தவன், "ஓ! இவர்தான் நீ சொன்ன உங்க தலைவரா? முத்தமிளுக்கே சொந்தம்னு சொன்னியே! அவர்தான் இவரா? இன்னா தலீவா! செங்கோல்லாம் எடுத்துக்கினுதானே வந்திருக்கீங்க?" எனக் கண்ணடித்தான்!

மஞ்சூரார் சற்றுக் குழப்பத்துடன், மன்னார் ஏதோ கிண்டல் செய்கிறான் என மட்டும் புரிந்து கொண்டு, என்னை நோக்க,
நான் அவரைப் பார்த்து சிரித்தபடியே, " பதறாதீங்க சுந்தர்! மன்னார் எப்பவுமே இப்படித்தான்! எல்லாருடனும் உடனே நட்பு பாராட்டி, சொந்தமாகப் பாவிக்கத் தொடங்கிடுவான்! அவன் கேட்ட செங்கோல் உங்க பேனாவைத் தான்! இன்னிக்கு உங்களுக்குத்தான் வேலை! நீங்கதான் எழுதிக்கணும் அவன் சொல்வதை! உங்களுக்குத்தான் ஏதோ மேட்டர் சொல்லப் போறான்னு நினைக்கிறேன்!" என்றதும் சமாதானமாகி, பேப்பர் பேனாவை சிரித்துக் கொண்டே எடுத்தார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்!
"செங்கோன்மை" -- அதிகாரம் 55

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை." [541]

இப்ப ஒரு குழுமத்துக்கு தலையா நீங்க இருக்கீங்கன்னு சங்கர் சொன்னான். ரொம்ப நல்ல விசயம். நல்லாவாவும் நடத்துறீங்கன்னும் சொன்னான். கேக்கவே சந்தோசமா இருக்கு. ஒரு தல இன்னா பண்ணனும்னு இதுல ஐயன் சொல்றாரு.
ஏதோ ஒரு தலைப்புல சில பேரு வந்து ஏடாகூடமா எளுதறாங்கன்னு வைச்சுப்போம். அதை எளுதறது யாருன்னு தக்கபடி விசாரிச்சு, தெரிஞ்ச ஆளு, புது ஆளுன்னு பாக்காம, நடுநிலைமையா ஆராய்ஞ்சு பாத்து, அததுக்கு தகுந்த தீர்ப்போ, தண்டனையோ கொடுக்கறதுதான் சரியான வளின்னு சொல்றாரு!
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி." [542]

இந்த ஒலகத்துல இருக்கற உயிருங்கல்லாம் மானத்துலேருந்து பெய்யற மளையை நம்பித்தான் வாளுது! அதேபோல, ஒரு தலீவன் இன்னாமாரி தன்னோட மக்களை நடத்தறான்னு அவனோட செங்கோலைப் பாத்துகிட்டே இருக்காங்களாம். பாராட்டறதுக்குப் பாராட்டி, தட்றதுக்குத் தட்ட, உன்னோட செங்கோலு, அதாம்ப்பா.. பேனா.. தயங்காம இருந்தாத்தான் அல்லாமும் நல்லா நடக்குமாம்!
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." [543]

நல்லாப் படிச்சவங்க கூட, இந்த இடத்துல நியாயமா நடத்துவாங்க நம்மளைன்னு ஒரு நம்பிக்கையோட வந்து எளுதறதுக்குக் கூட ஒன்னப் போல தல நடத்துற விதத்துலதான் இருக்கு. இப்ப, எங்க சீதாம்மா, ஜப்பார் அய்யா போல ஆளுங்கள்லாம் முத்தமிள்ல ரொம்ப சிறப்பா எளுதறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாத்துக்கும் காரணம் நீங்க நடத்தற விதந்தான்னு இதைப் புரிஞ்சுக்கணும்! சரியா!
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு." [544]

ஒரு குளுமத்துல இருக்கற ஆர்கிட்டயும் விரோதம் பாராட்டாம, அன்பா அவங்களை நடத்திகிட்டுப் போனா, அவுக அல்லாரும் 'ஆஹா! நம்ம மஞ்சூரார் போல உண்டா!'ன்னு உங்க கூடவே நிப்பாங்க! இது ரொம்ப முக்கியமா கவனத்துல நீங்க வைச்சுக்கணும்!
"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு." [545]

ஒரு ராசா சரியான வளியில ஆட்சி பண்ணினான்னா, பெய்யற மளை கூட மொறை தவறாமப் பெய்யுமாம். விளையற பொருளு கூட நல்லா விளையுமாம்! இது எப்பிடி எனக்குப் பொருந்தும்னு தானே கேக்க வரீங்க! பெய்யற மளைன்றது சீதாம்மா போல ஆளுங்க ரெகுலரா எளுதறது! விளையற பொருளு... நல்ல சமாச்சாரமெல்லாம் நிறைய வந்துகிட்டே இருக்கறது! ரெண்டும் முக்கியம்! புரியுதுங்களா!;))
"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்." [546]


சண்டை போட்டு நாலஞ்சு பேரை விரட்டறது வீரமில்ல! செய்யற காரியத்த பாரபட்சமில்லாம பொதுவா ஒரு ராசா... நீங்க கூட மஞ்சூர் ராசான்னுதான் பேரு வைச்சிருக்கீங்களாமே!:))))... பொதுப்படையா ஒரு ராசா செஞ்சா அதான் பெரிய வீரமாம்!
"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்." [547]


ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!
"எண்பகத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்." [548]

நல்ல விஷயத்தை ஒருத்தர்.. இப்ப நம்ப சீதாம்மா மாதிரின்னு வைச்சுப்போமே... அவங்க வந்து சொல்ல வராங்க! அவங்களை எப்படி நாம வரவேற்கணும்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க! இதை வில்லங்கம் இல்லாம நான் பார்த்துக்கறேன்னு அவங்களுக்கு தெம்பு கொடுக்கணும். அப்ப, எவனாவது வந்து, ஏடாகூடமா கேள்வி கேட்டு, திசை திருப்பினா, அதைக் கண்டுக்காம விட்டா, அப்ப, அந்தப் பதிவு மட்டுமில்ல, தலையா நிக்கற உங்களோட பேனாவும்... செங்கோலும்... வளைஞ்சு போயிருமாம்! இதைக் கவனத்துல வைச்சுக்கங்க சாமி!
"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்." [549]

ஒங்க குளுமத்துல வேந்தன்னு ஒருத்தர் இருக்காருன்னு சங்கர் சொன்னான். ரெண்டு வார்த்தைல தன்னோட கருத்தை அடுத்தவனுக்கு அது புரியுதோ இல்லியோ.. சொல்லிட்டுப் போயிடுவாராம். அதாவது, அடுத்தவனையும் வருத்தாம, அதே சமயம் அவ மனசிலியும் பதியுற மாரி! இதுனால, வேந்தனுக்கும் சங்கடமில்லை! சொன்னவனும் புரிஞ்சுப்பான்! இப்பிடி நடந்துகிட்டா, தலைக்கு நல்லது! நான் சொல்லை! ஐயன் சொல்றாரு!

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்." [550]


இவ்ளோ சொல்லியும் ஒருத்தன் கேக்கலைன்னு வைச்சுக்குவோம்! அப்போ இன்னா பண்ணணும்! தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது, இடையிலே மொளைச்சிருக்கற சில களைங்களை எல்லாம் வெட்டிப் புடுங்கி எறியற மாதிரீன்னு ஐயன் சொல்றாரு!
"இன்னா! நான் சொன்னதைக் கேட்டு தெகைச்சுப் போயிட்டீங்களா? இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் நடத்திகிட்டு வர்றதா சொல்லியிருக்கான் நம்ம தோஸ்த்து! அதுனால, இதுவரைக்கும் பண்ற மாரியே பண்ணிகிட்டு வாங்க! சீதாம்மா போல ஆளுங்க ஒங்க பதிவுல எளுத வந்ததே ஒரு பெரிய விசயம்! அவுங்களைப் போல ஆளுங்க தொடர்ந்து எளுத நீங்கள்லாம் ஒதவி பண்ணனும்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்! இன்னாப்பா சங்கர்! நான் சொன்னதுல எதுனாச்சும் தப்பு இருக்கா?" என்று சிரித்தான் மயிலை மன்னார்!

"நீ என்னிக்காவது தப்பா சொல்லி இருக்கியா? நீ சொல்றதை முழு மனசோட ஆமோதிக்கிறேன்! நாயர்! இன்னும் ரெண்டு வடை!" எனச் சொன்னேன்!

"ஒங்காளு மெய்யாலுமே பெரிய ஆளுதான்யா!"......டீயை உறிஞ்சியபடியே என் தோளில் கை போட்டர் மஞ்சூரார்!

"எல்லாப் பெருமையும் ஐயனுக்கே" என்றபடி ஆட்டோவில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!

Tuesday, February 19, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 18 "அன்புடைமை"


புதன்கிழமை!

மாடவீதியில் நல்ல கூட்டம்!

'அடடா! இன்றைக்குப் போய் வந்தோமே! இன்னிக்கு பூம்பாவைத் திருநாளாச்சே! சாதாரண நாளுலியே மன்னாரைப் பார்க்க முடியாது! இன்னிக்கு நிச்சயமா முடியாது' என எண்ணியபடியே ஒரு ஆட்டோவைப் பிடிக்க விரைந்தேன்!

முதுகில் 'பளார்' என ஒரு அறை விழ, அதிர்ச்சியுடன் திரும்பினேன்!
'இம்மாந்தூரம் வந்திட்டு எங்களைப் பாக்காம போயிருவியோ?' என்றபடி சிரித்துக்கொண்டே மயிலை மன்னார்!

அடித்தது வலித்தாலும், அதற்குப் பின்னால் இருந்த அந்த அன்பை உணர்ந்த நான், 'உன்னைப் பார்க்காமல் போயிடுவேனாக்கும்! கூட்டமா இருக்கே! உன்னைப் பார்க்க முடியுமோன்னு நினைச்சேன்!' எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டேன்~!

'அடிச்சது ரொம்ப வலிச்சிருச்சா? இன்னிக்கு திருநாளாச்சே! செத்த பொண்ணை சாம்பல்லேர்ந்து ஒருத்தரு... அவரு பேரு இன்னா... ஆங்... யாரோ சம்பந்தராம்.. அவரு பாட்டுப் பாடி உசிரைக் கொணாந்தாராம்! நீயே கட்டிக்கப்பான்னு அந்தப் பொண்ணோட அப்பா சொல்ல, இவரு, ரொம்ப சமார்த்தியமா, 'இந்தப் பொண்ணுக்கு உசிரு கொடுத்த நான் அவளுக்கு அப்பா மாரி! அதுனால, இவ என் பொண்ணுன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாராம்! படா கில்லாடிய்யா அந்த ஆளு! ஆனாலும் அவரோட அன்பு இருக்கே, அத்தப் பாராட்டியே ஆவணும்' என மன்னார் என் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

கூடவே, 'இந்த அன்பு இருக்கே.... அதாம்ப்பா லவ்வு! அதுக்கு இன்னா வலு தெரியுமா? அத்தப்பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்னு சொல்றேன் கேளு! வேணுமின்னா எளுதிக்கோ!' என்று கண்ணைச் சிமிட்டினான்!

கரும்பு தின்னக் கூலியா என ஒரு கணம் நினைத்தவன், முதுகில் விழுந்த அடியின் வலி இன்னமும் உறைக்க, சிரித்துக் கொண்டே பேப்பர் பேனாவை எடுத்தேன்!

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-8 "அன்புடைமை"

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்நீர் பூசல் தரும்." [71]

இந்தக் குறளை மட்டும் நீ சரியாப் புரிஞ்சுகிட்டியானா, மத்த எதையும் நீ படிக்க வேணாம்! அவ்ளோ கரீட்டா அன்புக்கு ஒரு அளுத்தம் கொடுத்து எளுதியிருக்காரு வள்ளுவன் ஐயா! கவனமாக் கேளு!

ஒனக்கு ரொம்பவே பிடிச்ச ஒருத்தரு! அவருக்கு ஒரு துன்பம் வந்திருது! உங்கிட்ட சொல்றாரு அதை! நீ ஒண்னும் பண்ணலை! சும்மா கேட்டுக்கினுதான் இருக்கே! ஆனா, அவரு சொல்லச் சொல்ல ஒன் கண்ணுல நீரு தளும்புது! நீ கவனிக்கலை அத்த! கொஞ்சங்கொஞ்சமா அது உருண்டு ஒங்கண்ணுல்லேர்ந்து வளியுது! ஒன்னை அறியாமலியே நீ பீச்சாங்கையால அதைத் தொடைக்கறே! அவரு சொன்னது ஒனக்கு பொறுக்கல! தானா கண்ணு தண்ணி வுடுது! இருக்கற அடைப்பயும் தாண்டிக்கினு!

சரி! அத்த வுடு! நீ இந்த தண்ணியெல்லாம் தேக்கற இடத்தைப் பாத்துருக்கியா? ஒரு பெரிய மரக்கட்டை,... அதுக்கு தாளுன்னு பேரு... அதைப் போட்டு தடுத்திருப்பாங்க! அதைத் தொறந்துவிட்டா தண்ணி வெளியே போகும்! ஆனா, ஒரு பெரிய மளை வந்து வெள்ளம் பொறண்டு வருது! இப்ப, அந்தத் தாளு... அந்த அடைப்பான்... அது இன்னா பண்ணும்? தடுக்க முடியுமா அதால? அதையும் தாண்டி இப்ப இந்த வெள்ளம் ஓடி வந்திரும்!

அப்படித்தான் இந்த அன்புன்றது!

அணையெல்லாம் போட்டு இதைத் தடுக்க முடியாது! எந்தத் தடையையும் தாண்டி வெளிய வந்திருமாம்!

வேற எதையும் சொல்லாம, இந்த தாழைச் சொல்லி ஐயன் இன்னாமா சொல்லிருக்காரு பாத்தியா?!! இதுக்கு மேல அன்பைப் பத்தி இன்னா சொல்ல முடியும்ண்ற?

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு" [72]

இந்த அன்புன்றது எம்மாம் பெரிய விஷயம்னு இதுல சொல்றாருன்னு கேளு.
இந்த அன்புன்றது இல்லாதவங்க எல்லாம், எந்தப் பொருளைப் பாத்தாலும் தனக்கே தனக்குன்னு அலையுவாங்களாம். ஒண்ணையும் பிறத்தியாருக்குத் தராம தன்கிட்டயே வைச்சுப்பாங்களாம்.
அதே நேரம், ஒடம்புல மட்டுமில்லாம, மனசு பூரா அன்பை வைச்சிருக்கறவங்க, எதைப் பத்தியும் கவலைப்படாம, தன்னோட எலும்பைக்கூட கொடுப்பாங்களாம்.. அதாவது தங்களோட உடலையும் உசிரையும் கூட!
இதுக்கு மேல இன்னா வோணும்?

"அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு." [73]

இப்ப, நீ இருக்கே! உன்னிய நான் பாக்கறேன். எதுனால? இந்த சங்கர்ன்ற ஒடம்புக்குள்ள ஒரு உசிரு சேர்ந்து இருக்கறதால! அது இல்லாட்டி.... நீ ஒரு பொணம்தான்! சங்கர்னு இருந்து இப்ப செத்துப் போன பொணம்! இப்டி நான் சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காத! ஒனக்குப் புரியணுமேன்னுதான் சொல்றேன்!
ஒடம்புக்கு உசிரு எவ்ளோ முக்கியமோ அது மாரி, வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அன்போட இருக்கறது!
இதான் ஐயன் சொல்றது!

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு." [74]


இந்த அன்புங்கற விசயம் எப்பிடீன்னா, நீ இன்னாதான் செஞ்சாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாம எப்பவுமே உங்கிட்ட கொஞ்சங்கூடக் குறையாத அளவுல விருப்பமாவே, இது வைச்சுகிட்டு இருக்கறவங்ககிட்டே இருக்கும்.
இப்ப நான் ஒன் முதுகுல அடிச்சாக் கூட எங்கிட்ட பிரியமா இருக்கேல்ல... அது மாரின்னு வைச்சுக்கோயேன்!
இதனால இன்னா ஆவுது?
இன்னாடா! இந்தாளைப் போட்டு இப்பிடி தட்டிட்டோமேன்னு என்னிய நினைக்க வைக்குது!
இதுனால, நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற நட்பு இன்னமும் உறுதியாவுதில்ல?
அதேதான்!:))

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு." [75]


இப்ப இங்க இருக்கறப்ப முழுசா அன்பு காட்டி நீ இருந்தேன்னா, அதுவே நீ அடுத்த பிறவியிலியும் அன்பாவே இருக்கற மாரி வைச்சு ஒனக்கு பெரிய பெருமையைக் கொடுக்குமாம்!
[சில பேரு இந்த அடுத்த பிறவியை நம்புறாங்கள்ல... அதுல ஐயனும் ஒருத்தருன்றதை நெனைப்புல வைச்சுக்கோ!]

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை" [76]

இதுவரைக்கும் சொல்லாத ஒரு விசயத்தை ரொம்ப அசால்ட்டா சொல்றாரு ஐயன் இந்தக் குறள்ல!
அன்புதான் நல்லவங்க அல்லாரும் செய்யற ஒரு தனி சமாச்சாரம்னுதானே இதுவரைக்கும் நீ நினைச்சுகிட்டு இருந்தே!
அப்டியில்லியாம்!
ஒனக்கு ஒருத்தன் கெடுதி பண்றான்னு வைச்சுக்கோ! திருப்பி அவனை அடிக்கணும்னுதானே தோணும்?
அப்டி பண்ணாம அன்பா இருந்து பாரு!
இந்த அன்பு மூலமாவே அது மாரி கெட்டதுக்கும் இந்த அன்பே துணையா இருக்கும்னு ஐயன் சொல்றாரு.


"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்." [77]


இவ்ளோ சொல்லியும் இன்னும் நீ இந்த அன்போட மகிமையைப் புரிஞ்சுக்கலியேன்னு இப்ப ஐயன் கொஞ்சம் வேகப்படறாரு! இன்னா சொல்றாருன்னு நீயே கேட்டுக்கோ!

மண்புழு நெளியுறத நீ பாத்திருக்கேதானே! அதுல ஒண்ணை எடுத்து நல்ல சூடு வெய்யில்ல போடு! இப்பப்பாரு அது எப்படி நெளியுதுன்னு! நகரமுடியாம, இருக்கற எடத்துலியே நெளிஞ்சுகிட்டு, அங்கியே செத்துப்போயிரும் அது! கொஞ்ச நேரம் களிச்சுப் பத்தியான, காஞ்சு கருவாடாப் போயிருக்கும்!
அது மாரி ஒன்னியப் போட்டு இந்த அறக்கடவுள் வாட்டுவாராம், அன்புன்ற ஒண்ணு ஒங்கிட்ட இல்லாங்காட்டி!
"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று." [78]


கோவம் இன்னமும் தீரலை ஐயனுக்கு!

இப்பிடி மனசுல அன்பில்லாத ஆளுங்க இந்த ஒலகத்துல சந்தோசமா இருக்கறதுன்றது எப்பிடி இருக்குன்னா, துளிக்கூட தண்ணியே இருக்காத பாலைவனத்துல, ஒரு மரம் நல்லா துளிரு வுட்டு தளைச்சு வளந்திருக்குன்ற மாரியாம்! இது எப்பிடி முடியாத சமாச்சாரமோ, அது மாரித்தான் இவங்கல்லாம் நல்லா வாளறதும்! நடக்காத காரியம்ண்றாரு!

"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." [79]

உள்ளுக்குள்ள அன்பு இல்லாத ஆளுங்களுக்கு வெளியில கையி, காலு, கண்ணுன்னு எல்லா உறுப்புகளும் ஒயுங்கா இருந்தாலும் அதுனால ஒரு பயனும் இல்லியாம்!
"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு." [80]

இவ்ளோ நேரம் சொன்னேனே, இந்த அன்புன்ற ஒண்ணு இருக்கறவங்க ஒடம்புதான் உசிரோட பொருந்தி நிக்கற ஒடம்பாகும்.
மத்த ஒடம்பெல்லாம் சும்மா உள்ள இருக்கற எலும்பை தோலால போத்தி இருக்கற ஒடம்புதான் அப்பிடீன்னு ஐயன் சொல்றாரு!


இதையெல்லாம் இன்னிக்கு ஏன் சொல்றேன்னு கேக்குறியா? விசயம் இருக்கு! இன்னிக்கு இன்னா நாளு?
பூம்பாவை திருநாளு! சம்பந்தர் மேல அன்பை வைச்சுகிட்டே செத்துப்போன ஆத்மா! இவரு அதுக்கு உசிரைக் கொடுத்து, தன்னோட பொண்ணாவே ஏத்துகிட்ட மகாத்மா! இந்தப் பாட்டையெல்லாம் இன்னிக்குப் படிச்சா ஒனக்கும் இதோட அருமை புரியும்னுதான் சொன்னேன்! நீ கேக்கற ஆளுன்னு நான் நினைக்கறதால! போயி, ஒங்க ஆளுங்ககிட்டயும் சொல்லு! அல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு! சரி வா! நாயர் கடையாண்ட போயி டீ, மசால்வடை துன்னுட்டு போலாம்!"
என அன்புடன் என் தோளில் கை போட்டு இழுத்தவாறு சென்றான், மயிலை மன்னார்!
மகிழ்வுடன்.... இல்லை இல்லை!.... அன்புடன் அவனுடன் நானும் நடந்தேன்!
**********************************************************************************

Monday, January 28, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"


"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 17 "நிலையாமை"
தை ஒண்ணாந்தேதி! பொங்கல் திருநாள்! சென்ற முறையை விட சென்னை இப்போது அதிகமாகவே கூட்டமாயிருந்தது! அதிலும் மயிலைப்பகுதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வழக்கமான நாயர் கடை கூட இப்போது டேபிள் பெஞ்ச் எல்லாம் போட்டு பெரிதுமாக மாறியிருந்தது. நாயர் மட்டும் 'வா சேட்டா!' என அழைத்திரா விட்டால் என்னாலேயே அடையாளம் கண்டிருக்க முடியாது. 'சா குடிச்சோ' என்ற அந்த அன்பான அழைப்பை மறுக்க மனமில்லாமல் உட்கார்ந்து குடித்தபடியே மன்னாரைப் பற்றி விசாரித்தேன். 'ஞான் கண்டிட்டில்லா! கொறைச்சு நாளாச்சு' எனற நாயரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே நடந்தேன். வடக்கு மாடவீதியில் வஸந்த பவன் தாண்டி நடக்கையில், முதுகில் பளாரென ஒரு அறை விழ, திடுக்கிட்டுத் திரும்பினால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நம்ம மயிலை மன்னார் சிரித்தபடி, 'இன்னா! நம்ம பேட்டைக்கு வந்திட்டு நம்மளைப் பாக்காமியே போயிருவியா?' எனக் கேட்டான். 'உன்னைப் பார்க்கத்தான் மைலாப்பூருக்கே வந்தேன்' எனச் சொன்னவுடந்தான் கொஞ்சம் சமாதானமானான். 'சரி! வா! எதுனாச்சும் சாப்பிடலாம்! இன்னிக்கு பொங்கல் மொத நாளு' என்றவனை மறித்து, இன்னிக்கு தமிழ் புத்தாண்டு கூட என அரசாணை வந்ததை நினைவு படுத்தினேன். 'எல்லா நாளும் ஒண்ணுதான்! அடுத்த ஆட்சி வந்தா இன்னாமோ பெரிய வேலை மாரி மொதக்காரியமா இதை ரத்து பண்ணப் போறாங்க! இதுக்கெல்லாம் அலட்டிக்காதே! இந்த ஒலகத்துல எல்லாம் நெலையில்லாது. இதைப் பத்தி நம்ம ஐயன் சொன்னதை சொல்றேன் கேளு' என்று மன்னார் சொன்னதும், 'அட! வந்ததுக்கு ஒரு நல்ல விஷயமும் கிடைக்குதே' என்ற ஆவலுடன் வஸந்த பவனுக்குள் அவனுடன் நுழைந்தேன்!
இனி வருவது குறளும் அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம்-34 "நிலையாமை"

"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை." [331]



இப்ப, இந்த ஒலகத்துல எதுனாச்சும் நிலையா நின்னுருக்கா? ஆனாக்காண்டி, எவனை வேணுமின்னாலும் கேட்டுப்பாரு! இன்னாமோ தான் தான் அல்லாத்தையும் கடந்து போயி நெலைச்சு நிக்கற மாரி பேசுவான். இங்க இருக்கற எதுவும் சாசுவதமில்லை! எல்லாமே ஒருநா இல்லாட்டி ஒருநா அளிஞ்சுதான் பூடும்! இதை உணராம நிலையில்லாததையெல்லாம் நிலைச்சு நிக்கறதுன்னு பம்மாத்து பண்றவனோட அறிவு ரொம்பவே அல்பமானது; மட்டமானதுன்றாரு.

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளைந் தற்று. [332]


பில்லா படம் பார்க்க ஒரு தியேட்டருக்குப் போறே! "ஆ! இன்னா கூட்டம்"னு மலைச்சுப் போறே! படம் விட்டதும் இன்னா ஆவுது? அவனவன் தன் சோலியைப் பாக்கப் போயிருவான்! 'அவ்ளோதான்! ஆட்டம் க்ளோசு'ன்னு! அது மாரித்தான் ஒருத்தன்கிட்ட வர்ற பணமும்! இருக்கற வரைக்கும் இருந்திட்டு, ஒருநா அப்பிடியே சொல்லாம கொள்ளாமப் போயிரும்! பணமெல்லாம் நிலையே இல்லை! புரிஞ்சுக்கோ!
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். [333]


பணம்ன்றது நிலையில்லாததுன்னு புரிஞ்சுகிட்டேல்ல? இப்ப நீ இன்னா பண்ணணும்? அது கையில இருக்கறப்பவே நல்ல காரியங்க செஞ்சுறணும்! நாலு பேருக்கு படிப்புக்கு ஒதவறது, இல்லாத ஏழைங்களுக்கு தானதருமம் பண்றது அப்படீன்னு! நிலையில்லாத செல்வத்தை வைச்சு, நிலையான தருமங்களைப் பண்ணணும்னு ஐடியா குடுக்கறாரு ஐயன்!
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈறும்
வாளது உணர்வார்ப் பெறின். [334]

'இன்னிக்கு பொளுது போச்சா, சரி, நாளைக்கு மறுபடியும் ஆட்டையைத் தொடங்கலாம்'னு படுக்கப் போறோம் தெனமும்! ஆனா, விசயம் அறிஞ்சவங்க இன்னா செய்வாங்கன்னா, 'அடடா! இன்னிக்கு நாளு பூடுச்சே! நம்ம ஆயுசுன்ற காலண்டர்ல ஒருநாளை வெட்டிட்டாம்ப்பா எமன்'னு புரிஞ்சுகிட்டு, இந்த நாளுன்றதுல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நம்ம வாழ்நாளை அறுக்கற வாளுன்னு தெளிவா நடந்துக்குவாங்க!
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். [335]

இப்ப கையில துட்டு இருக்குன்னு குஜாலா ஆட்டம் போடாதே! வயசானப்பறம் இந்த நல்ல காரியமெல்லாம் பண்ணிக்கலாமின்னு ஒத்திப் போடாதே! சாவு எப்ப வருமின்னு எவனுக்கும் தெரியாது! அப்பிடி, ஒனக்கு நாவெல்லாம் தள்ளி, விக்கல் வந்து தொண்டையிலியே நின்னுகிட்டு, மேலியும் வராம, கீளேயும் போவாம நெஞ்சுக்குளியை அடைக்கற நேரம் வர்றதுக்கு முந்தியே, செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஜரூரா செஞ்சுறணும்!

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. [336]


'அட! நேத்துக்கூடப் பாத்தேனே! இன்னிக்கு செத்துப்பூட்டான்னு தகவல் வருதே'ன்னு எத்தினி தபா சொல்லக் கேட்டிருப்போம்! ஒர்த்தொருத்தனும் போறப்ப சொல்லிக்கினு போறதில்லை! அதான் இந்த ஒலகத்தோட பெருமையே! அவ்ளோ நிலையில்லாததாம்!
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. [337]

மேல சொன்னமாரி, நாளைக்கு இருப்போமான்றதே தெரியாத... நாளைக்கு இன்னா நாளைக்கு?... அடுத்த நொடி நாம இருப்போமான்றதே நிச்சயமில்லாத நமக்கு மனசுல மட்டும் பாரு! கோடிக்கோடியா நெனைப்பு இருந்துகினு இருக்கும்! அத்தைப் பண்ணலாமா? இத்தை நிறுத்தலாமா? அப்படீன்னு! இன்னமோ போ!
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு. [338]

ஆசை ஆசையா ஒரு குருவி சுள்ளியெல்லாம் பொறுக்கி ஒரு கூடு கட்டும். கொஞ்ச நாளு களிச்சுப் பார்த்தியானா, முட்டையெல்லாம் பொறிச்சு குஞ்சுங்கல்லாம் பறந்திடுச்சின்னா, இதுவும் அந்தக் கூட்டைக் காலி பண்ணிட்டு பறந்திரும். அது போலத்தானாம் இந்த உயிருக்கும், ஒடம்புக்கும் நடுவுல இருக்கற தொடர்பு! வேலை ஆச்சுன்னா ஆட்டம் காலி!
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. [339]


சாவறதுன்றது தூங்கிப் போற மாரி. பொறக்கறதுன்றது அப்பிடி தூங்கிமுளிச்சுக்கறது மாரின்னு ஐயன் இதுல சுளுவா சொன்ன மாரி இருந்தாக்காட்டியும், இதுக்குள்ள ஒரு டக்கரு தத்துவத்தை அப்டியே அசால்ட்டா சொல்லிட்டுப் போயிருக்காரு. இப்போ தூங்கறது முளிச்சுக்கறது ரெண்டு பேரும் ஆரு? ஒரே ஆளுதானே! அதுபோல, செத்துப்போறதும், திரும்பிப் பொறக்கறதும் ஒரே ஆத்மாதான். அப்ப தூங்கக்கொள்ள இது எங்க போயிருந்திச்சு? அதைத்தான் ஒவ்வொருத்தரும் ஆராயணும். இத்தப் புரிஞ்சுகிட்டியானா, நாம ஆரு? எதுக்காவ வந்தோம்? எங்க போறோம்ன்றது தெளிவாயிடும்! இதைத்தான் சூட்சுமமா ஐயன் சொல்லிக் காட்டியிருக்காரு.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. [340]


போன பாட்டுல சொன்ன விசயத்தை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தற மாரி இதுல சொல்றாரு. இந்த ஒடம்புல உசிரு இருக்கறது ஒர்த்தன் வாடகைவூட்டுல குடக்கூலிக்கு இருக்கறமாரி. நெரந்தரம் இல்லை. வாடகை வூடு சொந்த வூடாகுமா எப்பனாச்சும்? ஆவாதுல்ல? அதேமாரி, உசிரும் இந்த ஒடம்புக்கு சொந்தமாவாது! அப்ப அது இன்னா பண்ணும்? இன்னோரு வூட்டைத் தேடிகிட்டுப் போவும். ஒடம்பு மாத்தி ஒடம்புன்னு சும்மா பூந்து பூந்து பொறப்பட்டு வருது. உசிரும் சரி, ஒடம்பும் சரி எதுவும் நெலையில்லைப்பா! இதைப் புரிஞ்சுக்க'
என்று சொல்லியபடியே பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் மன்னார். தொடர்ந்து அவன் சொன்ன கருத்துகள் இவை!

"இப்பிடி பணம், காசு, ஒடம்பு, உசிரு இப்பிடி எதுவுமே நெலையில்லாதப்ப, மத்ததெல்லாம் இன்னா ஆவும்ன்றே? நமக்கெல்லாம் எப்ப புத்தாண்டு தெரியுமா? சித்திரையிலியும் இல்லே; தையிலியும் இல்ல! எப்ப 'போனசு' வருதோ, எப்ப டயத்துக்கு சோறு கிடைக்குதோ, கடனெல்லாம் இல்லாம நிம்மதியா இருக்கோமோ, மனசுக்குப் பிடிச்ச ஆளைக் கட்டிகிட்டு சண்டையில்லாம இருக்கோமோ அப்பத்தான்! மத்தபடி இந்த புத்தாண்டு உத்தரவெல்லாம் அதை வைச்சு பொளைப்பு நடத்துறவங்களுக்குத்தான். நீ போயி ஆவற கதையைப் பாரு! ஆரையும் திட்டாம, ஆருக்கும் கெடுதி பண்ணாம இருக்கப் பாரு! அதுதான் இந்த மன்னாருக்கு வேணும். வர்ட்டா!" என்றபடி அந்தப் பக்கம் வந்த ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிப் பறந்துவிட்டான் மயிலை மன்னார்.

அவன் சொன்னதை அசை போட்டுக் கொண்டே நானும் வீடு திரும்பினேன்.

Thursday, December 13, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --16

"கிட்டத்தட்ட 4 மாசம் ஆயிடுச்சு மன்னார், உன்னைப் பார்த்து! என்னை தப்பா நினைச்சுக்காதே!" என்று தயங்கியபடியே சொன்னேன்.

"அட! இன்னாபா நீ! இதுக்கெல்லாம் போயி தப்பா நினைச்சுக்குவானா இந்த மன்னாரு! அப்புறமேல நம்ம பிரெண்ட்சிப்புக்கு இன்னா மருவாதி இருக்கு! நீ இன்னா வேணுமின்னேவா என்னியப் பாக்காம இருந்தே! ஒரு நாவலு, 2 சிறுகதை அப்பிடீன்னு வேலையாதானே இருந்தே! நாங்கூட படிச்சேன் அந்த நாவலை! என்னை மறந்தாலும், ஐயனை மறக்காம ஒவ்வொரு பதிவுலியும் ஒரு குறளு போட்டே பாரு! அங்கேதான் நீ நம்மளை 'டச்'பண்ணிட்டேப்பா! இதுமாரி, கேட்டதை மறக்காம இருக்கே பாரு! அதப் பத்தி கூட வள்ளுவரு ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு! கேக்கிறியா?" என்று என் நண்பன் மயிலை மன்னார் சொன்னவுடன் உற்சாகமாக பேப்பர் பேனாவை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டேன்!

இனி வருவது குறளும், மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் - 42 "கேள்வி"
"செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை" [411]


"இந்த ஒலகத்துல எத்தினியோ விதமான வழியில துட்டு சம்பாரிச்சு பணக்காரனா ஆயிறலாம். ஆனாக்க, இந்த 'கேக்கறது'ன்ற செல்வம் இருக்கு பாரு.... அதாம்ப்பா... எந்த ஒரு விஷயத்தையும் காதால கேட்டு மனசுல உள்வாங்கிக்கற பாரு....அதைத்தான் செல்வம்னு ஐயன் சொல்றார்ரு இங்க... ! அது எப்பிடீன்றியா? இப்ப, ஒரு விஷயத்தை நீ கண்ணால பாக்கற...அட, ஒரு பேச்சுக்கு நம்ம தலைவர் நடிச்ச தம்பிக்கு எந்த ஊரு பாம்பு ஸீன்னு வைச்சுக்குவோமே... அவரு முகபாவம்லாம் காட்டி பிரமாதமா நடிச்சிருப்பாரு. அதையே சவுண்டு இல்லாம ஓட்டறாங்கன்னு வைச்சுக்க... அந்த ஸீனு உனக்கு ரசிக்குமா? அதையே அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டே கேக்கறேன்னு வையி.... தலைவரு மூஞ்சி அப்பிடியே ஒன்னோட மனக்கண்ணு முன்னாடி ஓடும்! எப்பிடி அது? காதால கேட்டு மனசுல உள்வாங்கிகினதால.... இது போல இன்னும் எத்தினியோ சொல்லலாம்! இந்த கேள்விஞானம்ன்ற செல்வந்தான் அல்லா செல்வத்தைக் காட்டியும் ரொம்பப் பெருமையானது! இது எப்பிடின்னு பின்னாடி சொல்லுவாரு பாரு!"

"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." [412]

"ஒனக்குப் பிடிச்சது ஒண்ணை நீ கேக்கறேன்னு வையி.... மவனே... பசி தூக்கம் அல்லாத்தியும் மறந்து 'ஆ'ன்னு கேட்டுகிட்டே இருப்பே! இப்பக்கூட பாரேன்! வயக்கமா இங்க வந்தா இன்னா பண்ணுவே நீ! மொதல்ல நாயர் கடையாண்டை நேர போயி 4 மசால்வடையை உள்ளே தள்ளிட்டு, ஒரு கப்பு டீ அடிச்ச பின்னாடிதான் எங்கிட்டவே பேச ஆரம்பிப்பே! நான் சொன்னவுடனே பேப்பர் பேனாவை எடுத்துகிட்டு கிறுக்க ஆரம்பிச்சிட்டேல்ல! அட! ஒரு தமாசுக்கு சொன்னேம்ப்பா! உடனே முறுக்கிக்காத! இப்பிடித்தான் அநேகமா அல்லாருமே இருப்பாங்க! கேக்கறதுக்கு ஒண்ணும் இல்லேன்னாத்தான் சோத்து நெனப்பே வரும்! "

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து." [413]

"இப்ப, இந்த தேவர்கள்னு ஆகாசத்துல இருக்கறவங்களைப் பத்தி சொல்லுவாங்களே, அவங்க இன்னா பண்றாங்க? எங்கியோ தொலைதூரத்துல இருந்தாலுங்கூட, இங்கேருந்து ஓதற மந்திர சத்தத்த சொல்லி நாம அனுப்பற சக்தியை எடுத்துக்கறாங்கன்னு நம்பறோமில்ல.... அது எப்பிடி நடக்குது?.... இந்தக் கேள்வி அறிவு அவங்களுக்கு இருக்கறதாலத்தான்! அப்பிடியாப்பட்ட இந்தக் கேள்வி அறிவுன்ற ஒண்ணு இருக்கற மனுஷங்க கூட, இந்த பூமியில இருந்தாலும், அந்த தேவர்களுக்கு சமமின்னு ஐயன் சொல்றாரு! கேக்கறதால வர்ற அறிவை வைச்சே சூட்சுமமா அல்லாத்தியும் 'டக்கு' 'டக்கு'ன்னு புரிஞ்சுப்பாங்க!"
"கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாத் துணை" [414]


"வயசாயிப்போன காலத்துல ஒன்னால சரியா பாக்க முடியாம கண்ணு மங்கலாயிடும், பசி அடைச்சுப் போயிரும். நடக்கமுடியாம தளந்து போயிருவே! 'ஒற்கம்'னா 'தளர்ச்சி'ன்னு அர்த்தம்! அப்போ உன்னால ஒண்ணுமே பண்ன முடியாது! ஆனா, நீ செயலா இருக்கறப்பவே, நாலு நல்ல நூலுங்களைப் படிக்கலைன்னாலும், அடுத்தவங்க சொல்லக் கேட்டாவது இருந்தேன்னு வையி... அது ஒனக்கு கைத்தடி மாரி பயன்படுமாம்! சும்மா கண்ணை மூடிக்கிட்டே, எங்கியும் போவாமலியே, உன்னோட அறிவாலியே, நீ நெனைச்சுப் பாத்துகினே சாந்தோசமா இருக்கலாம்! பொளுதும் போவும் ஒனக்கு! அதுனால இப்பலேர்ந்தே நாலு நல்ல விசயங்களைக் கேக்கறதுன்னு ஒரு வளக்கப் படுத்திக்க! இன்னா... வெளங்குதா?"

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." [415]

"அதுக்காவ, எவன் என்ன சொன்னாலும் கேக்கறதுன்னு அர்த்தம் இல்லை. நல்ல குணம் இருக்கறவன், நல்ல நடத்தையா இருக்கறவன் சொல்லாப் பாத்துக் கேக்கணும்! அதைக் கேட்டு நல்லா உள்வாங்கிக்கிட்டியானா, வளுக்கற பூமியில நடக்கறப்ப ஒருகைக்கோலு எப்பிடி நீ வளுக்கி விளாம இருக்க ஒதவுமோ, அப்பிடி அது ஒன்னிய கெட்ட விசயத்துல இருந்து காப்பாத்தும்!"
"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்." [416]


"இங்க ஒரு முக்கியமான மேட்டர் ஐயன் சொல்றாரு! கவனமாக் கேளு! அப்பிடி நீ கேக்கற விசயம் எம்மாம் பெருசுன்றது முக்கியமில்லை! நல்ல கருத்துக்களை மட்டுமே கேக்கணும்! அது தம்மாத்தூண்டு மேட்டரா இருந்தாலும் சரி! அது மாரி கருத்துங்கல்லாம் ஒனக்கு ரொம்ப ரொம்ப பெருமையை தேடித்தரும்! புரியுதா?"

"பிழைத்துணர்த்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்." [417]

"ஒரு ஆளு ரொம்பக் கூர்மையா எந்த ஒரு விசயம்னாலும் ஆராய்ஞ்சு கவனமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கறவனா இருந்தா, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு கருத்தை அவன் தப்பாவே தெரிஞ்சுகிட்டாக்கூட, புத்தியில்லாத, முட்டாத்தனமான சொல்லை சொல்லவே மாட்டான். இதுல ஏதோ தப்பு இருக்கு! அதுனால, இப்பா இதைச் சொல்லி நாம அரைகுறைன்னு காட்டிக்க வேணாம். இன்னும் நல்லா ஆராய்ஞ்சு பாத்திட்டு உண்மை இன்னான்னு தெரிஞ்சதுக்கு பொறவால சொல்லலாம்னு 'கம்'முனு இருந்திருவான்!"

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி." [418]

"நாம இத்தினி சொல்லியும் ஆரும் சரியாக் கேக்க மாட்டேங்கறாங்களேன்னு ஐயனுக்கு கோவம் கோவமா வருது! அடுத்த மூணு குறள்ல போட்டு விளாசுறாரு இவங்களை! இதுவரைக்கும் நான் சொன்னது மாரி நல்ல கருத்துக்களை... அதையெல்லாம் கேட்டதால ஒன் காதே வலிச்சாலும் சரி... இன்னாடா இவன் தொணதொணக்கறானேன்னு ஒன் காது துளைச்சுப் போனாலும் சரி!..... கேக்கலைன்னா, ஒனக்கு காதுன்னு ஒண்ணு இருந்து, அது நல்லாவே கேட்டாலும் கூட, நீ காது கேக்காத செவிடுக்கு சமம்னு ஐயன் கண்டிசனா சொல்லிடறாரு!"

"நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது." [419]


எந்த ஒரு விசயத்தையும் நல்லா கேட்டு, அதை சரியா புரிஞ்சு உள்வாங்கி வைச்சுக்கற இந்த கேள்வியறிவுன்ற ஒண்ணு மட்டும் ஒருத்தனுக்கு கிடைக்கலேன்னா, அவனால அடக்கமா, மருவாதியா வணங்கிப் பேச முடியாது!ஏன்னா அவன் அரைகுறை மாரி உளறிக் கொட்டிக்கினே இருப்பான்!"

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்." [420]


"இந்தக் கேள்வியறிவுன்ற ஒண்ணை உணராம,, அதால கிடைக்கற பலனைத் தெரிஞ்சுக்காம, நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பப் பாத்தாலும் நினைச்சுகிட்டு வயித்தை ரொப்பறவங்க இந்த ஒலகத்துல உசிரோட வாழ்ந்தாக்கூட அதனால இன்னா லாபம்னு ஐயன் ரொம்பவே சூடாறாரு!"
"இன்னா ஐயன் சொன்னது விளங்கிச்சா? அதுனால நல்லா படிச்சு, கேட்டு அறிவை விருத்தி பண்ணிக்கோ! கேக்கறது நல்லதா இருக்கட்டும்! அதை மனசுக்குள்ள நல்லா உள்வாங்கிக்கோ! இப்ப முதல் குறளைப் படி! ஏன் இதான் பெரிய செல்வம்னு சொல்றாருன்னு புரியும்!"

"சரி! சரி! நீ சூடாவாதே! இதுவரைக்கு கேட்டது போதும்! 412- ல சொன்னமாரி, இப்போ வயித்துக்கு கொஞ்சம் அனுப்பலாம்! நாயரு சூடா வடை சுட்டிருக்காரு ஒனக்காக ஸ்பெசலா! வா!" என தோள் மீது கை போட்டு அணைத்தபடியே நடந்தான் மயிலை மன்னார்!
********************************************************

Saturday, August 04, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --15[இரண்டாம் பகுதி] "புணர்ச்சி மகிழ்தல்"


வஸந்தபவனில் என்னென்ன ஆர்டர் பண்ணினோம் என்பதெல்லாம் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்காது எனத் தெரியுமாதலால், மிச்சமிருக்கும் ஐந்து குறள்களுக்கு மயிலை மன்னார் என்ன சொன்னான் எனத் தெரிந்து கொள்வதில்தான் உங்கள் ஆர்வம் இருக்குமென்பதால்,
நேராக அதற்கே வருகிறேன்!

[முதல் ஐந்து குறள் விளக்கம் சென்ற பதிவில் பார்த்தோம்.]

நடு நடுவே மன்னாரின் உபசரிப்பையும் காணலாம்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்" [1106-1110]

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்." [1106]

"நம்ம நாயர் கடை டீ, மசால்வடைக்கு, இங்கே சாப்படற மசால்தோசையும், பூரி மசாலாவும் எவ்வளவோ மேலுன்னு நெனக்கற நீ! பொறு, பொறு!

இப்பத்தானே ஆர்டர் பண்ணிருக்கோம்! இன்னும் வரல!

நீசொல்வியே அந்த தேவலோகம்... அங்கே ஆரும் சாவறதே இல்லியாம்!

அல்லாரும் அமிர்தம் குடிச்சிட்டாங்களாம்!

அப்டீன்னு சொல்றாங்க!

ஆனா, ஐயன் அதையே எப்டி உல்ட்டா பண்னி சொல்றார்னா, ..

இவன் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!

அதுவும் இவன டீப்பா லவ் பண்ணுதாம்.

எப்பலாம் இவன் அந்தப் பொண்ணோட தோளைத் தொடறானாம்.
அவ்ளோதான்!

இவனுக்கு புதுசா இன்னொரு ஜென்மம் எடுத்தாப்பல, அவன் உசிரு தளைக்குதாம்!


அதுனால, இவனுக்கு இவளோட தோளே அமிர்தம் மாரித் தோணுதாம்!

தொடறப்பவெல்லாம் புது உசுரு வர்றதுனால!


"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு." [1107]


சரி, சரி! தோசை வந்திருச்சு! சாப்டு!

இப்படி இந்த ஓட்டல்ல ஒக்காந்து ஒனக்கு வாங்கிக் கொடுத்து, நானும் சாப்டறதுக்கே எனக்கு இம்மாம் சந்தோசம் வருதே.... சரி, சரி!... நீதான் பில்லுக்கு பணம் கொடுக்கப் போறேன்னாலும்!....

சரி, குறளுக்கு வருவோம்!

ஒன் பர்ஸுலேர்ந்து பணத்தை எடுத்து இப்ப எனக்கும் சேர்த்துக் கொடுக்கறே இல்ல?


அது மாரி, தன்கிட்ட இருக்கற ஒரு பொருளை இன்னோர்த்தனுக்கும் கொடுத்து தானும் சந்தோசப்படற இந்தப் பொண்ணோட சேர்றது அவனுக்கு இன்பமா இருக்காம்!
"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு." [1108]


இப்ப சொல்லப் போறது கொஞ்சம் சூட்சுமமான மேட்டரு!

சாப்டறத நிப்பாட்டிட்டு கவனமாக் கேளு!

ரெண்டு பேரு ஒர்த்தர ஒர்த்தர் விரும்பறாங்க!

பாக்கறாங்க! பேசறாங்க, தொடக் கூடத் தொடறாங்க!

அதெல்லாம் ரொம்பவே இன்பமாத்தான் இருக்கும்.

ஆனா, ஒர்த்தர ஒர்த்தர் கட்டிப் பிடிச்சு, இறுக்கமாக் கட்டிக்கும் போது....

அதாவது, காத்துக் கூட நடுவுல பூராத மாரி இறுக்கக் கட்டிக்கறாங்களாம்!...

அப்படிக் கட்டிப் பிடிச்சு இருக்கக் கொள்ள, அவங்களுக்கு வர்ற சந்தோஷம் இருக்கு பாரு!

அதுக்கு ஈடு இணையே கிடையாதாம்!!!

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்." [1109]

இந்தக் காதல் பண்றவங்களுக்கு, வெறுமன காதல் பண்றது மட்டுந்தான் வேலைன்னு நெனைக்காதே!

சும்மா காதல் மட்டுமே பண்னினா அதுல ஒரு த்ரில்லு இல்லியாம்!

சின்ன சின்னதா சண்டை போடணுமாம்!

அது பெருசாவறதுக்கு முன்னாடியே சமாதானம் ஆயிறணுமாம்!

அப்பத்தான், மனசுல ஒண்ணும் வெச்சுக்க மாட்டாங்க!

பெரிய சண்டை ஆயிருச்சுன்னு வையி!

அது கொஞ்சம் பேஜாராயிடும்.

அதனால... இன்னா பண்ணனும்னா.... சின்னச் சின்னதா சண்டை போடணும்....அப்பப்ப!

அத்த ஆரு போட்டாலும், ஆராவது ஒர்த்தர், விட்டுக் கொடுத்து ராசியாயிடணும் வெரசலா!

அதுக்கப்பறம், ரெண்டு பேரும் சேரணும்!

அது ரொம்பவே ஜாலியா இருக்குமாம்.

இதெல்லாம் காதலால வர்ற நல்ல விசயமாம்!

சரி, சரி, பூரி கிளங்கு வந்தாச்சு, எடுத்துக்கோ!

அப்டியே ரெண்டு டீ சொல்லிடு!


"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு." [1110]


இப்போ ஒரு புக்கு படிக்கறே! நல்ல நல்ல விசயம்லாம் அதுல இருக்கு!

படிக்கக் கொள்ள ஒனக்கே புரியுது.... இதெல்லாம் இத்தினி நாளு தெரிஞ்சுக்காம இருந்திட்டோமேன்னு!

ஒன்னோட அறிவு இன்னும் ஜாஸ்தியாவுது!

அதே மாரித்தான் இந்த காமம்ன்றதும்!

ஒவ்வொரு தபாவும் புதுசு புதுசா ஒண்ணொண்னு தெரியுமாம்!

சரி, பில்லைக் கொடுத்திட்டு வா!

நான் வாசலாண்ட நிக்கறேன்"

எனச் சிரித்தவாறே கிளம்பினான், மயிலை மன்னார்!


அவ்ளோதாங்க!

பிறகு சந்திக்கலாம்!

Thursday, August 02, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 [வயது வந்தோர்க்கு மட்டும்!]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" 15 "புணர்ச்சி மகிழ்தல்"
வாரா வாரம் எனக்குக் குறளின்பம் தந்து கொண்டிருந்த நண்பனை இப்போதெல்லாம் மாதா மாதம் சந்திக்கும்படியான நிலை
வந்துவிட்டதே என மிக வருத்தம் எனக்கு!

சரி, இதையாவது விடக்கூடாது என்ற ஒரு வெறியோடு, ஆடி வெள்ளி மயிலை கற்பகாம்பாளைத் தரிசித்த பின்னர்,
மயிலைக் குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன், அவனைப் பார்க்கும் ஆவலோடு!

கிடைக்கவில்லை!

மனம் தளர்ந்து, கடைசி முறையாக நாயர் கடைக்கு வந்து, 'அண்ணனை எங்கனெயும் நோக்கியோ, சேட்டா?' என
எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் வினவினேன்.

'இல்லியே ஸாரே! கிட்டில்லா ஆ ஆளு!' என நாயர் சொன்னதும் என் நம்பிக்கை தகர்ந்தது.

சரி, இன்னிக்கு நமக்கு கொடுப்பினை இல்லை என நொந்தவாறே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கலானேன்.

திடீரென ஒரு குரல்!

பரிச்சயமான குரல்!

"நா சொன்னா சொன்னதுதான்! அவனவன் அனுபவிச்சாத்தான் புரியும்! அத்த வுட்டுட்டு, இது எப்டி இருக்கும்னு
கேட்டேன்னு வெச்சுக்கோ, நீதான் ஒலகத்துலியே மஹா முட்டாள்" என யாருடனோ பேசிக்கொண்டு மயிலை மன்னார்
நாயர் கடை வாசலில் ஆஜரானான்!

என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை!

மன்னாரைப் பார்த்தது மட்டுமல்ல; என் நண்பரொருவரைக் குறித்து, என் மனதில் ஓடிக் கொண்டிருந்த அதே விஷயத்தைப் பேசிக் கொண்டும் மன்னார் வந்தது எனக்கு பேராச்சரியம்!

என்னைப் பார்த்தவுடன் இன்னும் அதிகமாகவே குஷியானான் மன்னார்.

'இன்னாப்பா! வா, வா, வா! நீயும் இந்த ஜோதில ஐக்கியமாயிக்கோ! காதல்ண்றதே ரொம்ப குஜாலான மேட்டரு. இதுல காதல் கைகூடி,
அது கனிஞ்சு ரெண்டு பேரு சேர்றதுல இருக்கு பாரு ஒரு குஜாலு!... அட! அட! அட! அத்தச் சொல்ல வார்த்தையேகிடையாது!
ஐயன் இன்னா சொல்றார்ன்னா...."என ஆரம்பித்தவுடன், பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு அவன் சொல்வதை எழுதலானேன்!
இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 111. "புணர்ச்சி மகிழ்தல்"

"கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள." [1101]

நல்லாக் கேட்டுக்கோ!

இப்போ நமக்கு அஞ்சு விதமான உணர்வுங்க இருக்கு.

பாக்கறது, கேக்கறது, புவா துண்றது, மோந்து பாத்து வாசனை இன்னான்னு தெரிஞ்சுக்கறது,
தொடறது அப்டீன்னு அஞ்சு!

ஆனாக்காண்டி, இந்த அஞ்சும் சேந்த மாரி ஒரு விஷயம் ஒலகத்துல கிடையாது!

நீ இன்னா ஒரு பொருளை வோணும்னாலும் எடுத்துக்கோ!

ஒதாரணத்துக்கு, ஒரு பூவை எடுத்துக்கோ!

பாக்கலாம், தொடலாம், மோந்து பாக்கலாம், சிலதை பிச்சி கூடத் துண்லாம்.

ஆனா , கேக்க முடியுமோ? முடியாது!

சரி, அது வோணாம்!

டீவி இருக்கு!

பாக்கலாம், கேக்கலாம், தொடலாம் ...அவ்ளோதான்.

இப்டி, இன்னா ஒரு விசயத்த எட்த்துக்கினாலும், அல்லாமும் கூடி வராது.

ஆனா, ஒரு ஆம்பளையும், பொம்பளையும் விருப்பப்பட்டு சேரும் போது....?

ஒர்த்தரை ஒர்த்தர் பாக்கலாம், பேசறதைக் கேக்கலாம், கிஸ் அடிக்கக்கொள்ள துண்ணக்கூட துண்ணலாம், மோந்து பாக்கலாம், தொடவும் செய்யலாம்!

அத்தத்தான் நம்ம ஐயன் சும்மா கணக்கா சொல்லி இருக்காரு இதுல!

ஒரு ஆம்பளை சொல்றான்.... இந்தாமாரி, இந்த அஞ்சு விதமான உணர்ச்சியையும், நல்லா வளையில்லாம் போட்டுகினு இருக்கற
இவகிட்ட எனக்கு கிடைக்குதுன்னு!


"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. [1102]


ஒனக்கு ஒரு அடி படுது.

கல்லு தடிக்கின்னு வெச்சுக்கோயேன்.
ரெத்தம் கொட்டுது.
இன்னொரு கல்லை எடுத்து,... இல்ல,.... அதே கல்லை எடுத்து அது மேலியே இன்னோரு போடு போட்டா அது சரியாயிடுமா?

சரி, அது வோணாம்.
ஜொரம் வருது! மளைல நனைஞ்சு!
திருப்பியும் ஒன்னியக் கொட்டற மளைல நிக்க வெச்சா ஜொரம் சரியாப் பூடுமா?

டாக்டரைப் பாக்கணும்!
காயத்துக்கு மருந்து போடணும்.
இல்லேன்னா, ஜொரத்துக்கு ஊசி மாத்திரை எடுத்துக்கணும்.
அப்போத்தான் சரியாவும்.
சர்த்தானே நான் சொல்றது?

ஆனாக்க, இந்தப் பொம்பள இருக்கே, அதாம்ப்பா... அளகா வளைல்லாம் போட்டுகிட்டு, நகை நட்டெலாம் போட்டுகிட்டு ஒன்னிய மயக்கி வெச்சாளே,..... அவதான்...!


அவளால ஒனக்கு இப்ப ஒரு நோவு வந்திருக்கு!

அதாம்ப்பா, காதல் ஜொரம்!

அதுக்கு இன்னா மருந்துண்ற?

எந்த டாக்டர் இதுக்கு மருந்து வெச்சிருக்கான்?

ஆனா, ஐயன் சொல்றாரு, இதுக்கு மருந்தும் அந்தப் பொண்ணேதானாம்.
அவளாலதான் இத்த தீக்க முடியுமாம்!

இதுமாரி, நோவும் கொடுத்து, அத்த தீக்கற மருந்தையும் வெச்சிருக்கறது, ஒரு விருப்பப்பட்ட பொண்ணாலதான் முடியுமாம்!


"நாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு." [1103]


நம்ம சங்கர் அடிக்கடி சொல்லுமே, அந்த சொர்க்கம்.... அதாம்ப்பா... பெருமாள் இருக்கற எடம்... வைகுண்டம்.. ... அங்கே
இன்னான்னாமோ கிடைக்குமாம்!


மெத்து மெத்துன்னு படுக்கை விரிச்சு, அப்சரஸுங்கல்லாம் விசிறி வீசுவாங்களாம்!


அத்த ஆரு பாத்திருக்கா?
இன்னாமோ சொல்றாங்க!

ஸரி! அத்த உண்மைன்னே வெச்சுப்போம்!

ஒன்னோட மனசுக்குப் பிடிச்ச பொண்ணோட,.... அதுவும் ஒன்னை விரும்புது.... அத்தோட மெல்லிசான தோள்ல சாஞ்சுகிட்டு
ஒரு பத்து நிமிஷம் கண்ணை மூடற பாரு... அதுக்கு ஈடவுமா, இந்த சொர்க்கலோகம்லாம்னு ஐயன் கேக்கறாரு!


"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணெண்ணும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்." [1104]


சடாரென ஒரு தீக்குச்சியைக் கிழித்தான் மன்னார்!

அந்த நெருப்பை என் கிட்ட கொண்டு வந்து என் முகத்தருகில் நீட்டினான்!

பட்டென விலகினேன் நான்!

"இப்ப ஏன் தள்ளிக்கினே?

நெருப்பு சுட்டுருமேன்னுதானே!

அதான் நெருப்போட கொணம்.

கிட்ட வந்தா சுடும். தள்ளி நின்னா ஒண்ணும் பண்ணாது!

ஆனா, ஒனக்குப் பிடிச்ச பொண்ணு, ஒம்மேல பிரியமா இருக்கு!

அது ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போச்சுன்னு வையி!

மவனே! தக தகன்னு ஒன் ஒடம்பு கொதிக்க ஆரம்பிச்சிடும்!

அதே அவ கிட்டக்க வந்தான்னா... அவ்ளோதான், சும்மா ஐஸுல தூக்கிப் போட்ட மாரி, பல்லு கிட்டிப் போயி,
குளுர்ல நடுங்கி தந்தியடிக்க தொவங்கிடும்!

அப்பிடியாப்பட்ட வினோதமான நெருப்பு இவகிட்ட மட்டும் எப்டி வந்திச்சுன்னு ஐயன் ஒரு கொஸ்சின் கேக்கறாரு!
"

"வேட்டபொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்." [1105]

நாயர் கடையாண்ட நிக்கறே நீ!

இன்னா கிடைக்கும் இங்க?

மிஞ்சி மிஞ்சிப் போனா, டீ, மசால்வடை!

அதிகமாக் கேட்டியானா, பன், ரஸ்க்கு, கடலை மிட்டாய்!

அவ்ளோதான்!

இப்ப நீ இன்னா நெனைக்கற...

மணி 9 ஆச்சு! இன்னும் சோறு துண்ணல.

இப்பமட்டும், ஒரு மசால் தோசையும், கெட்டி சட்னியும், நாலு பூரியும், கூடவே மசால் கிளங்கும் கெடச்சுதுன்னா இம்மாம் ஜாலியா இருக்கும்னு!

பார்றா! இன்னா ஆச்சரியம்!

டக்குன்னு ஒன் முன்னால வந்து நிக்குது அதெல்லாம்!

அதே மாரி, நீ இன்னான்னா நெனக்கறொயோ, அத்தினியும் ஒனக்குக் கிடைச்சுதுன்னா, எம்மாம் சந்தோசமா இருக்கும்?

அப்டி இருக்குமாம, நீயும் நல்லா அடர்த்தியான தலைமுடியில பூவெல்லாம் வெச்சுகிட்டு இருக்கற பொண்னும் ஒர்த்தரை ஒர்த்தர்
விரும்பி, நீ அவ தோள்ல சாஞ்சுகிட்டியானா!

நான் சொல்லலைப்பா... ஐயன் சொல்றதுதான் இது!


என்று சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்!

திறந்த வாயை மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான், ' என்னப்பா! இவ்வளவுதானா? மொத்தம் பத்து குறளாச்சே ஒரு அதிகாரத்துல" என
அடக்க முடியாமல் கேட்டேன்!

ஆசையைப் பார்றா!

இருக்கு இருக்கு!
இன்னும் அஞ்சு குறளுஇருக்கு!

ஆனா, இப்ப பசிக்குது!
மசால் தோசை, பூரி கிளங்குன்னதும் வவுறு கபகபான்னு கிள்ளுது!
வா, வஸந்த பவனுக்குப் போயி
சாப்ட்டுகிட்டே மிச்சத்தையும் சொல்றேன்"


என எனை இழுத்துக் கொண்டு சென்றான் மயிலை மன்னார்!

அவன் பேச்சுக்கு மறுப்பேது?

சாப்பிட்டு வந்து மீதி அவன் சொல்லிய மீதி ஐந்து குறள் விளக்கத்தைத் தருகிறேன்!

இப்போதைக்கு இதை "அனுபவியுங்கள்"!


:))
***************************************************


ஒண்டொடி கண்= வளையணிந்த பெண்
பிறமன்= பிற பொருட்கள்
வேட்ட= விருப்பப்பட்ட
தோட்டார் கதுப்பினாள்= பூக்கள் நிறைந்த கூந்தலை உடைய பெண்

Thursday, June 14, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என முடிவு செய்து, வழக்கமான மயிலை கபாலி குளத்தருகே இறங்கி, நேராக
நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், எதிரில் நம்ம மயிலை மன்னார்!

சில நண்பர்களோடு ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டு வந்தவன், என்னைப் பார்த்ததும், "அட! இன்னாபா, அதிசயமா இருக்கு! இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்லியே நீ! எங்க இம்மாந்தூரம்?" என்று நக்கலாகக் கேட்டான்.

"அதெல்லாம் இல்லேப்பா; கொஞ்சம் வேலை மும்முரம். அதான், அடிக்கடி வர முடியலை" என அசடு வழிந்தேன்.

"தா! இன்னாத்துக்கு பொய் ஸொல்றே? அதான் ஒன் கண்ணே ஒன்னியக் காட்டிக் கொடுக்குதே!" என்று அதட்டினான் மன்னார்.

'கண்' என்றதும் சட்டென ஒரு பொறி தட்ட, உடனே அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டேன்; " ஆமா, இந்தக் கண்ணு பேசுமா? எப்பிடி காட்டிக் கொடுக்குதுன்னு சொல்கிறாய்?"

"கண்ணு எப்பிடி பேசும்? வாய்தான் பேசும். ஆனா ஒரு ஆளைப் பாத்ததும் அவங்க மூஞ்சி காட்ற சில விஷயங்களைக் காட்டிக் கொடுத்திரும். அதுல இந்தக் கண்ணும் ஒண்ணு. இது மௌனமா சில சேதிகளைச் சொல்லும்.
ரொம்பப் பேரு இத மட்டுமே பார்த்திட்டு, இது என்னமோ பேசுதுன்னு நினச்சுகிட்டு, மத்த விஷயங்களைக் கோட்டை விடறாங்க. மொத்தமா கவனிச்சா, மத்த உறுப்புங்க செய்யற சேட்டைகளைப் பாக்கலாம். ஆனா, இவங்கதான் இந்தக் கண்ணு மேல
மொத்தமா நம்பிக்கை வெச்சிட்டாங்களே! மிஸ் பண்ணிடறாங்க! இது மாரி நம்பி மோசம் போனவங்கள்ல பொண்ணுங்கதான் டாப்பு. இப்பிடி நம்பி ஏமாந்து போனதுக்கப்பறம் கண்னை நம்பி ஏம்மாந்திட்டோமேன்னு புரிஞ்சுக்கறவங்களும் இவங்கதான்!
இந்த விஷயத்தைப் பத்தி ஐயன் ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. அது என்னான்னு சொல்றேன். வா. கடையாண்ட போய் வடையைக் கடிச்சுக்கினே கேளு" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துக் கொண்டே சென்றான்.

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 118. "கண் விதுப்பழிதல்"

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. [1171]

நான் உண்டு என் படிப்பு, உண்டு, என்னோட வீடு உண்டுன்னு இருந்த என்னை, 'ஏய்! அந்தாளைப் பாரு! இன்னா ஷோக்கா கீறான் பாரு!
அவன் கலரும், ஒசரமும், பாடியும் ! அவன் கண்ணைப் பாரேன்! எப்பிடி சிரிக்கறான் பாரு"ன்னு அவனைப் பாக்கச் சொல்லி, காட்டி, மனசுல பிடிச்சு வெச்சது நீங்கதான்!
இப்ப அதுனாலதான் எனக்கு இந்த தீராத நோவு வந்துது! இப்ப அவன் பூட்டான்! இத்தினியும் பண்ணின நீங்கதான் இப்ப பொலபொலன்னு கண்ணீர் வுடறீங்க! ஏ கண்ணுங்களா! இது இன்னா நாயம்?"

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். [1172]

"வெறும் அளகை மட்டுமே பார்த்திட்டு, பேச்சை மட்டுமே நம்பிட்டு, பின்னாடி இன்னா ஆவும்ன்றதைப் பத்தி துளிக்கூட யோசிக்காம,
இது சரிப்பட்டு வருமா? இது ஆவுற கதையா?ன்னுல்லாம் சிந்திச்சுப் பாக்காம, அவனையே மொறச்சு மொறச்சு பாத்த, ஏ, மை தீட்டின கண்ணுங்களா! இப்ப இன்னாத்துக்கு இப்பிடி வருத்தப்பட்டுகிட்டு அளுவுறீங்க?


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. [1173]

"அந்த ஆளைப் பாத்தப்போ, நல்லா அகலமாத் தொறந்து வெச்சு பாத்தீங்களே, கண்ணுங்களா, இப்ப அவன் பூட்டானேன்னு துக்கப்பட்டுக்கினு அளுவுறீங்களே, ரொம்ப நல்லாருக்குடிம்மா
நீங்க செய்யுறது! எனக்கு உங்களைப் பார்த்தா, சிரிப்புதான் பொத்துகிட்டு வருது! நல்லா அளுவுங்க!"

செயலற்றார் நீருலந்த உண்கண் உயலற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. [1174]


" இப்பிடி அளுது, அளுது, நான் தெனமும் அளகா மைதீட்டி வளத்த இந்த கண்ணுங்க, இப்ப எனக்கு நான் பொளைக்க முடியாதபடி ஒரு நோவைக் கொடுத்திட்டு,
அதுங்களும் அளமுடியாம வத்திப் போய் நிக்குதுங்க பாரேன்! வோணும் இதுங்களுக்கு!"

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். [1175]


"இப்ப அவரு என்னிய விட்டுப் போனதால, எனக்கு வந்திருக்கற இந்த துன்பம்ங்கற நோவு எம்மாம் பெருசுன்னா, இத்தோட பாக்கறப்ப,
தோ, எதுத்தாப்பல இருக்கே சாந்தோமாண்டை, அந்த கடல் கூட இத்த விட சின்னதுங்கலாம்!
இத்தக் கொணாந்ததே இந்தக் கண்ணுங்கதான். இப்பப் பாரு! அதுங்க தூங்கக் கூட முடியம தவிக்கற தவிப்பை!"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. [1176]

"இப்பிடி எனக்கு இந்த நோவைக் கொடுத்ததுக்கு முக்கிய காரணமே இதுங்க தான்!
இந்தக் கண்ணுங்கதான்!
இப்பம் பாரு, அதுங்களும் தூங்காம தவிக்குதுங்க.
ஹைய்யா, எனக்கு ஜாலி! இது ரொம்ப நல்லாருக்கு!"


உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண். [1177]

"பாரு, பாருன்னு என்னியத் தூண்டிவிட்டு, ஐயோ! இவரைப் போல வருமான்னு அவருக்காவ உருகி, உருகி,
அவரையே பாத்துகிட்டிருந்த இந்தக் கண்ணுங்க ரெண்டும் இப்போ அளுது, அளுது, தன் பண்ணின தப்புக்காவ வருந்தி, வருந்தி,
கண்ணுல தண்ணியே இல்லாமப்போவட்டும்!
நல்லா வோணும் இதுங்களுக்கு!"


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். [1178]


" இப்ப அவரு என்னிய வேணாமின்னு சொல்லிட்டு பூட்டாரு. மன்சால கூட என்னை விரும்பாதவராயிட்டாரு.
ஆனாலும், அவர் பேரை கேட்டாலே
இப்பவும் கிளுகிளுங்குது.

இந்த வெக்கங்கெட்ட கண்ணுங்க மட்டும், பொறுமையே இல்லாம, இன்னமும் அவரைப் பாக்கணுமின்னு துடியாத் துடிக்குது! சீச்சீ! இன்னா பொளப்பு இது?"

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [1179]

" இந்தப் பொல்லாத கண்ணுங்க இருக்கே, ரொம்ப மட்டம்! அவரு வரலேன்னாலும் தூங்க மாட்டேங்குதுங்க.
வந்தாக்காண்டியும் தூங்காதுங்க! அவரையே பாத்துக்கினு இருக்கும்!
இப்பிடி, வந்தாலும் தும்பம், வரலேன்னாலும் தும்பம்னு அலையுதுங்க!"


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. [1180]

அளுது அளுது, அவரையே நினைச்சுகிட்டு இருந்து வீங்கிப் போயிருக்கற
இந்தக் கண்ணு ரெண்டையும் பாரேன்.
பட படன்னு தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சேதி சொல்ற டமாரம் மாரி,
இதுங்க ரெண்டுமே என் மனசு இன்னமும் அவரையேதான் நினைச்சுகினு இருக்குன்றத,
ஊருக்கெல்லாம் காட்டிக் கொடுத்துகிட்டு அலையுதுங்க!"

இப்ப இதுவரைக்கும் சொன்னதிலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?
கண்ணுங்க வேலை பாக்கறதும், அளறதுந்தான்!
மூல காரணமா நின்னுகிட்டு, ஆசையைத் தூண்டி வுடறதும், அப்பால, அத்தயே நெனச்சுகிட்டு அளுவறதுந்தான் இதோட வேலை!
புரியுதா?
ஆராச்சும், கண்ணு பேசுது, சொல்லாத சொல்லெல்லாம் சொல்லுதுன்னு ரீல் வுட்டாங்கன்னா நம்பாதே!
காட்டிக் கொடுக்கும்; கஸ்டப்படுத்தும்!
அவ்ளோதான்!
ஆச்சா?"
என்றவாறே டீயை உறிஞ்சினான் மன்னார்.

"புரியுது மன்னார். இந்த 'உண்கண்' அப்படீன்னு சொல்றாறே, அப்பிடீன்னா என்ன?" எனக் கேட்டேன்.

பெரிதாகச் சிரித்தான் மன்னார்!
'நெனச்சேன்! நீ கேப்பேன்னு நெனச்சேன்! இந்தப் பொண்ணு கண்ணுக்கு மை தீட்டுதில்ல? அதெல்லாத்தையும் இந்தகண்ணு ரெண்டும்
நல்லா தின்னுதுங்களாம்! அதான் உண்கண், மையைத் தின்ன கண்ணுங்கன்னு ஐயன் சொல்லி சிரிக்கறாரு' என்றான்!

நானும் சிரித்துக் கொண்டே, பைதல்னா? என்று இழுத்தேன்.

'இது அடிக்கடி ஐயன் யூஸ் பண்றதாச்சே! பைதல்னா தும்பம்[துன்பம்].

சரி, சரி, தலீவர் படம் இன்னிக்கு ரிலீஸ்! இப்பத்தான் கொஞ்சம் காசு பாக்கலாம். தியேட்டராண்டை நம்ம பசங்க காத்துகினு இருப்பாங்க. நா வர்ட்டா! ஒனக்கு எதுனாச்சும் டிக்கட் வேணுமின்னா, ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் வந்து கண்டுக்கோ!
சரியா!" என்றவாறே அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் தாவினான் மயிலை மன்னார்!

"அட, இருப்பா! நானும் வரேன்!" என்றவாறு நானும் ஆட்டோவில் தொற்றிக் கொண்டேன்!

Monday, May 28, 2007

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

மயிலை மன்னாரின் திருக்குறள் விளக்கம் -- 13 "பொழுது கண்டு இரங்கல்"

"நீ சொன்னதெல்லாம் கற்பனையின் உச்சம். எல்லாமே பொய். திருவள்ளுவர் கூட காதல்னு வந்தா, கன்னாபின்னான்னு சொல்றார் அப்படீன்னு போன அதிகாரத்தைப் படிச்சவங்க சொன்னாங்க" என்ற பீடிகையுடன் மன்னாரைச் சீண்டினேன்.

"என்னை இன்னா பண்ணச் சொல்றே! அவரு ஸொன்னதை அப்பிடியே ஸொன்னேன். அவ்ளோதான். நா இன்னா செய்யமுடியும்? ஆனா, அதுக்காவ, ஐயனைக் கொறை சொல்லாதே! உள்ளதை உள்ளபடியே சொல்லணும்னாலும் அதையும் சொல்லுவாரு அவரு. இப்போ அது மாரி, ஒரு அதிகாரம் ஸொல்றேன். சாயங்காலம் ஆச்சுன்னா ஒரு பொண்ணோட மனஸு இன்னா பாடு படும்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு ஐயன்! ம்... எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்.

இனி வருவது குறளும், அதற்கான அவன் விளக்கமும்!


"அதிகாரம் -- 123" "பொழுது கண்டு இரங்கல்"
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்


வேலைநீ வாழி பொழுது. [1221]


"பொளுதெல்லாம் நல்லாத்தான் போகுது. காலைல எளுந்துரிச்சதும், பரபரன்னு வேலை செஞ்சு, அவருக்கு ட்ரெஸ்ஸு எடுத்து வெச்சு, நாஷ்டா பண்ணிப் போட்டு, மத்தியானத்துக்கு சோறு கட்டிக் கொடுத்து, அவரை அனுப்பி வெச்சதுக்கு அப்பொறம், வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சு, சாப்ட்டுட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, சாயங்காலம் ஆச்சுன்னா, மொகம் களுவி, பொட்டு வெச்சு, பூ வெச்சு, சீவி சிங்காரிச்சுகிட்டு, அவரு வர்ற வளியையே பாத்துகிட்டு நிக்கறப்ப ஒரு தவிப்பு வருதே, அது என் உசிரையே குடிக்கற மாரி இருக்குது.

அதே மாரி, அவனுக்கும், வேலையெல்லாம் முடிச்சிட்டு, எப்போடா பொண்டாட்டியைப் போய் பார்ப்போம்னு துடிப்பான்.

இப்பிடி ரெண்டு பேரையும் இந்தப் பாடு படுத்தற மாலைப்பொளுதே! நீ நல்லா இரு கண்ணு! ஒனக்கு புண்ணியாமாப் போவட்டும்! ஏன் எங்க உசுரை இப்பிடி வாங்கறே நீ?"

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. [1222]

"இன்னும் கோவம் தீரலை இந்தப் பொண்ணுக்கு! இந்தப் பாட்டிலியும் தொடர்ந்து திட்டறா!"

" ஏ மங்கிப் போன மாலைக்காலமே! நீ நல்லா இருடி அம்மா! ஆமா, ஏன் நீ இப்பிடி மங்கிப் போயிருக்கே! பகல்லே எல்லாம் பளபளன்னு இருந்தே! இப்ப 'டல்'லாயிட்டியே! ஒன்னோட ஆளும் எங்காளைப் போல நெஞ்சில ஈரமில்லாத ஆளா? இன்னும் வரலியா? அதான் சாயம் போயி மங்க ஆரம்பிச்சிட்டியோ?"

எனக் கிண்டல் செய்யறா!


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துளிஅரும்பித்

துன்பம் வளர வரும். [1223]

"இன்னும் அவர் வரலை. நான் இங்க வாசல்லியே நிக்கறேன். வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமா நடுங்கிக்கிட்டே ஒளியறமாரி மங்குது.
இது மங்க மங்க, துளித்துளியா என்னோட மனக்கவலை அதிகமாயிட்டே வளருதே!"

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். [1224]

இந்த சாயங்காலப் பொளுது இன்னா மாரி இருக்குன்னு சொல்லுது அந்தப் பொண்ணு இந்தக் குறள்ல. கேட்டுக்கோ!

"6 மணி ஆச்சுது. இந்தப் பொண்ணு நல்லா சிங்காரிச்சுகிட்டு வாசக் கதவாண்டை நிக்குது.
வெய்யிலு சுளீருன்னு அடிக்குது. லேஸா வேர்க்குது. கர்ச்சீப்பை எடுத்து அப்பப்ப துடைச்சுக்குது.
இன்னும் அவரு வரலை.
வெய்யில் கம்மியாகி, மெதுவா இருட்டு பரவ ஆரம்பிக்குது.
இப்பிடி, வெய்யில் கொறைஞ்சு, இருட்டு வர்றது எப்பிடி இருக்குதுன்னா,

தூக்கு தண்டனை இடத்துல கைதி நிக்கறான்.
கொஞ்சங்கொஞ்சமா, தூரத்துல இருந்து அந்த தண்டனையை நிறைவேத்தற ஆளு வர்றப்போ எப்பிடி இருக்குமோ, .....அப்பிடி இருக்குதாம்!"
காலைக்குச் செய்ந்நன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. [1225]

"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"


மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். [1226]

"அவரு என்னோட இருந்த வரைக்கும், என்னை விட்டுப் பிரியாம இருந்த வரைக்கும், இந்த சாயங்காலம் அப்படீங்கற ஒண்ணு இம்மாம் தொல்லை பண்ணும்னு எனக்குத் தெரியாமப் போச்சு.
அதே, அவரு இல்லாம இருக்கறப்போ, அல்லாம் புரியுது! "


காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். [1227]


மொதப்பாட்டுல சொன்னதையே திரும்பவும் வேற விதமா சொல்லிக் காட்டறாரு இதுல.
"காலைல அவரு கிளம்பிப் போனதுக்கப்புறம், கொஞ்சங்கொஞ்சமா அரும்பு விட்டு, ஆரம்பிச்சு, பகல் பொளுதெல்லாம் வளர்ந்து, சாயங்காலம் ஆச்சுன்னா முளுசா மலர்ந்து என்னை வாட்டுதே இந்த துன்பம்!"


அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. [1228]


இப்ப கொஞ்சம் கற்பனை கலந்து சொல்றாரு ஐயன்!
கிராமத்துல இருக்கறவங்களுக்கு, இல்லாட்டி, அங்கே இருந்தவங்களுக்கு இது நல்லாவே புரியும்.


" மாலை நேரம்!
இந்தப் பொண்ணு காத்துகிட்டு நிக்குது.
இன்னும் அவன் வரலை.
அப்போ, தூரத்துல இருந்து ஒரு புல்லாங்குழல் சத்தம் கேக்குது.
மேய்ச்சலுக்குப் போன மாடுங்கல்லாம் வூட்டுக்கு திரும்பற நேரம்.
மாடுங்களை எல்லாம் ஒண்ணு சேர்க்கறதுக்காவ, மாட்டுக்காரன் புல்லாங்குழலை எடுத்து ஊதறான்.
இது இந்தப் பொண்ணு காதுல விளுது.
ஆஹா! நேரம் ஆயிப்போச்சே! இந்த மாலை அப்படீங்கற கெட்ட பொளுது வர்றதுக்கு தூது சொல்ற மாரி இது இருக்கே" ன்னு ஏங்குது இது.


பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. [1229]

இப்போ அந்தப் பொண்ணோட கோபம் ஜாஸ்தியாவுது.
வர்ற கோபத்துல, அல்லாருக்கும் சாபம் கொடுக்க ஆரம்பிக்குது! எதுக்காவ?


இந்தப் பொண்ணு சாயந்தரமா வூட்டுக்காரனுக்காவ காத்துகினு நிக்குது.
அவனோ வந்தபாடில்லை இன்னும்!
சாரிசாரியா ஜனங்கல்லாம் அவங்கவங்க வூட்டுக்கு வந்து சேர்றாங்க.

ஒடனே, அந்தந்த வூட்டுக்காரிங்களும் அவங்களுக்கு வக்கணையா சோறாக்கி போடறாங்க!
சிலபேரு வயிறு முக்க துண்றாங்க
இன்னும் சில பேரு சோறு துண்றதுக்கு முந்தி கொஞ்சம் தண்ணி அடிக்கறாங்க.

இது ஒரு கண்ணால அத்தினியையும் பாத்துகினே கீது.

வெய்யில் தீந்து போயி, வெளிச்சம் மங்குது இப்ப.

இவனும் வந்த பாடில்லை.
ஆத்திரமும், துக்கமும் பொத்துகிட்டு வருது இதுக்கு.

"இங்கே நா காஞ்சு கருவாடா நிக்கறேன், அவரு இன்னமும் வரலியேன்னு; இவனுக இன்னாடான்னா தின்னுபுட்டு, குடிச்சுகிட்டு குஷாலா ஆட்டம் போட்டுக்கினு கீறாங்க.

நா எப்பிடி இங்கே அவரைக் காணாம தும்பப்பட்டுக் கீறேனோ, அதேமாரி, இவனுகளும் துண்ணது செரிக்காம, குடிச்சது தலைக்கேறி தும்பப்படட்டும்னு ஒரு சாபம் கொடுக்கறா!"
" என் புத்தியே மயங்கிப் போற மாரி வருது இந்த சாயங்காலம்.
எப்பிடி இங்கே நான் வருத்தப்படறேனோ, அதே மாதிரி, இந்த ஊர்ல இருக்கற அல்லாரும் மயங்கி துன்பத்தை அனுபவிக்கட்டும்!"


பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். [1230]

இத்தான் டாப்! இந்த வருத்தம் இந்தப் பொண்ணை இன்னா பண்ணுதுங்கறதை கொஞ்சம் ஓவராவே சொல்லிக் காட்டுது இந்தக் குறள்.

" சம்பாரிச்சுகிட்டு வர்றதுக்காவ போனவரு இன்னமும் வராத இந்த சாயங்காலத்துல, இதுவரைக்கு போவாத என்னோட உசிரு, இன்னைக்கு, இப்ப, இந்த நேரத்துல, அவரை நெனைச்சே போயிரும் போல இருக்கே!"

இதுல எதுவுமே ஜாஸ்தியா ஐயன் சொல்லலை.
இது மாரி காதலனுக்காவ, புருசனுக்காவ ஏங்கிகிட்டு இருக்கற அன்பான பொண்ணுங்களைக் கேட்டுப் பாரு.
உண்மை புரியும் ஒனக்கு.

சொன்ன டயத்துக்கு வூட்டுக்கு போகாங்காட்டி, ஒங்க அண்ணி கண்ணைக் கசக்கிகிட்டு இருக்கும்.
சீக்கிரமா டீயைக் குடிச்சுமுடி.
நா வூட்டுக்கு போவணும்" என்று அசடு வழியச் சிரித்தான் மயிலை மன்னார்.

"சரி, சரி, நீ கிளம்பு" என அன்புடன் விடை கொடுத்தேன், என் நண்பனுக்கு!

No comments:

Post a Comment