Friday, October 15, 2010

மூலிகை கட்டுரை -நினைவுகள் மறப்பதில்லை


மனிதர்களுக்கு உள்ள சிறப்பான குணங்களில் ஞாபகசக்தியும் ஒன்று. ஆனால் மூளையின் செயல்பாட்டில் தோன்றும் சில மாறுதல்களால் 40 வயதை கடந்தவர்கள் பலவகை ஞாபக இழப்புக்கு ஆளாகின்றனர்.
நரம்பு செல்களின் அழிவினால் தோன்றும் இந்த மறதி நோயை அல்சிமர் நோய் என்று அறிவியல் குறிப்பிடுகிறது. மறதி நோயுடையவர்கள் தாங்கள் சொன்னதை மறந்து மீண்டும் மீண்டும அதே கருத்துகளை சொல்வதும், சில நேரங்களில் சொல்லாத செய்தி களையும் நிகழாத நிகழ்வுகளையும் நடந்ததுபோல் சொல்வதுமுண்டு. இந்த நோயை கட்டுப்படுத்த ஆப்பிள், அத்திப்பழம், நெல்லி, பாதாம், வல்லாரைகீரை போன்றவை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மிக எளிதாக, விலைமலிவாக கிடைக்கும் கீரையான சிறுகீரையும் ஞாபகமறதியை போக்கும் அற்புத ஆற்றல் உடையது.
அமரன்தஸ் மெலன்கோலிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அமரன்தியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுகீரை செடிகளின் இலை பாகங்களில் அடங்கியுள்ள அமரான்டின், பீட்டைன் போன்ற வேதிச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மூளைச் சுருக்கத்தை கட்டுப்படுத்தி, செல் சிதைவை நீக்கி, மூளைக்கு புத்துணர்ச்சி தந்து, நினைவாற்றலை நீடிக்கச் செய்யும் அற்புத ஆற்றல் உடையன.
சிறுகீரையை நன்கு அலசி, காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து, அதில் வதக்கிய வெங்காயம் 100 கிராம், கடுகு அரைதேக்கரண்டி, உளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்தபாசிப்பருப்பில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அரைமூடி தேங்காயை அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, அத்துடன் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி, மிளகுதூள் அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கி, லேசாக நெய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி சாப்பிட்டுவர ஞாபகசக்தி அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தை தூண்டும் தன்மையுடையதால் வீரியமிக்க சித்த, ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளும்பொழுது சிறுகீரையை தவிர்க்க வேண்டுமென மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment