Saturday, October 16, 2010

பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…. மூலிகை கட்டுரை


சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.
இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், இறையன் பர்களையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.
இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.
குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.
பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

No comments:

Post a Comment