பேருந்து பயணம் என்பது மேல்தட்டு மக்களை தவிர அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். நண்பர் பிரவின் பேருந்து காதல் என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்து இருந்தார். எனக்கு வாழ்க்கையில் அது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதை ஒட்டி நடந்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.எல்லோருமே காதல் அல்லது காதல் என்கிற பெயரில் உள்ள இனக்கவர்ச்சியை தாண்டாமல் வரவே முடியாது. ஏதாவது ஒரு இடத்திலாவது எதிர்பாலினரிடம் கவரப்பட்டு இருப்போம். காதல் மனதை பார்த்து தான் வருகிறது என்று கூறினாலும் பெரும்பாலும் அது புற அழகில் தான் தொடங்குகிறது என்பது என் கருத்து, ரொம்ப சில விதிவிலக்காக இருக்கலாம். எனக்கு காதல் செய்ய ஆசை இருந்தாலும் அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை, பெரும்பாலனைவர்களை போல
ஒரு பக்க காதலாகவே!! இருந்து விட்டது.
பிஞ்சிலேயே பழுத்த மாதிரி நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஐந்தாம் வகுப்பு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்
கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா இருக்கா! என்ன பண்ணுறது நீங்க நம்பித்தான் ஆகணும். இது தான் என்னோட முதல் காதல் அந்த காதல் அந்த பொண்ணு!! ஆறாம் வகுப்பிற்கு உயர்நிலைப் பள்ளி சென்றவுடன் அதோட முடிந்து விட்டது
) என்ன கொடுமை சார்.
அதன் பிறகு உடுமலை பேட்டை அருகே உள்ள கரட்டு மடம் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில் நானே வம்படியா சென்று சேர்ந்து ஆப்பை வாங்கிக் கொண்டேன். அங்கே கொடுத்த தர்ம அடி காரணமாக நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்று என் அப்பாவிடம் கூறி இனி இங்கே என்னால் அடி வாங்கி முடியாது! ஊருக்கே அழைத்து சென்று விடுங்கள் என்று கூறியதால், வேறு வழியில்லாமல் எங்கள் ஊரிலேயே அதுவும் ஹாஸ்டலில் சேர்ந்தேன். 8 கிலோ மீட்டர்ல வீட்டை வைத்துட்டு ஹாஸ்டலில் படித்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். போன பிறவியில் என்ன பாவம் செய்தேனோ பொண்ணுகளே இல்லாத பள்ளியில் சேர வேண்டியதாகி விட்டது
இந்த வீணாப் போன பசங்களையே காலையில் இருந்து மாலை வரை பார்த்து தொலைக்க வேண்டியதாகி விட்டது
+2 முடித்த பிறகு சென்னையில் டிப்ளமோ படிக்க வந்து அங்கேயும் பொண்ணுகளே இல்லை.. என்னடா இது! விதி வலியது போல இருக்கே என்று அதையும் முடித்து… ஒரு வழியாக வேலையில் சேர்ந்தேன். இங்க தாங்க (அலுவலகத்தில் இல்லைங்க) என் வாழ்க்கையில் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.
பேருந்தில் போகும் போது சைட் அடிப்பதே ஒரு தனி ஜாலி தான் (பல சங்கடங்கள் இதில் இருக்கு அதெல்லாம் இப்போதைக்கு நம்ம கதைக்கு வேண்டாம் அதெல்லாம் செண்டிமெண்ட் பதிவுல பார்த்துக்கலாம்) அதுவும் சென்னை பெண்கள் பலர் செம ஃபிகர்ஸ். என்னோட பேருந்து வழி ஸ்டெல்லா மேரிஸ், எத்திராஜ் போன்ற பெண்கள் கல்லூரிகள் நிறைந்தது, இனி யாரும் இதைப்பற்றி விளக்கம் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்
நானும் வழக்கம் போல பசங்களோட குலத்தொழிலான சைட் அடிப்பதை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்த போது .. என் பேருந்து நிறுத்தம் தாண்டி இரண்டு நிறுத்தம் தள்ளி, எல்லா ஃபிகரையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு ஃபிகர் மின்னல் மாதிரி ஏற… யார்ரா இது! இப்படி ஒரு டக்கர் ஃபிகர் என்று ஒரு நிமிடம் தடுமாறி விட்டேன். இந்த இந்த இடத்துல தாங்க நான் ஸ்லிப் ஆகிட்டேன் அவ்வ்வ்வவ்.. அதுவரை எத்தனையோ பேரை பார்த்து இருக்கிறேன் சைட் அடித்து இருக்கிறேன் ஆனால் அதோட மறந்து விடுவேன். ஆனால் இந்தப்பொண்ணு எதோ பண்ணிடுச்சு, அதற்கு ஒரு முக்கிய காரணம் எந்த ஒரு எக்ஸ்ட்ரா பில்டப்பும் இல்லாததும் அதிகளவில் ஒப்பனை இல்லாததும் பொண்ணுக தற்போது வைக்க விரும்பாத பூ வைத்து இருந்ததும் கவர்ச்சியான கண்களும் தான், மற்றதும் இருக்கு அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். மொத்ததுல சரியான ஃபிகர்.
அலுவலகம் சென்றும் இதே நினைவாக இருந்தது, பிறகு அலுவலக வேலையில் மூழ்கியதில் அந்தப்பெண்ணை பற்றி மறந்து போனேன். மறுபடியும் அடுத்த நாள் காலையில் அலுவலகம் செல்ல பேருந்து ஏறிய போது திரும்ப நினைவு வந்தது.. சரி சரி எதோ நேற்று பார்த்தோம்… இன்னைக்குமா வரும்! என்று ஒரு நப்பாசையில் சென்று கொண்டு இருந்தேன்..என்னால் நம்பவே முடியவில்லை! அதே பெண் ..பிறகு தான் தெரிந்தது அந்தப் பெண் கல்லூரிக்கு இதே நேரத்தில் செல்கிறது என்று. நான் எப்போதும் Punctual ஆக இருப்பேன் இதனால் என் வேலையில் பயன் இருந்ததோ இல்லையோ! இதற்கு ரொம்ப உதவியாக இருந்தது.
உடை விசயத்தில் எனக்கு எப்போதும் ஆர்வம், நீட்டாக உடை அணிவது எனக்கு ரொம்ப பிடித்தமானது. என் நண்பர்கள் பலருக்கு நான் தான் காஸ்டியூம் டிசைனர். இந்தப்பெண் வேறு வருவதால் இன்னும் அதிகம் கவனம் எடுத்து உடை அணிவேன். அந்தப்பெண்ணுக்கு அபார உடை ரசனை. ஒவ்வொரு நாளும் அசத்தலாக உடை அணிந்து வருவார், ரொம்ப சிம்பிளாகத்தான் இருக்கும் ஆனால் கலக்கலாக இருக்கும். இதுவும் என்னை கவர ஒரு முக்கிய காரணம். சுமாரான ஃபிகரே சரியான உடை அணிந்தால் கலக்கலாக இருக்கும் சூப்பர் ஃபிகர் அப்படி அணிந்தால்… என்னமோ போங்க! என் மனசு என்கிட்டே இல்லை.
இப்படியே நானும் அந்தப்பெண்ணை சைட் அடித்துக்கொண்டு இருப்பது அந்தப்பெண்ணுக்கு தெரிந்து விட்டது. பொண்ணுக இதுல ஜெகஜால கில்லாடிக ஆச்சே! காலையில் அலுவலகம் செல்ல எழவே சிரமப்பட்டுக்கொண்டு இருந்த நான், இதன் பிறகு சுறுசுறுப்பாக தயார் ஆகி விடுவேன். ஒரு பெரிய கொடுமை நான் செல்கிற நேரம் இரண்டு பேருந்து ஒன்றாக வரும் சில சமயம் அந்தப்பெண் வேறு பேருந்தில் ஏறி விடும்..அப்ப வரும் பாருங்க கடுப்பு… அந்த ஓட்டுனரை மனசுக்குள் கண்டபடி திட்டி விடுவேன். ஏன்யா! வேணுங்கற நேரத்துல ஒருத்தரும் வர மாட்டீங்க வேண்டாத நேரத்துல இப்படி ஒட்டு மொத்தமா எல்லோரும் வந்து கழுத்த அறுக்கறீங்களே ! என்று புலம்புவேன். இந்த சனி ஞாயிறு ஏன்டா வருது என்று இருக்கும்.
ஒரு நாள் என் நண்பனிடம் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் பல கேள்விகள் கேட்டு கடைசியில் அது என்னோட நண்பனோட தங்கிச்சிடா! என்று கூறியதும் காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டேன். “கண்ணெதிரே தோன்றினாள்” பிரசாந்த் நிலைமை ஆகி விட்டது.. என்னடா! இது வம்பா போச்சு தங்கச்சினு வேற கூறி இப்படி சென்ட்டிமென்ட் குண்டை தூக்கி போட்டு விட்டானே! என்று குழம்பிய போது சரி! அவனுக்கு தானே நண்பன் எனக்கில்லையே அதனால் நாம தொடர்வோம் என்று என் மனதை தேத்திகொண்டேன்.
இப்படியே ஒரு வருடம் போச்சு! ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்குள் என் அலுவலக சூழ்நிலை காரணமாக வேலையில் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது, அதுவுமில்லாமல் அந்தப்பெண்ணின் கல்லூரி படிப்பும் முடிந்து விட்டது (இதெல்லாம் என் நண்பன் பிறகு கூறித் தெரியும்) எனக்கு இது அந்தப்பெண்ணின் மீதுள்ள இனக்கவர்ச்சி மட்டுமே! என்பது புரிந்தாலும் மனது கேட்கவில்லை. அறிவிற்கு தெரிவது மனதிற்கு தெரிவதில்லையே. அதன் பிறகு ஒரு முறை பேருந்திற்கு அந்தப்பெண் நிற்கும் போது பார்த்தேன் அதுவே கடைசியாக பார்த்தது. அதன் பிறகு பார்க்கவில்லை. அதன் பிறகு மூன்று வருடம் கழித்து அந்தப்பெண்ணிற்கு திருமணம் என்றும் என்னையும் திருமணத்திற்கு வரும்படி என் நண்பன் அழைத்தான்.. நான் தான் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று கூறி விட்டு செல்லாமல் இருந்து விட்டேன்.
எனக்கு குடும்ப பொறுப்புகள் அதிகம் இருந்ததால் என்னால் இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க முடியாது என்று எனக்கே தெரிந்தது. சரி இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று வடிவேலுக்கு முன்னாடியே ஒரு வசனத்தை நான் கூறி விட்டேன் அதுதாங்க “நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே!” என்று. காதல் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று கொஞ்ச நாள் (அல்ப) சந்தோசமாக இருந்த திருப்தியோடு காதலுக்கு!! மூடு விழா நடத்தி விட்டேன்.
இதுதாங்க என்னோட பேருந்து காதல்!!.. எல்லோருக்கும் இதைப்போல ஒரு சிறு அனுபவமாவது இருக்கும். சிலர் என்னைபோல் கூறுகிறார்கள் ஒரு சிலர் கூறுவதில்லை. நான் தான் முன்பே ஒரு பதிவில் கூறி இருந்தேனே எல்லோருக்கும் நல்லவனாக இருக்க விரும்பவில்லை என்று, அதனாலே என் கதை அல்ல நிஜத்தை கூறி விட்டேன்
கொசுறு
சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் கலக்கிய ஐஸ்லாந்து எரிமலை சீற்றங்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவை தொடர்பான அசத்தலான படங்களை பார்க்க இங்கே செல்லவும்.
No comments:
Post a Comment