Friday, October 15, 2010
ஆறாத புண்களுக்கு செவ்வரளி -மூலிகை கட்டுரை
நம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர் நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும்.
நமது உடலின் புற அந்தங்களான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக்கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.
சர்க்கரை நோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், தொழுநோயில் தோன்றும் உணர்வின்மை காரணமாக விரல்களில் புண்கள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் தோன்றும் கிருமித்தொற்று, அடைப்பு காரணமாக விரல்களில் புண்கள் மற்றும் உணர்வற்று படுத்தே கிடப்பதினால் உண்டாகும் படுக்கைப்புண்கள் ஆகியன உண்டாகலாம்.
மேற்கண்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்று கட்டுப்பாடுடன் இருந்து வரும் போதிலும், சில நேரங்களில் புண்கள் உண்டாகி, அவை ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆவது மட்டுமின்றி, அந்தப் புண்களில் நீர் வடிதல், சீழ் வடிதல் மற்றும் துர்நாற்றம் வீசுதல் ஆகிய துன்பங்கள் ஏற்பட்டு, பிறர் அருகில் வருவதற்கே அருவெறுப்பு அடையும் சூழ்நிலை உண்டாகும். பலவகையான கிருமிகள் இந்த புண்களின் வழியாக உடலின் உள்ளே சென்று, பலவித நோய் களை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு என்பதால், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் புண்களை குணப்படுத்திவிட வேண்டியது அவசியம்.
உணர்வற்ற நிலையில் தோன்றும் விரல் புண்கள், படுக்கை புண்கள் ஆகியவற்றை நீக்கி, அழுகலை அகற்றி, புண் களை எளிதில் ஆறச்செய்யும் அற்புத மூலிகை செவ்வரளி. வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் தடிமனான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் உடைய இந்தச் செடிகள் நஞ்சுத்தன்மை உடையதால் தற்கொலை முயற்சிக்காக கிராமப்புற மக்களால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீரியம் ஓலியாண்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.
அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment