Thursday, October 14, 2010

பாதுகாப்பு திருநாள் !


தீவிரவாதம் மிகுந்துள்ள இந்தக் காலத்தில் மிகுந்த பாதுகாப்பு நமக்கு தேவைப்படுகிறது. சாலையில் நடந்தால் கூட, எப்போது தீவிரவாதச் செயல்களின் தாக்கம் நம்மைத் தாக்குமோ என்று அஞ்சியபடியே தான் மக்கள் நடக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், தெய்வம் ஒன்றே நமக்கு பாதுகாப்பளிக்க முடியும். அதிலும், உக்ர தெய்வமான பத்ரகாளியை வழிபட்டால், நாம் பயமின்றி வாழலாம். காளியை வணங்க உத்தமமான காலம் மகாபரணி. புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களில், எப்போது பரணி நட்சத்திரம் வருகிறதோ, அதை மகாபரணியாகக் கொள்வர். பரணி நட்சத்திரத்துக்குரிய தெய்வம் காளி. இவளது வரலாறை இந்தநாளில் தெரிந்து கொள்வோம். அசுரர்களில், தாருகன் என்பவன் தீவிர சிவபக்தனாக இருந்தான். இவன், இவ்வுலகமே அழிந்தாலும், தான் அழியக்கூடாது என்ற வரம் பெற ஆவலாக இருந்தான். இதற்காக பிரம்மாவை நினைத்து கடும் தவமிருந்தான். பிரம்மாவும் அவனது ஸ்திரமான தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். அவரிடம் இறவாத வரம் வேண்டும் என்றான் தாருகன். அப்படி ஒரு வரத்தை தரும் சக்தி, சிவனிடம் மட்டுமே உள்ளது எனச் சொல்லி அவர் மறைந்து விட்டார்; தாருகன் விடவில்லை. சிவதரிசனம் வேண்டி மிகக் கடுமையான தவம் இருந்தான். சிவபெருமானும் மனமிரங்கி, தன் பக்தன் முன் தோன்றினார். தாருகன் இறவா வரம் கேட்டான்.   அவனிடம், “உலகில் பிறந்தவன் இறந்தே ஆக வேண்டும். நீ, இந்த உலகில் பல கோடி ஆண்டுகள் வாழ்வாய்; ஆனால், ஏதாவது ஒன்றால் நீ இறந்தே ஆக வேண்டும்…’ என்றார் சிவன். சற்றும் சிந்திக்காத தாருகன், புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து, ஒரு கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு வர வேண்டுமென கேட்டான்; சிவபெருமானும், வரமளித்து மறைந்து விட்டார். தான் ஒரு அசுரன், கன்னிப்பெண்கள் தன் அருகே நெருங்கக்கூட பயப்படுவர் என்பது அவனது எண்ணம். வரம் பெற்று குறிப்பிட்ட காலம் சிறப்பாக செயல்பட்ட அசுரன், தன் மமதையால் தேவர்களையும், பிறரையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.   துன்பம் பொறுக்காத அவர்கள், சிவனிடம் முறையிட்டனர். கோபமடைந்த சிவன், தன் கழுத்தில் கட்டி நின்ற விஷத்தைத் தொட்டார். அதில் இருந்து ஒரு கன்னிப்பெண் பயங்கரத் தோற்றத்துடன் தோன்றினாள். கபாலமாலை அணிந்து, உடுக்கை ஏந்தி, கையில் சூலத்துடன் ஆக்ரோஷமாக தோன்றிய அவள், தாருகனை நோக்கிச் சென்றாள். அவனை வதைத்து வெற்றி கொண்டாள். பின், அவளையே பூலோகத்தின் காவல் தெய்வமாக்கினார் சிவபெருமான். இப்படிப்பட்ட காளிக்கு, பல இடங்களில் கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் இவளை, “கொற்றவை’ என்றனர். இவள் போர் தெய்வம் என்பதால், மன்னர்கள் இவளை வணங்கியே போருக்குச் செல்வர். காளியின் கதை கேட்பவர்களுக்கு பயம் இருக்காது.தீர்த்தக்கரைகளுக்குச் செல்லுதல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல், அன்னதானம் செய்தல் ஆகிய மூன்று கட மைகளையும் இணைந்து செய்ய மகாபரணி நல்லநாள். மேலும், இந்நாளில் காளிக்கு வெண்ணெய் சாத்தி வணங்கி, நம் தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைப்போம். ***

No comments:

Post a Comment