Friday, October 15, 2010

மேதாவி முட்டாள்!

முட்டாள்களில் பல வகை உண்டு. இவர்களில் மிகமிக மோசமான முட்டாள் யார் தெரியுமா? மேதாவி முட்டாள்! தாம்தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பெரியோர், ஆசிரியர்கள் என எவரிடமும் எந்த மரியாதையும் இல்லாமல் இவர்கள் அலட்டுவார்கள்; கேலியும் கிண்டலும் செய்வார்கள்!
அந்த ஊரில் இப்படியொரு மேதாவி முட்டாள் இருந்தான். ஒருமுறை ஓட்டலுக்குச் சென்றிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்தவர் இரண்டு இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உடனே மிஸ்டர் மேதாவி, இவருக்கு ரெண்டுதான் ராசியான நம்பர் போல… என்றான். பக்கத்து டேபிளில்.. இட்லி, பொங்கல், வடை என ஆர்டர் செய்து சாப்பிட்டவர்களைப் பார்த்து, செரிமானம் ஆகறதுக்கு வயித்துல மிஷின் ஏதும் ஃபிட் பண்ணி இருப்பாங்களோ? என்று நக்கல் அடித்தான்.
இவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார் ஓட்டல் முதலாளி. நேரே இவனிடம் வந்து, தம்பி வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க? என்று கேட்டார். இவன் எட்டு இட்லி என்றான்.இதைக் கேட்ட முதலாளி, அதெப்படி? முதல் இட்லி உள்ளே போனதுமே வெறும் வயிறு“கற அந்தஸ்து போயிடுமே?! என்று மடங்கினார்.
குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக குபுக்கெனச் சிரித்த மிஸ்டர் மேதாவி, அடடா… இப்படியும் மடக்கலாமோ? என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்!
வழியில் கையேந்தி பவன்… ஆட்டோ டிரைவர் ஒருவர் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்ற மேதாவி, ஆமாம்… உன்னால வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிட முடியும்? என்று கேட்டான். ஆறு என்றார் டிரைவர். உடனே மேதாவி முட்டாள் என்ன சொல்லியிருப்பான்…?
அதுதான் இல்லை! டிரைவரிடம் ரொம்ப ஸ்டைலாக, ச்சே… நீ மட்டும் எட்டுன்னு சொல்லியிருந்தா, இந்நேரம் உன்னை மடக்கியிருப்பேன் என்றானாம்!
முட்டாள்களின் பரிகாசம் – கேலியில் இருந்து தப்பிக்க, விசாலமான எண்ணமும் பரந்தமனமும் இருந்தால் போதும். இதற்கு புத்தகங்கள் பெரிதும் உதவும். புதிய மனிதர்களை சந்திக்கவும் அவர்களுடன் பழகவும் செய்ய வேண்டும். வேற்று மொழி, வேறு கலாசாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள, பயணங்கள் மேற்கொள்ளலாம். பயணங்கள் மனதை விசாலமாக்கும் என்கின்றனர் முன்னோர்!
வாகன – போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே புனித யாத்திரை மேற்கொண்டனர். காடு – மலை கடந்து, குளிரில் நடுங்கி, உணவே கிடைக்காத நிலையிலும் பல நாட்கள் பல மாதங்கள் நடந்து ஆலயத்தை அடைந்து ஸ்வாமியை தரிசித்தனர். இறைவனை தரிசித்ததும் கிடைக்கிற பேரமைதி. இந்த யாத்திரையிலேயே கிடைப்பதை உணர்ந்து சிலிர்ந்தனர் இதனை உள்வாங்கிக் கொள்ளாமல் பலரும் புனித யாத்திரை செல்கின்றனர். அப்படி யாத்திரை சென்று திரும்பியவரிடம், அப்புறம்… பயணம் எப்படி இருந்துச்சு? என சாதாரணமாகக் கேட்டார் அவருடைய நண்பர்.
அவ்வளவுதான் புலம்பித் தீர்த்துவிட்டார் மனுஷன். அட ஏம்பா கேக்கறே? அந்த ஸ்டேட்காரன் பேசற பாஷை புரியவே மாட்டேங்குது. மூணு வேளையும் எப்படிடா சப்பாத்தியையே சாப்பிடுறாங்க… நம்மால முடியாதுப்பா! என்று தொடங்கியவர். புலம்பலை நிறுத்தவே இல்லை.
யாத்திரையைவிட பாஷையும், இறைவனை விட சப்பாத்தியும் முக்கியமாகிவிட்டது நண்பருக்கு!

No comments:

Post a Comment