Friday, October 15, 2010
வித்தியாசமான முருகப்பெருமான்
அழகு கடவுளான முருகப்பெருமானுக்கு `கதிரேசன்’ என்ற பெயரும் உண்டு. இந்த பெயரில் அவர் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற திருத்தலம்தான் இலங்கையில் உள்ள கதிர்காமம்.
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் கதிர்காமம் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வடிவம் என்ன என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. அந்த முருகன் சன்னதியின் கதவில் காட்சித்தரும் திரைச்சீலையில் மட்டும் மயில் மீது வள்ளி-தெய்வானையுடன் காட்சித் தருகிறார். இதுபோன்று இன்னும் பல திரைச்சீலைகளையும் இங்கு காண முடிகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கதிர்காம கதிரேசனின் சன்னதி திறக்கப்படுகிறது. மற்ற காலங்களில் சன்னதியில் திரையிடப்பட்டே பூஜைகள் நடைபெறுகின்றன.
நாம் தைப்பூசம், விசாகம், கந்தசஷ்டி விழாக்களை வெகு விமரிசையாக கொண்டாடும் அதேநேரத்தில், இங்கு ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவே சிறப்பாக நடைபெறுகிறது.
ஆடி அமாவாசையில் ஆரம்பிக்கும் இந்த திருவிழா அடுத்த பவுர்ணமி வரை நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் யானையின் மீது ஒரு பெட்டியை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். அந்த பெட்டியில் முருகப்பெருமானுக்கு உரிய யந்திரம் வைக்கப்பட்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment