Tuesday, September 28, 2010

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

எழுத்து என்பது பல்முக வடிவம் கொண்ட ஊடகம். முன்பு பனை ஓலை, கல்வெட்டு, செப்பு பட்டையம் என பல்வேறு வடிவில் இருந்த எழுத்து அறிவியல் முன்னேற்றத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக செய்தி பரிமாற்றத்தின் இடைவெளியும் குறைந்து மக்கள் செய்தியால் நிரம்பி வழியும் நிலைக்கு நம் ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மனிதன் கடக்கும் செய்தியை எடுத்துக் கொண்டால் அவனின் மூளையின் வேகத்திற்கு இணையாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஊடகத்தின் பரிமாணமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முறை தற்சமயம் பரவலாக இருக்கிறது. அரசாங்கம் கூட குறுஞ்செய்தி பயன்படுத்தி விழிப்புணர்வு செய்தியை கொடுக்க துவங்கி உள்ளது.
பலர் இதனால் கெடுதல் உண்டாகிறது என்றும் மனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும் எந்த ஒரு ஊடகத்தையும் அற வழியில் பயன்படுத்தினோமானால் அதனால் அந்த ஊடகத்திற்கும் நமக்கும் கேடில்லை.

முதலில் இணையம் தோன்றிய காலத்தில் ஆன்மீகவாதிகள் இணையத்தை பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இன்றோ வலைதளம் இல்லாத ஆன்மீக குழு என்பதே இல்லை என்பது நிதர்சனம்.

மின்னஞ்சலை கூட ஆன்மீகவாதிகள் பயன்படுத்தலாமா? அதில் ‘அட்டாச்மெண்ட்’ உண்டே என்றல்லாம் சிந்தித்த புத்திசாலிகள் பலர் உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களை ஆன்மீகத்திற்காக பயன்படுத்தினால் தவறு இல்லை என்பது எனது கருத்து.

ஒரு ஊடகம் மக்களை கெடுக்கிறது என கூக்குரல் எழுப்புவதைக் காட்டிலும் அந்த ஊடகத்தை நல்வழியில் பயன்படுத்தி காட்டுவதே ஆன்மீகவாதிகளுக்கு அழகு.

இப்படி நான் கொண்ட கருத்துக்களால் டிவிட்டர் (twitter.com) என்ற சேவையை பயன்படுத்த துவங்கினேன். 140 எழுத்தில் நம் கூற விரும்பும் கருத்தை கூறிவிடலாம். இது செல் போன் குறுஞ்செய்திக்கு ஒப்பானது.
உலகில் பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. சிலர் நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன் என தங்களின் செயல்களை எழுதுகிறார்கள். சிலர் உத்தியோக விஷயங்களை கூறுகிறார்கள். பலர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார்கள்.

நமக்குத்தான் மேற்கண்ட விஷயங்கள் வராதே...! அதனால் குரு சிஷ்ய கதைகளை டிவிட்டரில் எழுத துவங்கிவிட்டேன். 140 எழுத்துக்குள் குறுங்கதையாகவும் அதுவே குரு கதையாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலில் சில கதைகள் எழுதி விட்டேன். அவற்றில் ஒரு டஜன் கதைகள் உங்களுக்காக...
>--------------------------
அற்புதமான தருணம் எது என்ற கேட்ட சிஷ்யனிடம் கூறினேன்.”நான் இல்லாமல் போவது” என்னை கொன்றான் சிஷ்யன்..! #1

தினமும் வேதம் படித்த சிஷ்யனின் வேத புத்தகத்தை பிடுங்கி எரித்தேன். தீய்ந்து கருகிய வாசம் வந்தது. சிஷ்யனின் உள்ளே நறுமணம் வீசத்துவங்கியது- #2

குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும் என கேட்டான். தட்டி எழுப்ப அது என்ன எருமை மாடா? என்றேன் என் எருமை மாடு சிஷ்யனிடம். #3

எங்கும் கடவுள் நிறைந்திருக்க கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் சிஷ்யன். அங்கும் இருக்கிறார என காண் என்றார் குரு..! #4

தலை முடியை மழித்தால் ஆன்மீகவாதியாகி விடுவேனா என கேட்டான் சிஷ்யன்.நார் உறிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை காட்டி,ஆன்மீக தேங்காய் என்றார் குரு- #5

ஞானம் அடைய குரு தேவையா என கேட்டான் சிஷ்யன். புன்சிரிப்புடன்,” குருவை அடைய ஞானம் தேவை” என்றார் குரு. #6

சிஷ்யன் : ஆன்மீகமாக இருக்க வெங்காயம் பூண்டு தவிர்க்க வேண்டுமா? குரு-இறைவன் படைப்புகளை ஒதுக்கும் ஆணவம் இருக்கும் நீ எப்படி ஆன்மீகனாவாய்? #7

குடும்ப நபர்களை காட்டிலும் உங்கள் மேல் எனக்கு ஈடுபாடு வர என்ன காரணம் குருவே என்றான் சிஷ்யன்.குரு:அவர்கள் இரத்த உறவுகள், நாம் உயிர் உறவுகள்#8

சிஷ்யன்:உருவவழிபாடு தேவையா? குரு : உன்னை நீ உடலாக நினைக்கும் வரை உருவம் வேண்டும். உடலை கடந்தால் அனைத்தும் அருவமே. ஏன் என்றால் தத்வமஸி..!#9

சிஷ்யன்:மனிதனுக்கு மட்டும் தானே குரு தேவைப்படுகிறார். விலங்குகளுக்கு குரு உண்டா?குரு:மனிதன் என்ற ஆணவம் உனக்கு.ஆகையால் கூறியும் பயனில்லை.#11

சிஷ்யன் : குருவே நான் என்று குரு நிலை அடைவேன்? குரு : என்று நீ சிஷ்யன் ஆகிறாயோ அன்றே அது முடிவாகும். #12

--------------------

Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!

Tuesday, September 29, 2009

நானும் வரம் தரப்போகிறேன்...!

என் இமயமலை பயணத்தின் இடையே கங்கையாற்றின் கரையில் இளைப்பாருவதற்காக அமர்ந்தேன். கங்கை பிரவாகமாக சென்று கொண்டிருந்தது. கண்டிப்பாக ஆழமும் வேகமும் அதிகம் என அதன் போக்கை வைத்து பார்க்கும் பொழுதே தெரிந்தது.

சில நாட்களாக வெளியுலகில் இருந்து துண்டிக்கபட்டிருந்தேன். சரி நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள என் மடிக்கணினியை (Laptop) திறந்து இணைய இணைப்பை இணைத்தேன். அது கம்பி இல்லா அகண்ட அலை சேவை. (wireless broadband) சரியாக தொடர்பு கிடைக்கவில்லை. மடிக்கணியை அங்கே இங்கே அசைத்தேன்.. தொடர்பு விட்டு விட்டுவந்தது.. சிறிது சாய்வாகவும் ஒரு மரத்தில் அருகில் சென்றால் ஓரளவு அலைவரிசை கிடைத்தது. ஒரு பக்கமாக சாய்ந்து மரத்தின் அடியே அமர்ந்து கொண்டேன்.. என் கால்கள் இரண்டும் கங்கை ஆற்றின் உள்ளே வைத்திருந்தேன். பயணத்தால் களைத்திருந்த உடலுக்கு கால்களில் குளிர் நீர் படுவது இதமாக இருந்தது.

சில இணைய பக்கங்களுக்கு சென்று உலாவி விட்டு கணினியை மூடி கிளம்ப எத்தனிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. கைத்தவறி என் கணினியை கங்கையாற்றில் விழுந்துவிட்டது...!


நினைத்துபாருங்கள் எப்படி இருக்கும் எனக்கு?... செய்வது அறியாமல் திகைத்தேன்.. ஆற்றின் வேகத்திற்கு இந்நேரம் என் மடிக்கணினி வங்காள விரிகுடாவில் கலந்திருக்குமோ என்றெல்லாம் மனதில் எண்ணம் வந்து சென்றது. நல்ல வேளை வலைபக்கத்தை பார்த்த பிறகு மூடிவிட்டேன். இல்லையென்றால் அதில் மீன்கள் மாட்டியிருக்குமே என்று ஒருபக்கம் குழப்பம். அதுவும் அந்த பதிவரின் வலைபக்கம் வேறு. அதில் மாட்ட கூட வேண்டாம். மீன்கள் அதை பார்த்தாலே இறந்துவிடுமே என ஒரு வஞ்சக எண்ணமும் தலைதூக்கியது...

எத்தனை எத்தனை தகவல்கள் அதில்.. எதிர்கால உலகை மேம்படுத்த என சிந்தனைகளை அதில் வடித்துவைத்திருந்தேனே? மக்களை உய்விக்கும் அந்த எண்ண சிதறல்கள் எப்படி மீண்டும் நான் உருவாக்குவேன் என மனவருத்தத்தில் இருக்கும் பொழுது...கங்கை ஆற்றின் மேல் ஒரு புகைமண்டலம் உருவாகியது.....

புகைமண்டலத்தின் நடுவில் ஒரு தேவதை வெளிப்பட்டு கண்கள் கூசும் ஒளியுடன் என்முன் நின்றாள். தேவதையை நீங்கள் பார்க்க வேண்டுமே.... அப்பப்பா... திரைப்பட பாடலில் தேவதை என வர்ணிக்கும் சினிமா நடிகைகளுடன் இந்த தேவதையை ஒப்பிட்டால் அடுத்த ஜென்மத்திலும் நான் தமிழகத்தின் வாக்காளனாகவே பிறக்க நேரிடும்.

தேவதையின் அழகில் மூழ்கி இருக்கும் பொழுது தம்பூராவின் கடைசி தந்தியை மீட்டிய ஒலியில்
தேவதையின் குரல் ஒலித்தது..

“கவலைபடாதே மானிடா... உன் கவலையை போக்கவே நான் வந்திருக்கிறேன். உன் மடிகணினி இது தானே” என பிங்க் நிறத்தில் இருக்கும் சோனி வாயோ மடிகணினியை கண்பித்தாள் தேவதை. அதன் தற்சமய விலை 3800$.

நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்... பிறகு “இல்லை” என்றேன்.

சில வினாடிகளில் மீண்டும் ஒரு மடிக்கணினியை காண்பித்து இதுவா என்றாள். அது 4700$ விலைகொண்ட டெல் கணினி. தேவதையே எனக்கு சாமி டாலர் வாங்வே பணம் இல்லாத பிச்சைக்காரன். நான் எப்படி சோனியும் , டெல்லும் வாங்குவேன்? என்றேன்.

சில நொடிகளுக்கு பிறகு என் லினோவா டப்பாவை தேவதை காண்பித்தாள். நான் ‘ஆம்’ என்றேன்.

“மானிடா உன் நேர்மையை மெச்சினேன்” என்று என் கையை நீட்ட சொல்லி எனக்கு மூன்று கணிப்பொறியையும் கொடுத்தாள் தேவதை.

“தேவதையே உனக்கு அறிவு கிடையாதா? உங்கள் தேவதை பரம்பரையில் முன்னோர்கள் விறகு வெட்டியிடம் செய்தது என்னவோ அதையே நீயும் செய்கிறாயே? மூன்று மடிக்கணியையும் வைத்து நான் என்ன செய்ய? இருக்கும் ஒரு கணினியை வைத்தே உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.

“ தேவதை பரம்பரை பற்றி கூற உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் யார் முன் தோன்றினாலும் அவர்கள் நான் கொடுக்கும் மூன்று பொருளை வாங்கி செல்லுவார்கள். நீ தான் அதிகப்பிரசங்கி போல இருக்கிறாய்”

“தேவதையே நான் அதிகப்பிரசங்கி என்பது ஊருக்கே தெரியும், ஆனால் விறகு வெட்டி போல வெகுளி அல்ல. நான் புத்திசாலி அதனால்தான் அப்படி கேட்கிறேன்.”

“சரி உனக்கு இவை எல்லாம் வேண்டாம் என்றால் மூன்று வரம் தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்”

“நீ வரம் தருவது இருக்கட்டும். நான் மீண்டும் சொல்லுகிறேன். வரம் கொடுத்துவிட்டு பின்னால் சங்கடப்பட கூடாது”

“அற்ப மானிடனே. நீரில் விழுந்த மடிகணினியை எடுக்க தத்தளித்தாய். இப்பொழுது எனக்கே அறிவுரை சொல்லுகிறாயா? ”

“தேவதைகளுக்கு அழகு இருக்கும் அளவுக்கு..... அ.......அனுசரணை இருக்காது என கேள்வி பட்டிருக்கிறேன்..இன்று தான் நேரில் பார்க்கிறேன். நான் வரங்களை யோசித்து கேட்க விரும்புகிறேன். இப்படித்தான் ஒரு எறும்பு யோசிக்காமல் வரம் கேட்டு மாட்டிகொண்டது”

“எப்படி கொஞ்சம் விவரமாக சொல்லேன்”

“மனிதர்கள் தங்களை வாழவிடுவதில்லை என எறும்பு ஒன்று கடவுளை பார்த்து தவம் இருந்தது. கடவுள் அதன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் கேள் என்றார். மனிதர்கள் மேல் இருந்த கோபத்தில் எறும்பு கேட்டது. நான் கடித்தவுடன் சாகவேண்டும்.

கடவுள் தந்தேன் என மறைந்தார். வரத்தை சோதித்து பார்க்க மனிதனிடம் சென்று அந்த
எறும்பு கடித்தது. மனிதன் கோபத்தில் அதை “சத்” என அடித்து தூர வீசினான். வரமும் பலித்தது, கடித்தவுடன் எறும்பு செத்தது. யார் சாகவேண்டும் என வரம் வாங்கவில்லை அல்லவா?. இப்படி நான் அல்லல்பட கூடாது என்பதால் யோசித்து கேட்கிறேன் என்றேன். ”

என் தத்துவ கதையை கேட்டு டயர்டான தேவதை. பெருமூச்சு விட்ட பின் கூறியது.

“அதிகம் பேச்சு ஆண்களுக்கு அழகல்ல. முதல் வரம் தர நான் தயார். கேள்”


“ கேட்கும் வரங்களை கண்டிப்பாக கொடுப்பேன் என வாக்கு கொடு. நான் கேட்கிறேன்.”

“என் தேவதை பரம்பரையின் மேல் ஆணை. கேள்”

“ம்......உனக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நான் ஒரு கதையாக எழுத போகிறேன். அதை அனைவரும் படிக்க வேண்டும்”

“தந்தேன். இரண்டாவது வரம்”

“உலகில் பலர் வரம் கொடுக்கிறேன் பேர்வழி என சுயநலத்தை தூண்டி பிறரின் எதிர்பார்ப்பு எனும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். அவர்களை பற்றிய தெளிவு மக்களுக்கு கொடுக்க வேண்டும்”

“அவர் அவர் அழிவுக்கு அவர் அவரே காரணமாக இருப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? இருந்தாலும் நீ கேட்ப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என வரம் தருகிறேன்”

“மூன்றாவது வரம்... மூன்றாவது வரம்....”

“மானிடனே கேள் என்ன தயக்கம்,?”

“எனக்கு மீண்டும் மூன்று வரங்கள் வேண்டும். இதுவே என் மூன்றாவது வரம்”

சிறிது வினாடி யோசித்த அந்த தேவதை.. “சரி. தந்தேன்” என்றது.

நானும் இமயமலை சாரலில் இருந்து வரம் கேட்கிறேன் பேர்வழி என அந்த தேவதையை கூட்டிவந்து விட்டேன். இப்பொழுது எல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட தேவதையிடம் வரம் கேட்பது என்றாகிவிட்டது. இரண்டு வரங்கள் கேட்டு விட்டு மூன்றாவதாக மீண்டும் மூன்றுவரம் கேட்டுவிடுவேன். கணிப்பொறி மென்பொருள் போல Do. Loop என திரும்ப திரும்ப தேவதை வரம் கொடுத்து என்னிடம் மாட்டிக்கொண்டது. தேவதை இப்பொழுது தான் உணருகிறது. இவனிடம் வசமாக சிக்கிவிட்டோம் என்று. இனி தேவதை பரம்பரையில் யாரும் புத்திசாலிகளுக்கு வரம் தர மாட்டார்கள்...!

உங்களுக்கு ஏதாவது வரம் வேண்டுமா? இரண்டு வரம் கேளுங்கள்... மூன்றாவது வரம் என்ன என்பது உங்களுக்கே தெரியுமே..

Sunday, May 10, 2009

கிபி 5503

தனது கதிரியக்க உடையை அணிந்துகொண்டான் இண்டூ என செல்லமாக அழைக்கப்படும் இண்டெலன். தலையில் பறக்கும் கவசத்துடன் தயாராகி வீட்டின் வெளியே வந்தான்.

பேராசிரியரின் வீட்டிற்கு செல்ல முன்பே மனோ தள தகவலை சினேகிதி பார்ப்பிக்கு அனுப்பி இருந்தான். தூரத்தில் சிவப்பு உடையில் தலைபகுதியில் விசிறி பறக்க என்னருகில் வந்தாள் பார்பி.

அவளை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள், “ஏன் தாமதம் என கேட்கிறாயா? என்னை பிரதி எடுத்து கொள்ள சென்றேன். இதோ என் பிரதி” என அவளை போலவே மற்றொரு உயிரை காட்டினாள். இவள் எதற்கு என்றேன்.

"வீட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை பட்டது அதனால் பிரதி எடுத்தேன்,அது இருக்கட்டும் இண்டூ,பேராசிரியர் கிழத்திற்கு என்ன வந்தது எதற்காக வ்ரச்சொன்னார்?”

"எதோ ரகசிய ஆய்வு செய்திருக்கிறாராம், நம்மிடம் காட்ட விரும்புகிறார். வா செல்லலாம். நேரம் 45 அணுக்களை தாண்டிவிட்டது. இன்னும் தாமதம் வேண்டாம்.”



தனது பிரதியை அனுப்பி விட்டு தயாரானாள் பார்ப்பி. தங்கள் தலை பகுதி விசிறியை இயக்கி இருவரும் பறந்தனர். பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமவெளியாக இருந்தது. வீடுகள் ஈர்ப்பு விசையில்லாமல் அந்தரத்தில் மிதங்கி கொண்டிருந்தது. அதன் குறுக்கே பறந்த பார்பியும், இண்டூவும் பேராசிரியர் வீட்டை அடைந்தனர்.

தங்களை வீட்டின் வாயிலில் இணைத்து கொண்டதும் கதிரியக்க ஆய்வுக்கு பிறகு இருவரையும் வீடு தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. பேராசிரியர் இருவரையும் வரவேற்று, அரசின் கண்காணிப்பு கருவியை தற்காலிகமாக நிறுத்தினார்.

அவர் உபசரிப்புக்காக வழங்கிய ஆக்சிஜனை முகர்ந்த படியே கேட்டனர், “எங்களை வர சொன்னதன் நோக்கம் என்ன பேராசிரியரே?”

தனது தாடியை சொறிந்தபடியே கூறத்துவங்கினார்.

“பல நூற்றாண்டுக்கு முன்பு மனித இனம் சிலவிதமான கதிரியக்க போரால் அழிந்துவிட்டது. இந்த கிரகம் முழுவதும் அழிக்கப்பட்டு சில எஞ்சிய மனிதர்கள் மூலமே மனித இனம் தழைத்து வருகிறது.இந்த கிரகத்தின் நிலப்பரப்பு தனது முழு சக்தியை இழந்து வெறும் நிலமாக காட்டி அளிக்கிறது. ஈர்ப்புவிசைக்கு எதிராக பழகிய நாம், நிலத்தை தோண்டி பார்க்க அரசு அனுமதிப்பதில்லை. அதையும் மீறி ஒரு நாள் நிலத்தை தோண்டி பல நூற்றாண்டுக்கு முன் மனித இனம் பயன்படுத்திய ஒரு கருவியை எடுத்துவந்தேன். அதில் ஆச்சிரியப்படும் சில செய்திகள் பார்த்தேன். இதோ பாருங்கள்”

அங்கே சதுர வடிவில் ஒரு கருப்பு நிற பொருள் இருந்தது. இரு மடிப்பாக இருந்த அந்த பொருளை திறந்து விசையை அழுத்தினார் பேராசிரியர்.

"windows Xp" என ஒளியை உமிழ்ந்தது...

சில அனுத்துகள் நேரத்திற்கு பிறகு தன் ஒளி பகுதியில் காட்சி மாறியது.
“பார்த்தீர்களா எப்படி வேலைசெய்கிறது- இன்னும் இதற்கு உயிர் இருக்கிறது” என்றார் பேராசிரியர்.

"ஐயா அது என்ன மூலையில் ஏதோ எண்வடிவில் தெரிகிறதே?” என்றான் இண்டூ.


“நமது முன்னோர்களின் கடிகாரம். அதில் 1980 முதல் 2999 வரை எண்கள் இருக்கிறது. ”


"அதற்கு பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது?”


"தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் வேறுகிரகத்திற்கு பயணித்திருக்கலாம்”


"இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்” என்றாள் பார்ப்பி.


“இதில் பல தகவல்கள் உண்டு. அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை இதில் அறிந்து கொள்ள முடியும். இதை பயன்படுத்தியவர்
தனது நண்பருக்கு சில தகவலை பரிமாறி இருக்கிறார். அதில் வரும் சில வார்த்தைகளுக்கு என்னால் அர்த்தம் காண முடியவில்லை ஆனால் அகராதியில் தேடிவருகிறேன்.”
"அது என்ன வார்த்தைகள் பேராசிரியரே?”

"மாப்ளே, சும்மா,சினிமா, சாப்பிடுதல் என்ற பல வார்த்தைகள் நடைமுறையில் இல்லை. அந்த மனிதர் பெரிய இலக்கியவாதியாக இருப்பர் என
நினைக்கிறேன். அதனால் தான் கடுஞ்சொற்களை பிரயோகித்திருக்கிறார்”

“இதற்கும் எங்களை வர சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ஆசிரியரே?”

“இண்டூ, இந்த கருவியின் ஓரத்தை கவனித்தாயா? உனது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன் இது ஆலயத்தில் வழிபட்ட
கருவியாக இருக்கலாம். இல்லையென்றால் நம் கடவுள் இண்டல் பெயர் இதில் இருக்குமா? மேலும் இந்த கருவியின் தகவல் களஞ்சியத்தில் பார்ப்பி என்று தேடினால் ஒரு பெண் உருவின் தகவல் வருகிறது. நிச்சயம் அது ஒரு வகுப்பினரால் வணங்கப்பட்ட பெண் தெய்வமாக இருக்கலாம்”

”பேராசிரியரே, தயவு செய்து உங்கள் ஆய்வுகளை நிறுத்துங்கள். நமது மின்னனுக்கடவுள் இண்டல் பல நூற்றாண்டுக்கு முன் கிடையவே கிடையாது”
“உங்களுக்கு எனது ஆய்வு வேடிக்கையாக இருக்கலாம். உண்மையில் அவரிகளிடம் ஒரு சிறிய தகடு இருந்திருக்கிறது. அதை கையில் வைத்துக்கொண்டால் அஷ்டமா சித்தி கிடைக்குமாம்”

“அஷ்டமா சித்தி என்றால்?” என்றனர் கோரசாக.

”தொலைதூரத்தில் இருக்கும் நபரிடம் பேசுதல், அவரின் பிரதியை காணுதல், ஒலி மற்றும் ஒளியை ஏற்படுத்துதல், தகவல்களை பரிமாறுதல், அசைவு படம் எடுத்தல் என பல சித்திகள்.”

“பேராசிரியரே, இது சாத்தியமா? ஏன் வீண் காலவிரயம்? “

”நீங்கள் நம்பவில்லை என்றால் போங்கள் இந்த தகடை வைத்து நான் அஷ்டமா சித்தியை பெருகிறேன்.”

பேராசிரியர் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மொபைல் சிம் கார்ட்டை பிளாஸ்டிக் பூக்களையும், டார்ச்சு லைட்டையும் வைத்து பூஜிக்க துவங்கினார்.

டிஸ்கி : தற்காலத்தில் மந்திர, யந்திரங்களை பயன்படுத்தும் முறையையும் - மாயன் கலாச்சாரம் பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் காட்டுரையையும் படித்ததால் உருவான சிறுகதை.

No comments:

Post a Comment