Saturday, October 16, 2010

தோலில் தோன்றும் உண்ணிகள்! -மூலிகை கட்டுரை


தோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.
வைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.
தோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்விடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.
அர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.
பிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

No comments:

Post a Comment