Friday, October 15, 2010

கோலம் போடுவது எதற்காக? (ஆன்மிகம்)


நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலுமே தெய்வீகம் இருப்பதாக நம்பினர் நம் முன்னோர். வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒருவித தெய்வ தொடர்பு இருக்கும்படி வாழ்ந்தனர். எல்லா பொருட்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்தனர்.
சொல்லிலும், செயலிலும் தெய்வத் தொடர்பு இருந்தது. எதையோ படித்து வெட்டிப் பொழுது போக்காமல், நீதி நெறிகளை தெரிந்து கொள்ளவும், பண்பாடுகளை அறிந்து கொள்ளவும், வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளவும், புராணங்கள், திருமறைகள், திவ்ய பிரபந்தம் போன்றவற்றைப் படித்தனர். பெரியோர் மூலம் அதன் பொருளையும் அறிந்தனர். நம்மோடு தெய்வத்தையும் பிணைத்து வைத்திருக்கின்றனர்.
காலையில், வாசலில் சாணம் தெளித்து, பெருக்கி, கோலமிடுகிற வழக்கம் உண்டு. அப்படி செய்யப்படும் வீடுகளுக்கு மகாலட்சுமி வருவாள்.
கோலமிடுவது வாசலுக்கு அழகு செய்வது மட்டுமல்ல, மங்களகரமானதும் கூட என்பது கொள்கை. எந்த நல்ல காரியமானாலும் கோலம் இல்லாமலிராது. இதில் வித, விதமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் கோலமிடுவது தனிக் கலை. இந்தக் கலையும் வளருகிறது.
இதுவும் தவிர குனிந்து, நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆகிறது. மேற்குறித்த காரியங்களில் தெய்வம், கலை, உடல்நலம், சுத்தம் ஆகியவை அடங்கியுள்ளது. இதெல்லாம் நன்மைக்குத் தானே!
சூரியனை வழிபடுகிறோம்; பொங்கல் பண்டிகையின்போது சூரிய நாராயணனை வழிபடுகிறோம். புத்தாடை அணிந்து பொங்கல் செய்து படைக்கிறோம். புது நெல் அறுவடையாகி, வீட்டுக்கு வருகிறது. இதில் நமக்கு ஆடைகளும், விருந்து சாப்பாடும் கிடைக்கிறது; அதே சமயம், தெய்வ வழிபாடும் உள்ளது.
வீட்டு நிலைப்படி இருக்கிறது. அதற்கு, மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அழகுபடுத்துகிறோம். மாவிலை தோரணம் கட்டுகிறோம். நிலைப்படிகளில் ஒருத்தி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் போது, நிலைப்படிக்கு பூஜை செய்வதை பார்த்திருக்கலாம். இது அழகு செய்வதோடு மட்டுமல்லாமல் ஒரு தெய்வ வழிபாடும் உள்ளது.
வீடுகளில் பசு மாடு வைத்து பூஜிப்பர். பசுவின் உடலில் பல தேவதைகள் இருக்கின்றனர். பசுவிடமிருந்து பால், தயிர், வெண்ணை எல்லாம் நமக்கு கிடைக்கிறது. பசுவுக்கு பூஜை செய்கிறோம்; வழிபடுகிறோம். பசுவை காப்பதில் நமக்கு ஆதாயம் உள்ளது; அதே சமயம், தெய்வ வழிபாடும் நடக்கிறது. வாழ்க்கையோடு தெய்வமும் இணைந்திருக்கிறது. ஆலயம் என்றால் கலை, தெய்வம் இரண்டும் சேர்ந்துள்ள இடமாகிறது. இங்கே பக்தியும் வளருகிறது.

No comments:

Post a Comment