Friday, October 15, 2010

உலகிலேயே மிக உயரமான கட்டடம்: நிதி நெருக்கடியிலும் சாதித்தது துபாய்


கடந்த 4ம் தேதி, துபாயின் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள். அன்று தான், உலகிலேயே மிக உயரமான பர்ஜ் துபாய் என்ற கட்டடம் திறக்கப்பட்டது. மோசமான பொரு ளாதார சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் துபாய் அரசுக்கு, கடந்தாண்டின் கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கும் வகையில், பர்ஜ் துபாயின் திறப்பு விழா, அளவில்லாத உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களின் கரகோஷத்துக்கும், கொண்டாட்டங்களுக்கும் நடுவே, துபாயின் பெருமையாக விளங்கும் இந்த கட்டடத்தை துபாய் மன்னர் திறந்து வைத்தார். கண்ணை கவரும் வானவேடிக்கை, அதிர வைக்கும் பட்டாசு சத்தங்கள், லேசர் ஒளிவெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டடம், துபாயின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் இடம் பெற்று விட்டது.
ஐடியா உருவானது எப்போது? விண்ணைத் தொடும் உயரத்தில், கூம்பு வடிவத்தில், மிதந்து செல்லும் மேக கூட்டங்களுக்கு நடுவில், பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பர்ஜ் துபாய் கட்டடத்தின் மொத்த உயரம் 828 மீட்டர். அதாவது 2,717 அடி. இந்த கட்டடத்தின் பெயர், தற்போது பர்ஜ் கலிபா என, மாற்றப்பட்டுள்ளது. பிரபல கட்டட வடிவமைப்பு நிறுவனமான “எம்மார்’தான், இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தை கட்டியுள்ளது. உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இதை கட்டுவதற்கான ஐடியா, கடந்த 2003ல் தோன்றியது. “எம்மார்’ நிறுவனத்தின் தலைவர் அல் அப்பார் மூளையில் உதித்த இந்த ஐடியா, மன்னரின் காதுக்கு எட்ட, கட்டடத்தை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பணிகள் துவங்கின. துபாயில் உள்ள சுட்டெரிக்கும் பாலைவன மணற் பரப்பில், 200 எக்டேர் பரப்பளவில் துபாய் பர்ஜ் கட்டடத்தை கட்டும் பணி, கடந்த 2004 செப்டம்பர் 21ல் துவங்கியது. சிகாகோவின் பிரபல கட்டடவியல் வடிவமைப்பாளர் ஆட்ரியன் ஸ்மித் மற்றும் பில் பார்க்கர் ஆகியோர் தான், இந்த கட்டடத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். இந்த மெகா திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு, 7,500 கோடி ரூபாய்.

அசத்தலான அஸ்திவாரம்: கட்டடத்தை கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியே மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. முதலில், 45 ஆயிரம் கன மீட்டர் கான்கிரீட் அமைக்கப்பட்டது. அதன் மீது 10 ஆயிரம் டன் எடையுள்ள அஸ்திவாரம் அமைக்கப் பட்டு, அதன் மீது 50 மீட்டர் உயரமுள்ள 192 பிரம்மாண்ட இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த இரும்புத் தூண்கள் தான், உலகிலேயே மிக உயரமான கட்டடத்தை தாங்கி நிற்கின்றன.
முறியடிக்கப்பட்ட சாதனைகள்: கட்டடத்தை கட்டும் பணியில், தெற்காசியாவில் உள்ள இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரவும், பகலுமாக மிக வேகமாக பணிகள் நடந்தன. இந்த கட்டட பணிகள் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்தையும் அடையும்போது, பல புதிய சாதனைகள் நிகழ்ந்தன. சிகாகோவில் உள்ள ட்ரம்ப் இன்டர்நேஷனல் டவர், ஷாங்காயில் உள்ள மவோ டவர், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், ஷாங்காய் சர்வதேச நிதி நிறுவன மையம்,சிகாகோவின் வில்ஸ் டவர், ஆகியவற்றின் உயரத்தை கடந்து, தைவானின் தபே டவரின் உயரத்தை (509.2மீட்டர்) கடந்த போது, உலகிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை பர்ஜ் துபாய் பெற்றது. 500 மீட்டரை கடந்தும், இந்த கோபுரத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியில், 828 மீட்டரை அடைந்தபோது, அதன் பணிகள் முடிவுக்கு வந்தன. இதைவிட உயரமான கட்டடத்தை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு, குறைந்தது இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என, கூறப்படுகிறது. அதுவரை துபாய் பர்ஜ் தான், உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை தாங்கி நிற்க போகிறது.
நவீன தொழில்நுட்பம்: இந்த கட்டடம், கடலுக்கு அருகில் இருப்பதால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கான்கிரீட் இரும்புகள், துருப்பிடிக்காத வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள் ளன. காற்றின் வேகம், அழுத்தம், நில நடுக்கம், நில அதிர்வுகள், ஈர்ப்பு விசை ஆகியவற்றால் கட்டடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் இதில் புகுத்தப் பட்டுள்ளன. பிரதிபலிக்கும் தன்மையுடைய விலை உயர்ந்த கண்ணாடிகள், கட்டடத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டருக்கு பொருத்தப் பட்டுள்ளன. மேலும், துருப்பிடிக்காத இரும்புகளும், கட்டடத்தின் வெளிப்புற பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. 15 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவுக்கு இந்த கண்ணாடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கு தேவையான பொருட்கள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. தினமும் 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருவாக்குவதற்கு சமமான “ஏசி’ வசதி இந்த கட்டடத்துக்கு தேவைப்படுகிறது.
என்ன வசதிகள் உள்ளன? இந்த பிரம்மாண்ட கட்டடம் 200க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்டது. இருந்தாலும், 160வது மாடி வரை மட்டுமே, மனித பயன் பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதில் இன்னும் குழப்பம் தொடர்கிறது. இந்த கட்டத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்துக்கு செல்லும்போதும், அதன் வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும் வகையிலான வசதிகளும் இதில் உள்ளன. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடும் போது, கோபுரத்தின் அருகில் உள்ள மாடியில் 10 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ப, குளிர்ச்சி தன்மையும் அதிகரிக்கும்.
57 லிப்ட்: இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் ஒவ்வொரு நிலைக்கும் செல்வதற்காக 57 அதிவேக லிப்ட்களும், எட்டு நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லிப்ட்கள், ஒரு வினாடியில், 10 மீட்டர் உயரத்தை கடக்கும் திறன் உடையவை. கட்டடம் முழுவதிலும் 24 ஆயிரத்து 340 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு வீடுகள்: இங்கு மொத்தம் 1,044 அபார்ட் மென்ட்கள் உள்ளன. இவற்றில், 900 அபார்ட்மென்ட்கள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 49 தளங்களில் அலுவலகங் கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடடத்தின் 76வது மாடியில் நீச்சல் குளம், 158வது மாடியில் மசூதி ஆகியவையும் உள்ளன. கட்டடத்தின் முதல் 39 தளங்களில், 19 தளங்களை ஆர்மனி ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இத்தாலிய உள்கட்டமைப்பு ஸ்டைலில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல், சர்வதேச தரத்திலான நட்சத்திர ஓட்டலாக விளங்கும். கட்டடத்தில் இருந்து, துபாய் நகரின் அழகை ரசிப்பதற்காகவே, 124வது மாடி, பார்வையாளர் களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இங்கு வருவதற்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படும்.
கின்னஸ் சாதனை: துவக்கத்தில் இருந்தே, இந்த கட்ட டத்தின் மொத்த உயரம் எவ்வளவு என்பது ரகசியமாக வைத்திருக் கப்பட்டது. திறப்பு விழாவின் போது தான், 828 மீட்டர் என, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. தைவானில் உள்ள 101 மாடிகள் கொண்ட பொருளாதார கழக கட்டடம் தான், உலகிலேயே மிக உயரமான (509 மீட்டர்) கட்டடம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது பர்ஜ் துபாய் அந்த பெருமையை முறியடித்துள்ளது. உலகின் மிக உயரமான கட்டடம் என்பதற்காக பர்ஜ் துபாய் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது.

நூறாவது தளம் இந்தியருக்கு சொந்தம்: துபாய் பர்ஜ் கட்டடத்தின் உச்சியில் உள்ள “அட் தி டாப்’ பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 1250 ரூபாய் மற்றும் 12வயது கீழுள்ள சிறுவர்களுக்கு 750 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள் ளது.காத்திருக்க முடியாதவர்கள் மற்றும் அவசரமாக பார்வையிட வேண்டியவர்களுக்காக, கட்டணம் 2,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் நூறாவது தளத்தை இந்தியாவைச் சேர்ந்த பி.ஆர். ஷெட்டி என்பவர் வாங்கியுள்ளார். இவர், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் யு.ஏ.இ., எக்சேஞ்ச் சென்டர், என்.எம்.சி., என்ற பெயரில் மருத்துவமனை, மருந்து நிறுவனங்கள், ஓட்டல்கள் என பல்வேறு தொழில் களை நிர்வகித்து நடத்தி வருகிறார். இவர், சொந்தமாக்கி உள்ள நூறாவது தளம் 15 ஆயிரம் ச.மீ., பரப்பளவு கொண்டது. சதுரடிக்கு 43 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டது. ஷெட்டிக்கு 101 வது தளத்திலும் இடம் உள்ளது. இக்கட்டடம் முழுவதுமாக செயல்படத் துவங்கும் போது, இதில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிப்பர் என கணக்கிடப் பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்? உலகின் மிக உயரமான கட்டடமாக பர்ஜ் துபாய் தற்போது கூறப்பட்டாலும், இந்த கட்டம் கட்டப்பட்டதற்கு பின், பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக பி.பி.சி., யின் புலனாய்வு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அமைப்புகள் கூறியுள்ளதாவது: கட்டடம் கட்டும் பணியில் இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தச்சு வேலை செய்பவர்களுக்கு தினமும் 325 ரூபாயும், கட்டட தொழிலாளர்களுக்கு 213 ரூபாயும் கூலியாக தரப்பட்டது. பணிபுரிந்த தொழிலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் தான் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான கூலி, பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. பலரின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டன. இதனால், சில தொழிலாளர்கள் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். கடந்த 2006 மார்ச் 21ல், பணியை முடித்து விட்டு, தாங்கள் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் பஸ்கள் மிகவும் தாமதமாக வந்ததால், கோபமடைந்த தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதப்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொழிலாளர்களின் இந்த வன்முறையால் 3.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, துபாய் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைக்கு திரும்பினர். இவ்வாறு அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பர்ஜ் கலிபா (பயோ-டேட்டா)
மொத்த உயரம்: 828 மீ.,
செலவு: 7,500 கோடி ரூபாய்
இடம்: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்
பணி துவங்கிய நாள்: 21 செப்டம்பர் 2004
திறப்பு விழா நாள்: 4 ஜனவரி 2010
பயன்பாடு: மல்டிபிளெக்ஸ் காம்ப்ளக்ஸ்
மொத்த தளங்கள்: 160 (மனித பயன்பாட்டிற்கானது)
வடிவமைப்பு: ஸ்கிட்மோர், ஓவிங் அன்ட் மெரில்
கட்டமைப்பு இன்ஜினியர்: பில் பார்கெர்
ஒப்பந்ததாரர்கள்: சாம்சங் சி அன்ட் டி (முதற்கட்ட பணிகள்), பெசிக்ஸ் அண்ட் அராப்டெக்

No comments:

Post a Comment