Friday, October 15, 2010

மூலிகை கட்டுரை -பதட்டம் தணிக்கும் கல்லால்


பயம், பதட்டம், அதிர்ச்சி, காதல், மோகம் போன்வற்றால் நாம் தூண்டப்படும்பொழுது அட்ரினல்லின் என்னும் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்து, ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் தூண்டுகிறது. அது மட்டுமின்றி மூளை நரம்பான வேகஸ் என்னும் நரம்பையும் தூண்டுவதால், இதயத்துடிப்பு அதிகப்படுவதுடன் வேகஸ் நரம்புப்பாதையில் ஒருவித இறுக்கம் ஏற்பட்டு, இரைப்பையில் அமிலச்சுரப்பும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அதிகரித்த அமிலச்சுரப்பை கட்டுப்படுத்த இரைப்பை மற்றும் இரைப்பை வால்வுகள் சுருங்கி விரிவதால் மார்புப்பகுதியில் இறுக்கம் மேலும் அதிகரிக்கிறது. இவ்வாறு தோன்றும் இறுக்கமே நெஞ்சு அடைத்தது போன்றும், வாயு பிடித்தது போன்றும் ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேற்கண்ட பதட்டம் குறைந்ததும் தானாகவே இதயம், இரைப்பை மற்றும் மார்பு சதைப்பகுதிகள் நன்னிலைக்கு வந்து, சீராக முன்புபோல் செயல்பட ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் மார்பு துடிப்பு மாற்றத்தால் தோன்றும் உணர்ச்சிகள் பெரும்பாலும் இதய தாக்குதலை போன்றே இருப்பதால், பெரும்பாலானோர் மேலும் பதட்டம் மற்றும் பயம் கொள்கின்றனர். அடிக்கடி இதுபோன்ற பதட்டத்திற்கு ஆளாகுபவர்கள் இதய மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதயத்தில் எந்த கோளாறும் இல்லாமல் மன உறுதியின்மை மற்றும் பலவீனம் காரணமாக தோன்றும் இந்த படபடப்பை பெரும்
செலவின்றி நாமே சரிசெய்து கொள்ளலாம்.
மன உறுதியை அதிகப்படுத்தும் ஆசனப் பயிற்சிகள், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை முறையாக செய்துவருவதுடன் மனம் அமைதியளிக்கும் வழிபாடு மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொள்வது அவசியமாகும். அனாவசியமான பதட்டம், பயம் போன்றவற்றால் தோன்றும் மார்பு படபடப்பை நீக்கி, இதயத்திற்கு வலுவையும், மனதிற்கு அமைதியையும் உண்டாக்கும் அற்புத மூலிகை கல் ஆல் என்ற கல்லால்.
பைகஸ் டல்கௌசியே என்ற தாவரவியல் பெயர் கொண்ட மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த பெருமரங்களின் உலர்ந்த பழங்களே சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. இந்த பழத்திலுள்ள எண்ணெய் மற்றும் புரதச் சத்துக்கள் சிறுநீரை நன்கு பெருக்கி, இதய இறுக்கத்தை குறைத்து, அதிகரித்த உடல் உஷ்ணத்தை தணித்த,மன அமைதியை ஏற்படுத்தும் தன்மை உடையன.
உலர்ந்த கல்லால் பழங்களை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்கவைத்து பாகுபதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 5 முதல் 10 மில்லியளவு தினமும் இரண்டு வேளை வாரம் இரண்டுமுறை குடித்துவர படபடப்பு நீங்கும். கொத்தமல்லி விதைகளையும், கல்லால் பழங்களையும் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி 60 மில்லியளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்துவர பதட்டம் நீங்கும்.

No comments:

Post a Comment