Monday, October 18, 2010

மூலிகை

கானா வாழை.


1. மூலிகையின் பெயர் :- கானா வாழை.
2. தாவரப்பெயர் :- COMMELINA BENGALENSIS.
3. தாவரக் குடும்பம் :- COMMELINECEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- சமூலம்.
5. வளரியல்பு -: கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. பின் சைனா, தாய்வான், ஜமாய்க்கா, அமரிக்கா, கலிபோர்னியா, பாக்கீஸ்தான், நேபால் இந்தியா போன்ற நாடுகளில் பரவிற்று. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் கழையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வழரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். கீரையாகப் பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம். விதைமூலம் இனவிருத்தியாகிறது.
.6 மருத்துவப்பயன்கள் :- கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன் படுத்தினர், தொழுநோய் புண்களை சுத்தப் படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். நேபாலில் உணவுக்குக் கீரையாகப் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர்.
சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.
சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும்.
சமூலத்துடன் அறுகம்புல் சமனாக மையாய் அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை, மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும்.
சமூலம், அசோகுப் பட்டை, அறுகு சமன் அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும்.
சமூலம், தூதுவேளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும்.
இலையுடன் சம அளவு கீழாநெல்லி மையாய் அரைத்துத் தயிரில் நெல்லிக் காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்.
இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும்.
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.
-------------------------------------

கொடிப்பசலை.





1. மூலிகையின் பெயர் :- கொடிப்பசலை.
2. தாவரப்பெயர் :- PORTULACA QUADRIFIDA.
3. தாவரக் குடும்பம் :- PORTULACACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.
5. வளரியல்பு :- கொடிப்பசலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள். வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஊட்டச் சக்தியாக கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை வழங்குகின்றது. கீரைகளிலும் காய்கறிகளிலும் இயற்கை அன்னை தன்னுடைய மிக விரிவான ஜீவாதாரமான ரசவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறாள். உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையில் செடிப்பசலை என்ற இனம் உண்டு. இது குத்துச் செடியினம். இது இலங்கையிலிருந்து வந்ததால் சிலோன்கீரை என்றும் அழைப்பர். இதன் இலைகள் சிறிதாக எதிர் அடுக்கில் இருக்கும். இதன் தண்டைக் கிள்ளி வைத்தால் வளரும். மற்றொன்று தரைப்பசலை என்பது. இது தரையில் படர்ந்து வளரும். இலைகள் சிவப்பாகவும் பசுமையாகவும் இருக்கும். குணம் எல்லாம் ஒன்று தான். கொடிப்பசலையின் இலைகள் பச்சையாகவும், வட்டமாக நீண்டு இருக்கும். கொடி 90 அடிக்கு மேல் படரும். படத்தில் உள்ள கொடிகள் என் மாடிவீடு வரை படர்ந்துள்ளது. பல வருடம் இருக்கும். பழங்கள் கருநீலத்தில் இருக்கும். கொடியை வெட்டி வைத்தால் வளரும். விதை மூலமும் வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- பசலைக்கீரை இலையாக அமைந்த கறியாகும். அதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது, இனவே இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது, மருந்தாகும் மதிப்பு உள்ளது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொத்து நோயிக்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.
பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு. ஆனால் வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும், இரத்த விருத்தி உண்டாக்கும். இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. சோடியம், போலாசின், கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிகின்றது, குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது, மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்கோவை குணமாகும். இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
பசலைக்கீரையின் இளம், மென்மையான முளைகளைச் சமைக்காத பச்சடிகளில் பயன்படுத்தலாம். இவற்றைப் பச்சடிக் கீரையின் கொழுந்துகளுடன் செர்த்துக் கொள்ளலாம். இது நல்ல பசியைத் தூண்டிவிடுகின்றது. பருப்புகளுடன் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளும் கீரை வகைகள் மிகவும் நன்மை தருகின்றன.
பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அளிவை இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.
நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.
இலைகளை (1 லிருந்து 10 வரை)க் கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன. இத்தகைய நோய்களின் போது இது எரிச்சலைத் தணிக்கின்றது. துவர்ப்பு மருந்தாக உதவுகின்றது, சிறுநீரைப் பெருக்குகின்றது. உட்கொள்ளும் அளவு 1 அல்லது 2 அவுன்சு.
வளரும் இளம்பெண்கள் பசலைக் கீரையை ஏராளமாக உண்ணவேண்டும், அதில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது, சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.


கோவை



1. மூலிகையின் பெயர் :- கோவை.
2. தாவரப்பெயர் :- COCCINIA INDICA.
3. தாவரக் குடும்பம் :- CUCURBITACEAE.
4. பயன் தரும் பாகங்கள் :- இலை, காய் மற்றும் கிழங்கு.
5. வளரியல்பு :- கோவைக் கொடி நன்கு படர்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சேர்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படர்ந்து தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலர்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வரியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிரமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவர் புலவர்கள். வேர் கிழங்காக வளரும்.
6. மருத்துவப்பயன்கள் :- கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும்.
இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
கோவைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரச் சொறி, சிரங்கு, படை, கரப்பான் ஆகியவை தீரும்.
கோவையின் பச்சைக் காய் இரண்டை தீனமும் சாப்பிட்டு வர மதுமேகத்தைக் தடுக்கலாம்.
கோவைக் கிழங்குச் சாறு 10 மி.லி. காலை மட்டும் குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா) இரைப்பு, கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும்.
கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment