Friday, October 15, 2010

திக்கு வாய் வியாதி தீர்கிறது!

மனிதனின் சிறப்புகளில் மொழி வழக்கும் ஒன்று. பேச முடிந்தாலும் மனிதர்களில் பலருக்கு சரளமாக பேச்சு வராது. சிலருக்கு திக்கித்திக்கி பேச வரும். இது ஒரு வித வியாதி. உலகில் 1 சதவீதம் பேர் திக்கு வாய் வியாதியால் அவதிப்படுகிறார்கள்.
இவர்கள் பேசும்போது வார்த்தைகள் அரைகுறையாக வெளிவருவதோ, ஒரே வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதோ, சில வார்த்தைகள் வராமலோ இருக்கலாம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு காரணமான ஜீன்கள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் காதுகேளாமை மற்றும் உடலியல் தொடர்பு கோளாறுகள் ஆராய்ச்சி மையம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 123 பேர் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த 550 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் குறிப்பிட்ட அளவில் சாதாரணமாக பேசும் திறனுடையவர்களும் அடங்குவர்.
அவர்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் 3 வித ஜீன்கள் திக்கிப் பேசுவதில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜீன்கள்தான் ஒருவர் திக்குவாய், திக்காமல் பேசுவது, சரளமாகப் பேசுவது என ஒவ்வொன்றிலும் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றின் செயல்படும் விதத்தில் மாறுபாடு ஏற்பட்டால் பேச்சுத்திறனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வேறுசில வளர்ச்சிதை மாற்றத்திலும் இவை பங்காற்றுகின்றன.
இதுவரையில் திக்கு வாய் வியாதி உடையவர்களுக்கு கவலையை குறைப்பதற்கான பயிற்சியும், தெளிவாகப் பேசுவதற்கு எலக்ட்ரானிக் கருவியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் இந்த ஜீன்களைப் பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இனி திக்குவாய், வ..வ…வரட்டுமா? என்று போகப்போகிறது!

No comments:

Post a Comment