Friday, October 15, 2010
பூச்செடி வளருங்க! (ஆன்மிகம்) ஜன., 1 – ஆருத்ரா தரிசனம்!
நாம், இன்று கடையில் கிடைக்கிற பூக்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்கிறோம். ஆனால், வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்தால், புத்தம் புதிய பூக்களால் இறைவனைப் பூஜிக்கலாம். புதிய பூக்களை இறைவன் விரும்புகிறார் என்பதற்கு, திருவாதிரை நாயகர் நடராஜரின் அருள்பெற்ற வியாக்ரபாதரின் கதையே சாட்சி.
சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார் மத்யந்தினர் என்ற முனிவர். இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு, “மாத்யந்தினர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. மாத்யந்தினருக்கு, ஞானமார்க்கத்தை அவரது தந்தை கற்றுக் கொடுத்தார். எப்படியேனும், தன் வாழ்நாளில் சிவதரிசனத்தை நேரில் பெற்று விட வேண்டும் என விரும்பினார் மாத்யந்தினர்.
இந்த ஆசை நிறைவேற, தில்லைவனத்திற்கு சென்று, அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரும்படி வற்புறுத்தினார் அவரது தந்தை. மாத்யந்தினரும் தில்லை வனத்தைச் சிரமப்பட்டு வந்தடைந்தார். அந்தக் காட்டில் ஓரிடத்தில், சிவலிங்கம் ஒன்று ஒளி வீசிய நிலையில் இருந்தது. அந்த லிங்கமே தன் தந்தை குறிப்பிட்டதாக இருக்க வேண்டுமென கருதிய மாத்யந்தினர், அந்த லிங்கத்திற்கு, “திருமூலநாதர்’ என பெயர் சூட்டி வணங்கி வந்தார்.
அந்த லிங்கத்திற்கு, தினமும் அதிகாலையில் பூத்த புத்தம்புது பூக்களால் அவர் பூஜை செய்வது வழக்கம். இதற்காக காட்டிலுள்ள மரங்களில் பூக்கும் பூக்களை காலை 4.00 மணிக்கெல்லாம் பறித்து வந்தார். இருளில் கண் சரி வர தெரியாததால், அவர் பறிக்கும் பூக்களில் அழுகியவை, இதழ் உதிர்ந்தவை, பட்டுப்போனவை என மற்ற பூக்களும் கலந்து வந்தன. இது மாத்யந்தினர் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒருமுறை, கண்ணீருடன் இந்தக் குறையை இறைவனிடம் முறையிட்டார். தன் மேல் அவர் கொண்ட அன்பைக் கண்ட இறைவன், அசரீரியாக, “மகனே! நீ மரங்களின் உச்சிக்குச் சென்று நல்ல பூக்களை பறிக்கும் வகையில் பற்றி ஏறுவதற்கு புலி நகங்களை கையிலும், காலிலும் தருகிறேன். புலிக்கு இருளிலும் கண் நன்றாகத் தெரிவது போல, எவ்வளவு இருட்டாயினும் உன் கண் தெளிவாகத் தெரியச் செய்கிறேன்…’ என்றார்.
அதன்படியே விரல்களைப் பெற்ற மாத்யந்தினர், சிறந்த மலர்களைப் பறித்து சுவாமிக்கு பூஜை செய்தார். புலியை, “வியாக்ரம்’ என்பர். இதனால், இந்த முனிவருக்கு, “வியாக்ரபாத முனிவர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
தன் மீது கருணை கொண்ட முனிவரின் வம்சத்தையும் பெருமையடையச் செய்தார் சிவன். மாத்யந்தினருக்கு மனைவியாக வாய்த்தாள் வசிஷ்டரின் சகோதரி. அவர்களுக்கு உபமன்யு என்ற மகன் பிறந்தான். காட்டில் வசித்ததால், குழந்தையை வளர்க்க சிரமப்பட, சகோதரியை, தன் ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று, காமதேனுவின் பாலை புகட்டி வந்தார் வசிஷ்டர். தன் மனைவி, குழந்தையைப் பிரிந்திருக்க மாத்யந்தினருக்கு மனமில்லாததால் மீண்டும் தில்லைவனத்துக்கே அழைத்து வந்து விட்டார்.
காமதேனுவின் பாலை குடித்து வளர்ந்த குழந்தை, காட்டில் சமைத்த கஞ்சியைக் குடிக்க மறுத்து அழுதான். தன் பக்தனின் குழந்தைக்காக, தில்லைக் காட்டிற்கு பாற்கடலையே வரவழைத்து, குழந்தைக்கு புகட்டச் செய்தார் சிவன். அத்துடன், தன் திருநடனத்தையும் இந்தக் காட்டில் அவருக்கு காட்டியருளினார். அவர் நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை நாளாகக் கருதப்படுகிறது. அந்த தில்லைவனமே இப்போது சிதம்பரம் எனப்படுகிறது.
புத்தம்புது மலர்களால் பூஜை செய்ததற்கு கிடைத்த பலனைப் பார்த்தீர்களா! எனவே, நாமும் வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்து, புத்தம் புதுபூக்களால் இறைவனை பூஜிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment