Thursday, October 14, 2010

பெண்களைத் தாக்கும் `புதிய வில்லன்’

சம்பவம் ஒன்று: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகிக்கும் பெண் அவர். வயது 42. ஆறு மாதங்களாக அவரை அளவுக்கு மீறிய சோர்வு வாட்டியது. தூக்கம் வரவில்லை. கோபமும், எரிச்சலும் எக்கச்சக்கமாக வந்தது. இனம் புரியாத கவலை வேறு. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அலுவல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார். தனக்கு ஏன் இந்த நிலை என்று புரியாமல் தவித்த அவரை, மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். பலனில்லை. ஒரு வருட அலைச்சலுக்கு பின்பு அவருக்கு `ஆட்டோ இம்யூன் கீமோ லைட்டிக் அனீமியா` என்ற நோய் என்பது கண்டு பிடிக்கபட்டது.
சம்பவம் இரண்டு: குடும்பத் தலைவியான அந்த பெண்மணிக்கு 48 வயது. கல்லூரிக்கு படிக்கச் சென்ற ஒரே மகள் அங்கு காதல் வலையில் விழ, அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள் தாய். ஏற்கனவே எப்போதாவது `உடல் பலகீனமாகிறது, கால்கள் மரத்து போகின்றன’ என்று கூறிக்கொண்டிருந்த அந்த தாயார், திடீரென்று கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்தார். மூச்சுவிட சிரமபட்டார். முற்றிலுமாக அவர் முடங்கிபோனார்.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவரை தாக்கியிருப்பது `குல்லியன் பாரி சின்ட்ரோம்` என்று கண்டறிந்தார்கள். அதாவது அவருடைய உடலே, அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான மாற்று பொருளை சுரந்து, ரத்தத்தில் கலந்து செயல்பட்டிருக்கிறது. ரத்தத்தில் கலந்திருந்த அந்த `எதிர் உயிரியை`, `பிளாஸ்மா பெரிசிஸ்` என்ற முறையில் பிரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சம்பவம் மூன்று: சாட்ப்வேர் என்ஜினீயரான அந்த பெண்ணுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியிருந்தன. அவரால் கர்ப்பம் ஆக முடியவில்லை. அவரது இனபெருக்க உறுப்புகளும், சினை முட்டையும் பரிசோதிக்கபட்டது. எல்லாம் நல்ல முறையில் இருந்தன. கணவரது உயிரணுவின் உயிர் சக்தி தன்மையும் சிறப்பாகவே இருந்தது. எல்லாம் சிறப்பாக இருந்தும் அந்த பெண் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என்பதை பற்பல சோதனைகளுக்கு பின்பே கண்டுபிடித்தார்கள். பெண்களின் உடலில், இன்னொரு உயிரை வளர்க்கும் சக்தி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சில பெண்களின் உடலுக்குள், அவர்கள் உடலுக்கு எதிரான `எதிர் உயிரிகள்` உருவாகும். அவை இன்னொரு உயிரை, உடலுக்குள் உருவாகவிடாமல் தடுத்துவிடும். அப்படிபட்ட எதிர் உயிரிகள் அந்த பெண்ணின் உடலுக்குள் செயல்பட்டு கருத்தரிக்காமல் செய்திருக்கிறது.
“சில பெண்களுடைய உடல் கணவருடைய விந்தணுவையே இன்னொரு அன்னிய பொருளாக பாவிக்கும். விந்தணுவை உள்ளே விடாமல் எதிர் உயிரி மூலம் அதன் சக்தியை அழித்துவிடும். இதனால் கணவரிடம் தரமான உயிரணு இருந்தும், தன்னிடம் முதிர்வடைந்த சினை முட்டை இருந்தும் பயனில்லை. அந்த பெண்ணால் கர்ப்பமாக முடியாது. இப்படி எதிர் உயிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால் `சர்வக்கிள் மியூக்கஸ் டெஸ்ட்` மூலம் கண்டறிந்துவிடலாம்.
சில பெண்களின் உடல் முதல் கட்டத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உயிரணுவை உள்வாங்கிக்கொள்ளும். அடுத்த கட்டமாக அது கருப்பைக்குள் சென்று வளர, என்டோமெட்ரியம் என்ற பஞ்சு திசு மீது ஒட்டவேண்டும். அப்படி ஒட்டி வளர `பாஸ்போ லிப்பிட்` என்ற சுரப்பு அவசியம். ரத்தம் அந்த சுரப்புக்கு எதிரான `எதிர் உயிரியை` உருவாக்கி, ஒட்ட விடாமல் கருவைக் கலைத்து அபார்ஷன் ஆக்கி வெளியேற்றிவிடும். இப்படி பெண்ணின் உடலுக்குள்ளே உயிரை அழிக்கும் எதிர் உயிரியை அடையாளங்கண்டு கட்டுபடுத்தினால்தான் பெண் கர்ப்பம் ஆக முடியும்..”- என்று கூறுகிறார், டாக்டர் மகேஸ்வரி.
“இப்படி எதிர் உயிரி உருவாகி தாக்கும் பாதிப்பு பெண்களுக்குத்தான் 65 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கபடுகிறார்கள். எதிர் உயிரியால் பாதிக்கபடுகிறவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்”-என்றும் அதிர்ச்சி குண்டு போடுகிறார்.
இந்த நிலை தற்போது அதிகரிக்க என்ன காரணம்?
“நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைடன் கூடிய அதிக வேகமும், பெயர்- புகழோடு வாழவேண்டும் என்ற போட்டி மனபான்மையும் பெண்களிடம் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மரபு வழியாக வந்துகொண்டிருக்கும் ஒரு சில நோய் தொடர்புகள், சத்துணவு சாப்பிடாமை, சரியான நேரத்திற்கு தூங்காமை போன்ற தாக்கங்கள் எல்லாம் இப்போது பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. இளமையில் அடங்கிக்கிடக்கும் அத்தகைய பாதிப்புகள் நாற்பது வயதுக்கு மேல் தலைதூக்கி, தாக்கத் தொடங்குகிறது. ” – என்று கூறும் டாக்டர் மகேஸ்வரி ரத்தத்தில் இருக்கும் தன்மைகளை ஆராயும் `இம்னோ ஹேமட்டலாஜி`யில் எம்.டி. பட்டம் பெற்றவர். இவர் சென்னையில் வசிக்கிறார்.
இந்தவித நோய்கள் பெண்களை எப்படி தாக்குகிறது?
“நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. நோய்க்கிருமிகள் மற்றும் கெடுதல் விளைவிக்கும் பொருட்களில் இருந்து அது நம்மை காக்கும். மண்ணீரல், கழுத்து பகுதியில் இருக்கும் தைமஸ் சுரபி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் இருக்கும் லிம்போசைட் போன்றவை உடலை நோயில் இருந்து காப்பவைகளாக செயல்படும்.
இவை எப்படி செயல்படும் என்பதையும் விளக்குகிறேன். நமது கை விரல்களில் `லிம்ப்வெசல்`கள் உள்ளன. இவை ரத்தக் குழாய்களைவிட மெலிதானது. ரத்தக்குழாயின் ஊடே ஓடும். நமது விரல் நுனியில் அடிபட்டு காயமாகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். உடனே அதில் பாக்டீரியாக்கள் குடியேறி, புண்ணாக்கிவிடும். பின்பு பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலக்க முயற்சிக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாக்களை ஒரே இடத்தில் பிடித்துவைக்கும். பிடித்துவைக்கும் இடத்தில் வலியும், வீக்கமும் உருவாகும். அதைத்தான் நாம் `நெரி கட்டுதல்` என்று கூறுகிறோம். பிடித்துவைத்துவிடுவதால், அந்த பாக்டீரியாக்களால் ரத்தத்தில் கலக்க முடியாது. உடலில் ஒரு காயம் என்றாலே எல்லா வெள்ளை அணுக்களும் ஒரே இடத்திற்கு வந்து தடுத்து தாக்கி யுத்தம் செய்யும். அவைகளால் தடுத்து, தாக்கி அழிக்க முடியாதபோது பாக்டீரியாக்கள் பல்கி பெருகி, நோயை உருவாக்கி விடுகிறது. அப்போது நாம் மருந்து சாப்பிட்டு நோயை கட்டுபடுத்துவோம்.
சில நேரங்களில் சிலருக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தியே, எதிர் உயிரியை உருவாக்கி அவர்கள் உடலையே தாக்கும். இதனை `ஆட்டோ இம்னோ டிசாடர்` என்கிறோம். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் மேற்கண்ட மூன்று சம்பவங்களில் பார்த்தோம். இந்த பாதிப்புக்கு நாம் சிகிச்சை கொடுக்கும்போது, எந்த சுரப்பி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பகுதிக்கு மட்டும் மருந்துகொடுக்க முடியாது. நாம் கொடுக்கும் மருந்து மொத்தமாக போய் ரத்தத்தில் கலந்துதான் நோய்க் கிருமிகளை அழிக்க முற்படும். அப்போது பக்க விளைவுகள் தோன்றலாம்”
நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிரான இந்த `எதிர் உயிரிகள்` ரத்தத்தில் கலந்து விஷமாக்காத அளவிற்கு பெண்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
“ஆட்டோ இம்னோ டிசார்டர் நோய்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்தாலும் முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. கட்டுபடுத்தத்தான் முடியும். அதனால் பெண்கள் அதிகமான வேலைபளு, அதிகமாக பணம் சம்பாதிக்கும் ஆசை, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள், வாழ்வியல் சிக்கல்களால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலும் அதை எளிதாகக் கையாண்டு, அதில் இருந்து விடுபட்டுவிட வேண்டும். உடலில் அதிகமான சூரிய வெப்பம் நேரடியாக தாக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகளை உண்ணவேண்டும். இதை எல்லாம் மீறி நோய் வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அது `ஆட்டோ இம்னோ டிசார்டர்’ ஆக இருக்குமா என்றும் பரிசோதிக்க வேண்டும். சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்”- என்கிறார்.
நன்றி- தினத்தந்தி

No comments:

Post a Comment