யானைகள்....
யானை என்ற பெயரைக் கேட்டதும் உங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்றும்?
ஒரு கருத்த பெரிய உருவம்...?
பெரிய காதுகள்...?
அமைதியான சைவம் மட்டுமே உண்ணும் விலங்கு...?
ஆனால் எனக்கு யானை எனும் பொழுது இலங்கை,கண்டி எனும் நகரில் கொண்டாடப்படும் பெரஹரா ஊர்வலம்(திருவிழா)நினைவுக்கு வருகிறது.20க்கும் மேற்பட்ட யானைகள் அழகான பட்டு,ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் கண்டி தலதா மாளிகையிலிருந்து அதனை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நகரவீதியில் உலாவரும்.ஏறத்தாழ 100 கிலோமீற்றர்கள் நடைப்பவனி.

இந்த யானைகளுடன் அவற்றுக்கு மட்டுமே பழக்கமான பாகன் அங்குசத்தோடு வருவதோடு முன்னாலும் பின்னாலும் கண்டியன் டான்ஸர்ஸ் என்றழைக்கப்படும் கண்டி பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆடியபடியும்,சிலம்பம் சுற்றியபடியும் வருவார்கள்.பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.இதனைப் பார்க்கவென்றே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்தப் பெரஹரா நடக்கும் காலப்பகுதியில் இலங்கைக்கு வருவதுண்டு.

இந்த யானைகளின் ஊர்வலம் பார்க்கவென்றே நிறைய ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து இவ் ஊர்வலம் செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் மாலை 6 மணியிலிருந்தே மக்கள் பாய்,படுக்கைகளுடன் காத்திருப்பார்கள்.இவ்வூர்வலத்தைப் பார்ப்பது புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடையே உள்ளதால் மிகவும் வயது முதிர்ந்தவர்களிலிருந்து சிறுகுழந்தைகள் வரை வீதியோரத்திலிருப்பார்கள்.சில்லறை வியாபாரிகளும் அன்று நல்ல வருமானம்.ஆனால் ஆட்டத்தின் கதாநாயகர்களான யானைகள்?

மணியோசை எழும்ப ஊர்வலத்தில் ஆடியாடிவரும் அவற்றின் அருகே போய் பார்க்க வேண்டும்.அவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதைக் காணலாம்.100 KM என்றால் சும்மாவா? அதுவும் ஒரு உயிர்தானே? உணவுகள் வழங்கப்பட்டிருக்கும்.ஆனாலும் உடல் அசதி அவற்றுக்கும் இருக்கும் தானே?
இது தவிர்த்து இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்குமொரு விலங்காக யானை உள்ளது.அவர்களுக்காகவென்றே யானைகளைப் பல வழிகளிலும் பழக்கப்படுத்தியுள்ளார்கள்.

நாட்டின் காட்டுப்பகுதியை அண்டிய ஊர்களில் காட்டு யானைகள் வழிதவறி ஊருக்குள் வந்து சிலநேரம் தனக்கேற்படும் அச்சத்தால் ஊரையும்,காணும் எல்லாவற்றையும் துவம்சம் செய்துவிட்டுப் போவதுண்டு.அது போன்ற சந்தர்ப்பத்தில் அவற்றை அடக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.ஒன்று அதுவே அடங்கி காட்டுக்குப் போக விட்டுவிடுவார்கள்.அது போகாமல் தொடர்ந்தும் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துமிடத்து அதனை மயங்கவைக்கும் ஊசி துப்பாக்கி போன்ற கருவியால் போடப்பட்டு அது மயங்கிய பிறகு யானைகள் சரணாலத்துக்கு அந்த யானை அனுப்பிவைக்கப்படும்.

எனது அயல் ஊரில்தான் ஆசியாவிலேயே புகழ்பெற்ற யானைகளின் சரணாலயம் இருக்கிறது.தினமும் காலையில் வீட்டின் முன்னால் யானைகள் போவதையும் வருவதையும் பார்த்து வளர்ந்தவன் நான்.எனவே யானைகள் எப்பொழுதுமே எனக்கு ஆச்சரியமானவையாக இருந்ததில்லை.


எனது வீட்டுக்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 3 யானைகள் வளர்க்கிறார்கள்.ஊரில்,அல்லது அயல் நகரங்களில் பாரிய மரங்கள் வெட்டப்படும்போது அவற்றைச் சுமந்து வாகனத்தில் ஏற்றுவதும் இழுத்துவருவதும் தான் அவற்றின் வேலை.அதற்கான கூலி அவற்றை வளர்ப்பவர்களுக்கு உண்டு.அந்த யானைகளை வைத்து வேலை வாங்குவதும் அதனுடனே போய்வருதல்,உணவு வழங்குதல்,குளிப்பாட்டுதல் அத்தனை வேலைகளையும் செய்வது பாகன்களின் பொறுப்பு.
யானைகளைக் கொண்டு வேலை வாங்கப்படும் பட்சத்தில் வேலையை சீக்கிரமாக முடிப்பதிலேயே கவனமாக இருப்பர் அவற்றை வாடகைக்கு எடுத்தவர்கள்.அதன் உடல் அசதியோ,உணவு பற்றியோ அவ்வேளைகளில் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
(இதயம் பலவீனமானவர்கள் இனிப்பார்ப்பதைத் தவிர்க்கவும்)
ஆனால் கீழுள்ள இப்படங்களைப் பார்த்தபின் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
ஒரு யானை தன்னை சிறுவயது முதல் அன்பாக வளர்த்த பாகனை மிதித்துக் கொல்லும் படங்கள்.

யானையின் ஒவ்வொரு அசைவின் மூலமும் அதன் உணர்வுகளைக் கண்டுகொள்ளும் பாகன்,அது கோபமுற்றதை அறிந்தும் விட்டு ஓட முயற்சிக்காமல் அதனை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.
பின்னர் தன்னை வளர்த்தவனையே மிதித்துக்கொல்லப்படும் அளவுக்கு ஒரு சில நிமிடங்களுக்கான கோபம்,அதற்கு ஏன்,எதற்கு வந்திருக்கமுடியும்?





No comments:
Post a Comment