Wednesday, October 13, 2010

சிங்கப்பூர்

சிங்கப்பூர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது அவர்களுடைய சுத்தம், பெரிய பெரிய அழகான கட்டிடங்கள், அபராதங்கள் ஆகியவை தான். நாம் இப்போது கட்டிடங்களை அதாவது சிங்கையின் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள சில கட்டிடங்களை பார்ப்போம்.
தொழில்நுட்ப பூங்கா
சிங்கையில் நகரத்தின் எல்லையில் விமான நிலையம் அமைந்துள்ள சாங்கி என்ற இடத்தில் மிகப்பெரிய பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது, இதை Changi Business Park என்று அழைப்பார்கள் சுருக்கமாக CBP. ஒரு அலுவலக இடம் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அட்டகாசமாக அமைத்து இருக்கிறார்கள். இங்கு வேறு எந்த கமர்சியல் கடைகளோ, வீடுகளோ அல்லது பொழுதுபோக்கு இடங்களோ எதுவுமே கிடையாது. அலுவலகங்கள் என்றால் அலுவலகங்கள் மட்டுமே தான்.
எனவே அனாவசிய போக்குவரத்து எதுவுமில்லாமல் அமைதியாக இருக்கும், பொதுவாக சிங்கையில் வாகனங்கள் ஹார்ன் பயன்படுத்த மாட்டார்கள், அதுவும் இங்கே எந்த சத்தமும் இல்லாமல் மிக மிக அமைதியாக இருக்கும். பிரபல நிறுவனங்கள் பல இங்கு தங்கள் கிளையை வைத்துள்ளன, இங்கு இல்லாமல் நகரத்திலும் வைத்து இருப்பார்கள்.
கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக மற்றவர்களுக்கு சிறு தொந்தரவு கூட இல்லாமல் அமைக்கப்பட்டு இருக்கும். இங்கு தற்போது பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன, புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் உள்ள சிறப்பு….இவர்கள் கட்டுவதும் தெரியாது முடிப்பதும் தெரியாது. மிகவும் திட்டமிட்டு கட்டுவார்கள், கட்டி முடித்த பிறகு கட்டி முடித்ததற்கான சிறு அறிகுறி கூட தெரியாது (எடுத்துக்காட்டாக பலகை, கம்பி, சிமென்ட் போன்றவை இல்லாமல்) சுத்தமாக இருக்கும்.
இதை விட ஆச்சர்யம்! உடன் ஓரளவு பெரிய மரங்கள் ரெடிமேடாக கொண்டு வந்து நட்டி விடுவார்கள் அதனுடன் சிறு செடிகள் அழாக அமைத்து, இது புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் என்ற அடையாளமே இல்லாமல் சிறப்பாக அமைத்து விடுவார்கள்.
இங்கு ஒரு லாரி வந்து மண் எடுத்து செல்கிறது என்றால் அதன் டயரை கழுவி விட்ட பிறகு வெளியே அனுமதிக்க முடியும், இல்லை என்றால் அபராதம் விதித்து விடுவார்கள். இது சாலை அழுக்காகி விடக்கூடாது என்பதற்காக! கட்டிடம் கட்டப்படும் போது சுற்றி தடுப்பு அழாக அமைத்து இருப்பார்கள், புழுதி எதுவுமே பறக்காத படி திரை அமைத்து தான் வேலை செய்வார்கள். இது இங்கு மட்டுமல்ல சிங்கை முழுவதும் இதைப்போலவே தான். சிங்கையில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் இங்கே பணி புரிய முடியாது.
இனி இங்குள்ள சில கட்டிடங்களை பற்றி பார்போம்
CBP 9 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
CBP என்றாலே அங்கு அனைவருக்கும் தெரிந்த கட்டிடம் Signature Building, இந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய கட்டிடம். இங்கு பல நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன, ஆனால் நான் பணி புரியும் SWISS வங்கியின் ஊழியர்கள் தான் அதிக அளவில் இங்கு பணி புரிகிறார்கள். கட்டிடத்தின் பெரும்பாலான தளங்களை எங்கள் நிறுவனமே வைத்துள்ளது. இங்கு இந்தியர்கள் பெருமளவில் பணி புரிகின்றனர். முதன் முதலில் நான் இங்கே வேலைக்கு வந்து சேர்ந்து, நுழைந்த போது இந்தியாவின் வேறு மாநிலத்தில் நுழைந்ததை போலவே இருந்தது, அந்த அளவிற்கு அதிகளவில் நம்மவர்கள் பணி புரிகிறார்கள்.
உள்ளே ரொம்ப ஹைடெக்காக எதிர்பார்த்தேன் ஆனால் அந்தளவு இல்லை, நகரத்தில் உள்ள எங்கள் கிளை அற்புதமாக இருக்கும். இங்கு உணவு கூடங்கள் [Food Court] கீழ் தளத்தில் உள்ளது, பல நாட்டு வகை உணவுகளும் கிடைக்கும் எடுத்துக்காட்டாக கொரியா, ஜப்பான், மெக்சிகன், சீனா மற்றும் இந்தியா போன்றவை. நான் ஜப்பான், மெக்சிகன் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன்..(பாம்பு ஐட்டம் எதுவும் இல்லை :-D ). இங்கு மேல் தளத்தில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் என்று அனைத்தும் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒரு வளாகத்தில் விரைவில் நம்ம ஊர் சரவண பவன் வரப்போகிறது :-)
CBP 14 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
கட்டிடம் வட்ட வடிவமாக முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி கண்ணாடியால் அமைப்பதில் ஒரு வசதி செலவு குறைவு.
CBP 3 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
இது மிகவும் பிரபலமான IBM நிறுவனத்தின் கட்டிடம்
CBP 15 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
பிரபலமான வங்கிகளில் ஒன்றான Standard Chartered வங்கியின் அலுவலகம்
CBP 6 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
இது ஒரு மென்பொருள் நிறுவனம்
CBP 19 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
இது தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம், கருப்பு கண்ணாடியால் அமைக்கப்பட்டு அட்டகாசமாக உள்ளது, இங்கு உள்ள கட்டிடங்களிலேயே வெளித்தோற்றத்தில் என்னை மிகவும் கவர்ந்த கட்டிடம். எனக்கு கருப்பு வண்ணம் ரொம்ப பிடிக்கும், அதனாலே இதன் மீது எனக்கு ஒரு கூடுதல் கவர்ச்சி. இதை அந்த வழியாக சென்றால் ரசிக்காமல் என்னால் செல்லவே முடியாது. இந்த இடுகையை எழுத முக்கிய காரணமே இந்த கட்டிடம் தான்.
CBP 1 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
இங்கு படம் எடுப்பதில் உள்ள பெரிய பிரச்சனை, கட்டிடங்கள் மிகவும் உயரமாகவும் நீளமாகவும் உள்ளது. கட்டிடங்கள் அருகருகே இருப்பதால் முழுவதையும் உள்ளடக்கி எடுக்க முடியவில்லை, நான் வைத்துள்ள புகைப்பட கருவியை விட இன்னும் தொழில்நுட்பம் அதிகம் உள்ள கருவியாக இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் :-( இதன் காரணமாக Citi Bank கட்டிடத்தை என்னால் முழுவதும் எடுக்க முடியவில்லை.
இங்கு குப்பையே போடமாட்டார்கள் என்று கூறமாட்டேன், இங்கேயும் (ஓரளவு) குப்பை போடுவார்கள் ஆனால் அதை சுத்தம் செய்து விடுவார்கள். சாலைகள் மிகவும் தரமானவையாக இருக்கும் (இங்கு மட்டுமல்ல சிங்கப்பூர் முழுவதும்), மழை பெய்து பார்த்தால் சாலையை காண கண்கொள்ள காட்சியாக இருக்கும். சுத்தமான சாலை மேலும் சுத்தமாக கழுவி விட்டது போல இருக்கும். இந்த படத்தில் ஒருவர் விடுமுறை நாளில் கருமமே கண்ணாக சுத்தம் செய்து கொண்டுள்ளார்.
CBP 8 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
சிங்கையில் மரங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், கிடைத்த கேப்ல எல்லாம் கிடாய் வெட்டுறதுன்னு நம்ம ஊருல சொல்ற மாதிரி கிடைத்த கேப்ல எல்லாம் இவங்க மரம் வைத்துடுவாங்க, அதுவும் சமீபமாக மரம் வைப்பதில் இவர்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் சரமாரியாக வைத்து என்னை போன்ற இயற்கை விரும்பிகளை திக்குமுக்காட வைக்கிறார்கள்.
CBP 17 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்
சென்னையில் உள்ள Trade Centre போல தொழில்நுட்ப பூங்கா அருகிலேயே மிகப்பெரிய Expo என்ற பொருட்காட்சி இடம் உள்ளது, இங்கு அடிக்கடி தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும்.
இங்கே IT Expo என்ற எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமாக பொருட்காட்சி அடிக்கடி நடக்கும், பொருட்கள் தள்ளுபடி விலையில் அனைவரும் வாங்குவார்கள் Laptop, Hard Disk, Camera, TV என்று இங்கு கிடைக்காத பொருட்களே இருக்காது. நம்ம ஊர் குருவிகள் இந்த சமயத்தில் அதிகளவில் பொருட்களை வாங்கி நம்ம ஊருக்கு எடுத்து செல்வார்கள். பொதுமக்களும் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள்.
CBP 21 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்

இது தொழிநுட்ப பூங்கா வருவதற்கான ரயில் நிலையம், இதனை ஒட்டித்தான் Expo உள்ளது. இங்கே இருந்து அதிகபட்சம் 10 நிமிட நடையில் தொழில்நுட்ப பூங்காவை அடைந்து விடலாம். இந்த ஏரியா முழுவதும் எந்த ஒரு குடியிருப்போ அல்லது கமர்சியல் கடைகளோ எதுவும் கிடையாது (ஒரு சில அனுமதி பெற்ற கடைகளை தவிர). அனாவசியமாக எந்த ஒரு போக்குவரத்தும் இருக்காது. தொழிநுட்ப பூங்கா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைத்து இருக்கிறார்கள்.
CBP 20 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்

தற்போது புதிதாக ஹோட்டல்கள் உட்பட மிகப்பெரிய வளாகம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, பொருளாதார மந்தம் காரணமாக வேலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் படத்தில் பார்ப்பது கட்டப்படப்போகும் வளாகத்தின் ஆரம்ப கட்ட பணிகள். ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் இது, பின்னணியில் தெரிவது நான் முன்பு கூறிய Signature Building.
CBP 22 சிங்கப்பூர் தொழில்நுட்ப பூங்கா! படங்கள்

இவை தவிர DHL மற்றும் பல நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளது, அவை கொஞ்சம் தள்ளி இருந்ததால் அவற்றை நான் புகைப்படம் எடுக்கவில்லை. மேலும் சில படங்கள் பார்க்க இங்கே செல்லவும்.

No comments:

Post a Comment