Friday, October 15, 2010

சிறந்த ஆரோக்கியத்திற்கு சிவகரந்தை -மூலிகைக் கட்டுரை


பலவகையான நோய்கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்கவும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் ஐந்து அவஸ்தைகள் நம்மை நெருங்கவிடாமல் தள்ளிப்போடவும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வீணாக்கிவிடாமல் அதிகரித்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலின் அத்தியாவசிய உறுப்புகளான நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகம் கெட்டுவிடாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இவற்றை கட்டுப்படுத்தும் மூளையும் சீராக இயங்க அதற்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கவேண்டும். அப்பொழுது தான் பல்லாண்டு நோயின்றி வாழ முடியும். ரத்த செல்கள் முறையாக பல்கி, பெருகவும், அத்தியாவசிய உறுப்புகள், நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,
உடலில் நுழைந்த நுண்கிருமிகள் அழியவும் உதவுவதுடன், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆயுளை கூட்டும் அற்புத மூலிகை சிவகரந்தை.ஸ்பேரான்தஸ் அமரன் தாய்ட்ஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளின் இலைகளே காயகற்ப மருந்தாக பயன்படுகின்றன. இதன் இலைகளில் அடங்கியுள்ள சேவிக்கால், கேடினின், ஸ்பேரான்தின், ஸ்பெரன்தனோலைடு, பீட்டா சைட்டோஸ்டீரால் மற்றும் நறுமண எண்ணெய் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பலவகையான பாக்டீரியாக்களை உடலில் வளரவிடாமல் தடுத்து, செல் அழிவை தடுக்கும் தன்மையுடையதாக ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
பூக்காத அல்லது இளம் பூக்களையுடைய சிவகரந்தை செடிகளில் இலைகளை நிழலில் உலர்த்தி, பொடித்து, இரண்டு கிராமளவு பாலுடன் கலந்து சாப்பிட பசி நன்கு அதிகரித்து பலஹீனம் நீங்கும். இலைகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 120 மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்துவர கல்லீரலில் தோன்றும் கிருமித்தொற்று நீங்கும். இதன் வேரை பொடித்து, ஒரு கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட, பலவகையான ரத்தப்போக்கு நீங்கும்.
இளம் பூக்களையுடைய சிவகரந்தை செடிகளை நிழலில் காயவைத்து, பொடித்து, சலித்து ஒருகிராமளவு தேனுடன் 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தோல் மினுமினுப்படையும், இலையை இடித்து, சாறெடுத்து சமஅளவு தேனுடன் கலந்து சாப்பிட நாட்பட்ட இருமல் நீங்கும்.

1 comment:

  1. சிவகரந்தை கிடைப்பது அறிதாகிவிட்டது. நெல் அறுவடைக்குப்பின் வயல்களில் முளைக்கும்.களைக்கொல்லி மருந்து தெளிப்பதால் அவை முளைப்பதில்லை.

    ReplyDelete