
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் மஞ்சள், கிருமி நாசினியாகவும், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அரிய நாட்டு மருந்தாகவும் விளங்குவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! இந்நிலையில், மலேரிய காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணங்களும் மஞ்சளுக்கு உண்டு என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மஞ்சள் காயங்களை ஆற்றுவதற்கும், வலி நிவாரணியாகவும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலுள்ள குர்குமின் என்ற மாவுப்பொருள் மருத்துவ குணங்கள் கொண்டதாக ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று. ஆனால், மஞ்சளில் இடம் பெற்றுள்ள நானோ குர்குமின் எனப்படும் மிக நுண்ணிய துகள்கள், தற்போது மலேரியாவை கட்டுப்படுத்தும் என டில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, விஞ்ஞானி சந்தோஷ்குமார் கூறியதாவது:
நானோ குர்குமின், மலேரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது. தலைமுடியை விட 40,000 மடங்கு அளவில் சிறியதான நானோ குர்குமின் மஞ்சள் துகள், எலிகளுக்கு கொடுத்து சோதித்து பார்க்கப்பட்டது. இதில், மலேரியா காய்ச்சலை பரப்பும் ஒட்டுண்ணி கிருமிகளை அழிக்கும் சக்தி நானோ குர்குமின் துகள்களுக்கு இருப்பது தெரிந்தது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நானோ குர்குமின் சாறு, தொடர்ந்து 240 நிமிடங்களில் ரத்தத்தில் இருக்கும்பட்சத்தில், மலேரிய ஒட்டுண்ணி கிருமிகள் அழிக்கப்படுவது தெரிந்தது. இந்த கண்டுபிடிப்புக்கு சர்வதேச காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மலேரிய காய்ச்சலுக்காக கொடுக்கப்படும், குளோரோகுயினோன் மருந்தை போன்று இது செயல்பட்டு கிருமிகளை அழிப்பதும் தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு நானோ குர்குமினை மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு சந்தோஷ்குமார் தெரிவித்தார்.
இதனிடையே சாதாரண குர்குமின் துகள் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதா என்பது பற்றி, தனியாக ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வு பெங்களூரு இந்திய அறிவியல் (ஐ.ஐ.எஸ்.சி.,) கழகத்தின் முன்னாள் இயக்குனர் பத்மநாபன் மேற்பார்வையில் நடந்து வருகிறது. மலேரியா காய்ச்சலை மஞ்சளில் உள்ள குர்குமின் மாவுப்பொருள் குணப்படுத்தும் என, கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலில் கூறியவர் பத்மநாபன். அவர் கூறுகையில், “இந்த ஆய்வு முற்றிலும் வெற்றியடைவில்லை. ஆய்விற்கு <உட்படுத்தப்பட்ட மூன்றில் ஒரு பங்கு எலிகளை மட்டும் குர்குமின் குணப்படுத்தியது. எனவே குர்குமினுடன், அர்ட்டீத்தர் எனப்படும் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்தை சேர்த்து ஆய்வு நடத்தி வருகிறோம். இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும்’ என்றார்.
No comments:
Post a Comment