Friday, October 15, 2010
அழகான தோலுக்கு ஆகாசக்கருடன்
பெரும்பாலான தோல் நோய்களுக்கு சுகாதாரமின்மையே காரணமாக அமைகின்றது. நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள், பூச்சிக்கடி, காயங்கள், மருந்துகள் ஆகியவற்றினாலும், உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை, மலப்பாதை, பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் தோல் பாதிக்கப்படுகின்றது. தோலில் தொல்லை ஏற்படும்போது அரிப்பு, தடிப்பு, எரிச்சல், நிறமாற்றம், வறட்சி, நீர்வடிதல், சலம் கோர்த்தல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு தோல் நோயாக மாற ஆரம்பிக்கின்றது.
தோல் நோயால் பாதிக்கப்படாமலிருக்க உடலையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி போன்றவைகளை எளிதில் வீட்டிற்குள் வராமல் இருக்கும் வண்ணம் வலை அமைத்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகளை நாம் வசிக்கும் இடத்திற்கும் அனுமதிப்பது தோல் நோய்கள் மட்டுமின்றி, சுவாச நோய்களும் ஏற்பட வழிவகுக்கும். தோல் நோயினால் பாதிக்கப்பட்டால் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நோய் முற்றி பல்லாண்டுகள் சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தோலில் ஏற்படும் தொல்லைகளை துரத்தி, ஒவ்வாமையை நீக்கி, அழகான சருமத்திற்கு வழிவகுக்கும் அற்புத மூலிகை ஆகாசக்கருடன் கிழங்கு. கொரல்லோகார்பஸ் எபிஜியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட குக்கர்பிட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த கொடி வகையைச் சேர்ந்த கொல்லங்கோவை, பேய்சீந்தில் என்ற வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஆகாசக்கருடன் கிழங்கில் பிரையோனின் வகையைச் சார்ந்த கசப்பான வேதிச்சத்து நிறைந்துள்ளது. இது தோல் நோய்களுக்கு காரணமான பால்வினை நோய் கிருமிகளையும் வயிற்று உபாதைகளுக்கு காரணமான கிருமிகளையும் கொல்லும் தன்மையுடையதென ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஆகாசக்கருடன் கிழங்கை தோல் சீவி, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி, நன்கு காய்ந்ததும், இடித்து, பொடித்து, சலித்து வைத்துக் கொண்டு, 1 முதல் 2 கிராம் காலை மற்றும் மாலை உணவுக்குப்பின்பு தேன் அல்லது திரிகடுகு சூரணத்துடன் கலந்து சாப்பிட பலவிதமான தோல் நோய்களும் நீங்கும்.
அனைத்துவிதமான பூச்சிக்கடிகளுக்கும் முதலுதவி மருந்தாக இதை பயன்படுத்தலாம் என்பதால் இதனை திருஷ்டிக்கு உகந்ததாக ஒரு நம் பிக்கையை ஏற்படுத்தி, வீட்டு வாசலில் இந்த கிழங்கை கட்டி தொங்கவிடுவதும் நமது வழக்கமாக உள்ளது. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கிழங்கு வளர்வதால் என்றும், இளமையாக இருக்கும் இந்த கிழங்கை அவசரக் காலத்தில் பூச்சிக்கடி, ரத்தக்காயம், கழிச்சல் ஆகியவை நீங்க பயன்படுத்தலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment