

மத வேறுபாடின்றி, இவர் தாலி கட்டி வாழ்ந்த மனைவியர் 20 பேர்; இவர்களைத் தவிர, அந்தப்புரத்தில் இவர் கூப்பிட்ட குரலுக்கு 23 பேர். இவர்களுடன், இவர் ஆசை தணியவில்லை. தினமும், ‘சரக்கும்’ வேண்டும்; அதுவும், முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்தால் தான் திருப்தியே வரும்.
இவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு முன், ஒன்று பட்ட இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த மகாராஜா ரஞ்சித் சிங். ‘தி லாஸ்ட் சன்செட்’ என்ற பெயரில், சமீபத்தில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பவரும் வியக்கத்தக்க மனிதர் தான். ஆம்… பாட்டியலா அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்.
இவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய தகவல்கள்:
கடந்த 1780ல் இருந்து 1839 வரை சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பித்து, லாகூர் வரை, (அப்போது ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தது) இவர் ஆதிக்கம் தான். இவர் சமாதி, லாகூரில் உள்ளது. ‘ஷெர் இ பஞ்சாப்’ (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர்.
அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் உட்பட, பழமையான சீக்கிய கோவில்கள் கட்டியதில் இவர் பங்கு அதிகம். ஆப்கானிஸ்தானியரை பஞ்சாபில் இருந்து விரட்டியடித்தவர். 1839ல் ரஞ்சித் சிங் இறந்தார். அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராணி மகதாப் தேவி உட்பட சில ராணிகள், அவருடன் சிதையில் படுத்து உடன்கட்டை ஏறினர்.
ரஞ்சித் சிங்குக்கு பின், அவரின் மகன்களில் கரக்சிங்கிடம் ஆட்சி போனது. ஆனால், 1845ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம், பிரிட்டீஷ் படை நுழைந்து, அவரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.
ரஞ்சித் சிங்குக்கு மொத்தம் 20 மனைவியர்; இவர்களில் ஐவர் சீக்கியர்; மூவர் இந்துக்கள்; இருவர் முஸ்லிம். இவர்களில் கரக்சிங்கின் தாய் மகதாப் தேவி மற்றும் ராஜ் கவுர் இருவரும் வயதில் சீனியர் மனைவிகள். பஞ்சாபில் இருந்த காங்க்ரா ராஜ்ஜியத்தில் ஊடுருவிய கூர்க்கா படையினரை விரட்டி, அந்த குறுநில மன்னன் ராஜா சன்சார் சந்துக்கு உதவினார் ரஞ்சித் சிங்.
இத்தனைக்கும் இருவரும் பரம எதிரிகள்; இந்த போரில் நாட்டை காப்பாற்றி தந்ததால், ரஞ்சித் சிங்குக்கு தன் மகளான மகதாப் தேவியை மணமுடித்து தந்தார் காங்க்ரா மன்னன்.
மனைவிகளைத் தவிர, அந்தப்புரத்தில் 23 அழகிகளை தங்க வைத்திருந்தார் ரஞ்சித் சிங். அவருக்கு எப்போதும் ஆட்டம், பாட்டம் இருக்க வேண்டும்; அதற்காக, 12 முதல் 18 வயது வரை உள்ள, மலை கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் நடனம் ஆடுவர். சில காலம் ஆடிய பின், அவர்களுக்கு கிராமங்களை தானமாக தந்து அனுப்பி விடுவார்.
மதுவில் முத்துக்களை அரைத்து குடிப்பதுடன், தனக்கு தனியாகவே ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சிங் சிங். இந்த மதுவை, ‘திரவ தீ!’ என்று அழைப்பர்.
‘அவர் குடிக்கும் மதுவை, பிரிட்டீஷ் அரசில் உள்ள எவரும் தொடக்கூட முடியாது; அந்த அளவுக்கு தீ போல உடல் பற்றியெரியும். ஆனால், ரஞ்சித் சிங், அனாயாசமாக குடிப்பார்!’ என்று சர்ட்டிபிகேட் தந்திருப்பவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஆக்லாந்து சகோதரி எமிலி ஈடன்.
இவர் திருமணம் செய்த இரு முஸ்லிம் பெண்களில் ஒருவர் மோரன்; இவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ரஞ்சித். அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கு ரஞ்சித் ஒரு முறை வந்தார். அங்கு பிரார்த்தனை செய்வதை கூட தவிர்த்து, மோரன் வருவதாக தகவல் வந்ததும், அவரை வரவேற்க சென்று விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அகாலி தக்த் அமைப்பு, இவருக்கு கண்டனம் தெரிவித்தது.
பார்த்த பெண்களை எல்லாம் திருமணம் செய்வதும், அன்பு காட்டுவதுமாக இருந்த ரஞ்சித் சிங்குக்கு, அத்துடன் ஆசை நிற்கவில்லை. முட்டை வடிவிலான கோகினூர் வைரத்தின் மீது கண் இருந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1838லேயே நாலரை கோடி ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதை எப்படியாவது, ஆப்கனில் இருந்து பெற்று விட வேண்டும் என்று திட்டமிட்டார் ரஞ்சித் சிங். ஆப்கான் அமீர் (ராணுவ தளபதி) ஷா சுஜா உல் முல்க், ஒரு முறை குடும்பத்தினர், உறவினருடன், சுற்றுலாவுக்காக வந்திருந்தார்.
அவர்களுக்கு எல்லா ஏற்பாடு களையும் செய்த ரஞ்சித் சிங், கிளம்பும் போது, அவர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டார்; வைரத்தை தந்தபின் தான், அவர்களை விடுவித்தார்.
இவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பெஷாவர் கவர்னராக இருந்தவர் யர் முகமது. அவரிடம் மிக அழகான பாரசீக குதிரை இருந்தது; அதன் பெயர் லியாலி. அதை பெற வேண்டும் என்று கண் வைத்தார் ரஞ்சித் சிங். அதற்காக, பெஷாவர் கவர்னர் மீது படையெடுத்து, அவரை கொன்றும் விட்டார்; ஆனால், குதிரையை மட்டும் காணவில்லை.
முகமதுக்கு பின், அவரின் இளைய சகோதரன் சுல்தான் முகமது கான், கவர்னராக அமர்ந்தார். ‘முதலில் குதிரையை ஒப்படைத்து விடு; இல்லாவிட்டால்…’ என்று எச்சரித்தார் ரஞ்சித் சிங். இதனால் வேறு வழியின்றி, பாரசீக குதிரையை ஒப்படைத்தார். இந்த குதிரையை பறிப்பதற்காக, பெஷாவர் கவர்னருடன் நடந்த சண்டையில், 1,500 வீரர்கள் அமர்த்தப்பட்டனர்; செலவு 60 லட்சம் ரூபாய்.
No comments:
Post a Comment